எக்சல் மண்டப மாவீரர்நாள் நிகழ்ச்சி நடக்காமல் தடுப்பதில் வெற்றிகண்ட குழு?

எக்சல் மண்டப மாவீரர்நாள் நிகழ்ச்சி நடக்காமல் தடுப்பதில் வெற்றிகண்ட குழு?

Published on November 19, 2011-7:29 pm    ·   No Comments

லண்டனில் விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம் ஏற்பாடு செய்த மாவீரர் நாள் நிகழ்ச்சியை  தடுக்கும் முயற்சியில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு (நெடியவன் குழு) வெற்றிபெற்றுள்ளது.
மாவீரர் நாளை யார் நடத்துவது என்ற போட்டியுடன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவுக்கும் விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகத்தினருக்கும் இடையிலான மோதல்கள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளன

விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம் முற்பதிவு செய்திருந்த லண்டன் எக்சல் மண்டபத்தில் அவர்கள் மாவீரர் நாளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தலைமைச்செயலகத்தினரை தாம் முறியடித்து விட்டதாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலத்தில் விடுதலைப்புலிகள் மாவீரர் தினத்தைக் கொண்டாட பயன்படுத்திய எக்சல் மண்டபத்தை இம்முறை தாம் பயன்படுத்த விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம்  திட்டமிட்டிருந்தது.  இதற்காக அக்குழுவினர் முன்பதிவையும் செய்திருந்தனர்.

மாவீரர் தினத்தை கொண்டாடுவதற்கு விடுதலைப்புலிகளின் இரு பிரிவினரும் இம்முறை போட்டி போட்டுக்கொண்டிருந்தனர். எக்சல் மண்டபத்தை பெறுவதன் மூலம் தலைமைச்செயலகக் குழு தனது செல்வாக்கை உயர்த்தலாம் என்றும் மாவீரர் தினக் கொண்டாட்டத்திற்கு
கூடுதல் சனத்தை திரட்டலாம் என்றும் எண்ணியிருந்தது.

இதனால் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சிறிய இடங்களில் மாவீரர் தினக் கொண்டாட்டத்தை வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானது.

இதை முறியடிக்கும் முயற்சியில் பல சூழ்ச்சியிலும் சதியிலும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஈடுபட்டிருந்தது. இந்த சதியில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வெற்றிபெற்று விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது

எக்சல் மண்டபத்தின் நிர்வாகம் அம்மண்டபத்தை தலைமைச்செயலகக் குழுவிற்கு வழங்குவதை ரத்துச்செய்ததுடன் அதற்காக வைக்கப்பட்ட 50,000 பவுண் முற்பணத்தையும் திருப்பிக் கொடுத்து விட்டது.

எனினும் விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம் வேறு ஒரு இடத்திலாவது மாவீரர்நாள் நிகழ்ச்சியை நடத்துவதற்கு முயற்சி செய்து வருகிறது.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரும் மாவீரர் தினத்தைக் கொண்டாடுவதற்காக ஹரோவில் பதிவு செய்த இடமும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மாவீரர் தினத்தை கொண்டாடுவதற்காக லண்டனில் ஐந்து இடங்களை பதிவு செய்திருந்தது. அவற்றில் சில முன்பதிவுகளும் ரத்துச்செய்யபட்டுள்ளன.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்பவர்கள் போர் நடந்த காலத்தில் விடுதலைப்புலிகளுக்கென மக்களிடம் பணம் சேகரித்துக்கொண்டிருந்தவர்கள் என்றும் அவர்கள்தான் பணபலம் கொண்டவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம் என்பவர்கள் வன்னியில் இறுதிவரை போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகள். வன்னியில் போரில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்திருக்கும் போராளிகளைக்கொண்டதே தலைமைச்செயலக குழுவினர்.

இவர்களில் உண்மையான விடுதலைப்புலிகள் யார் என்பதை தீர்மானிக்க முடியாத நிலையில் புலம்பெயர் தமிழர்கள் குழப்பி போய் உள்ளனர்.
ஞானச்செல்வன், லண்டன்

Leave a Reply

Your email address will not be published.