ஐ.நா.,வில் மன்மோகன் 24ம் தேதி உரை: இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்குமா

நியூயார்க்: “ஐ.நா., பொதுச் சபைக் கூட்டத்தில் இடம்பெறும், பிரதமர் மன்மோகன் சிங் பேச்சில், பயங்கரவாத ஒழிப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் ஆகியவை, முக்கிய இடம் வகிக்கும்’ என, இந்தியத் தூதர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில், இந்தாண்டுக்கான பொதுச் சபைக் கூட்டம், நேற்று துவங்கியது. இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மன்மோகன் சிங், இன்று டில்லியில் இருந்து புறப்படுகிறார்.ஐ.நா., சபையில் அவரது பேச்சு, 24ம் தேதி இடம் பெறுகிறது. பிரதமரின் வருகை குறித்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, ஐ.நா.,வுக்கான இந்தியத் தூதர் ஹர்தீப் சிங் புரி, “ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம், வறுமை ஒழிப்பு, பயங்கரவாத ஒழிப்பு ஆகியவை, பிரதமரின் பேச்சில் முக்கிய இடம் பெற உள்ளன’ என்றார். அதோடு, நேபாளப் பிரதமர் பாபுராம் பட்டாராய், ஜப்பான் பிரதமர் யோஷிஹிக்கோ நோடா மற்றும் இலங்கை அதிபர் ராஜபக்ஷே ஆகியோருடனும், பிரதமர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். எனினும், அமெரிக்க அதிபர் ஒபாமாவை, அவர் சந்திக்கப் போவதில்லை என, முன்பே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு, ஐ.நா., பொதுச் சபைக் கூட்ட விவாதத்தில், பாலஸ்தீன நாட்டுக்கான உறுப்பினர் அந்தஸ்து விவகாரம், முக்கிய இடம் பெறுகிறது. பல நாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவளித்து வரும் நிலையில், அமெரிக்காவும், இஸ்ரேலும் அதைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்நிலையில், பாலஸ்தீனத்தின் உறுப்பினர் கோரிக்கைக்கு, இந்தியா முழு ஆதரவளிப்பதாக, அந்நாட்டு அதிபர் மகமது அப்பாசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பிரதமர் உறுதியளித்துள்ளார். அக்கடிதத்தில், “பாலஸ்தீன மக்களின் நீண்டகால சட்டப்பூர்வ உரிமைகளை, இந்தியா எப்போதும் ஆதரித்து வந்துள்ளது. ஐ.நா., விவாதத்திலும் பாலஸ்தீனத்திற்கு, இந்தியா முழு ஆதரவளிக்கும் என உறுதியளிக்கிறேன்’ என்று மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், அமெரிக்க காங்., சபையின், 14 முக்கிய உறுப்பினர்கள், இன்று ஐ.நா., சபையில் பேச உள்ள அதிபர் ஒபாமா, இஸ்ரேலையே ஆதரிக்க வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளனர்

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.