ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பணி:காலிப் பணியிடங்கள் அதிகமானதால் போலீசார் திணறல்

posted in: தமிழ்நாடு | 0

ரயில்வே போலீஸ் காலிப் பணியிடங்கள் நான்காண்டுகளாக நிரப்பப்படாததால், 40 சதவீதம் இடங்கள் காலியாக உள்ளன.

இதனால், வேலைப்பளு அதிகமாகி, போலீசார் சிரமப்படுகின்றனர். ரயில்வே போலீஸ் உயரதிகாரிகள், மிக குறுகிய காலத்தில் பணியிட மாறுதல் பெற்று சென்று விடுவதால், காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு, ஆர்வம் காட்டுவதில்லை என்றும் போலீசார் குமுறுகின்றனர்.
தமிழக ரயில்வே போலீஸ் சென்னை மண்டலம், திருச்சி மண்டலம் என இரண்டு மண்டலங்களாக இயங்கி வருகின்றன. சென்னை மண்டல ரயில்வே போலீஸ் எல்லைக்குள், 19 நிலையங்களும், 8 அவுட் போஸ்ட் நிலையங்களும், திருச்சி மண்டலத்தில் ரயில்வே போலீஸ் எல்லைக்குள் 18 நிலையங்களும், 12 அவுட் போஸ்ட் நிலையங்களும் உள்ளன.
இவைகளில்,சென்னை மண்டலத்தில் 911 பேரும், திருச்சி மண்டலத்தில் 895 பேரும் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளாக, 40 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன.பஸ் போக்குவரத்தை விட, ரயில் போக்குவரத்து பாதுகாப்பானது என, பயணிகள் நினைப்பதால், ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. சென்னை எழும்பூர், சென்ட்ரலிலிருந்து இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், சென்னை புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள், தமிழகத்தில் முக்கிய நகரங்கள் இடையே இயக்கப்படும் பாசஞ்சர் ரயில்களில், தினசரி ஏழரை லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர்.
இத்துடன், ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே பட்ஜெட்டில், தமிழகத்திற்கு 12 ரயில்கள் வரை, புதிய ரயில்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. ரயில்களின் அதிகரிப்பு மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகரிப்புக்கு ஏற்ப, போதுமான பாதுகாப்பு வழங்குவதற்கு, தேவையான ரயில்வே போலீசார் நியமிக்கப்படவில்லை. காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால், வேலைப்பளு அதிகரிக்கிறது. எப்படியாவது சிட்டி போலீசிற்கு மாறிவிட வேண்டும் என்ற நினைப்பே, ரயில்வே போலீசாரிடம் மேலோங்கியுள்ளது.
இது குறித்து ரயில்வே போலீசார் சிலர் கூறியதாவது:தமிழகத்தில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோவை, சேலம், ஈரோடு, அரக்கோணம், ஜோலார்பேட்டை நிலையங்கள் முக்கிய நிலையங்களாக உள்ளன.இந்நிலையங்கள் வழியாக, அதிகமான ரயில் போக்குவரத்து உள்ளன. இந்நிலையங்கள் அனைத்திலும், 40 சதவீத போலீஸ் பற்றாக்குறை உள்ளது. இதே நிலையே, மற்ற நிலையங்களிலும் உள்ளன.ஏதும் அசம்பாவிதம் நடந்தால் அப்போது மட்டும், தேவையான இடங்களுக்கு, சிறப்பு காவல் படையினர் மற்றும் அதிரடிப்படை போலீசாரை அழைத்து கொள்வதும், அவர்களை சில நாட்களில் அனுப்பிவிடும் நிலையும் வழக்கமாக உள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் சென்னை மூர்மார்க்கெட் புறநகர் மின்சார ரயில் நிலையம் ஆகியவற்றின் வழியாக, தினசரி நான்கரை லட்சம் பேர் ரயில்களில் பயணம் செய்கின்றனர். சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு 180 போலீசார் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். 131 பேர் பணியிடங்களே உள்ளன. இதிலும், 65 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். பணி தொடர்பான வெளி வேலைகளுக்கு, 20 பேர் சென்று விடுகின்றனர். மீதமுள்ள 45 பேரை வைத்துக் கொண்டு, முழுப் பாதுகாப்பு வழங்க அதிகாரிகள் திண்டாடும் நிலை உள்ளது.எழும்பூர் ரயில் நிலையத்தில், 101 பேர் இருக்க வேண்டும். 40 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களில் நிலையம் தொடர்பான வெளிப் பணிகளுக்கு, 10 பேர் வரை சென்று விடுகின்றனர். மீதமுள்ள 30 பேரை வைத்து முழு பாதுகாப்பு வழங்க திணறும் நிலை உள்ளது. தாம்பரத்திலும் இதே நிலை உள்ளது.
ரயில்வே போலீஸ் உயரதிகாரிகள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவதால், அவர்கள் இருக்கும் குறுகிய காலத்திற்குள், புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முயல்வதில்லை. காலிப் பணியிடங்கள் நிரப்புவதிலும் அவ்வளவாக கவனம் செலுத்துவதில்லை. இந்தியாவில் எங்கு குண்டு வெடித்தாலும், உடனடியாக சென்னை சென்ட்ரல், எழும்பூர் உட்பட முக்கிய நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உத்தரவிடப்படுகிறது. ஆனால், போலீஸ் பற்றாக்குறை பற்றி கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் தாமதம் காட்டி வருவதால், ரயில்வே போலீசாரின் வேலைப் பளு அதிகரித்துள்ளது. காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். உயரதிகாரிகள் இதற்கு ஆவன செய்ய வேண்டும். அப்போது தான், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில், முழுவதுமான பாதுகாப்புப் பணியை சிரமமின்றி செய்யலாம்.இவ்வாறு போலீசார் கூறினர்.
பழைய கட்டடங்களில் நிலையங்கள்:ரயில்வே போலீஸ் நிலையங்கள், நிறைய இடங்களில் பழமையான கட்டடங்களில் தான் இயங்கி வருகின்றன. போதிய இடவசதி, இருக்கை வசதி, சுகாதார வசதி இல்லை. பெரிய நிலையமான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் கீழ் பகுதியில், தனியார் ஓட்டல் ஒன்றின் சமையல் பிரிவு உள்ளதால், கட்டடத்தில் உஷ்ணம் அதிகமாகி, வியர்வையில் குளிக்க வேண்டியுள்ளது. இதை பல முறை உயரதிகாரிகளுக்கு தெரிவித்தும் நிலையம் இடமாற்றம் செய்யப்படவில்லை. தமிழக சட்டம் ஒழங்கு போலீசில் உள்ள வசதிகள், ரயில்வே போலீஸ் நிலையங்களில் இல்லை. ரயில்வேயில் ஒயர்லஸ் மைக் மூலம் 5 கி.மீ., தூரத்திற்கு மேல் தொடர்பு கொள்ள முடியவில்லை. குறைந்தது 60 கி.மீ., தூரம் வரையாவது தகவல் தொடர்புக்கு நவீன வசதி செய்யப்பட வேண்டும்.
கொருக்குப்பேட்டை -ஆரப்பாளையம் இடையேரயில்வே போலீஸ் நிலையங்கள் இல்லை
கொருக்குப்பேட்டை – ஆரப்பாளையம் வரை ரயில்வே போலீஸ் நிலையம் இல்லை. இந்த இடைப்பட்ட பகுதியில் ரயில் விபத்துகள் நடந்தாலும், ரயிலில் அடிபட்டு யாரும் இறந்தாலும், ரயிலில் பயணிகளால் பிரச்னை என்றாலும், கொருக்குப்பேட்டையில் உள்ள ரயில்வே போலீஸ் அவுட் போஸ்ட் நிலையத்திலிருந்து தான் போலீசார் சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. பொன்னேரி, கும்மிடிப்பூண்டி நிலையங்களில் ரயில்வே போலீஸ் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். தகவல் தொடர்பு வசதிகளும் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் போலீசாரும், அப்பகுதி பொதுமக்களும் கூறுகின்றனர்.
– நமது சிறப்பு நிருபர் –

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.