போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா? : முதல்வர் விளக்கம்

posted in: தமிழ்நாடு | 0

சென்னை: “”பரமக்குடி விவகாரம் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள விசாரணைக் கமிஷன், யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறதோ, அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இது குறித்து, சட்டசபையில் முதல்வர் பேசியதாவது: சில நாட்கள் முன், பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் உயிரிழந்தனர். இது குறித்து, இந்த அரசும் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளது. உயிரிழந்தவர்களுக்கு இரங்கலும், அவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலும் தெரிவிக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்து, முழுமையாக விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்து அறிவித்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கனவே வழங்கிய ஒரு லட்சம் ரூபாய் போதாது; அதை உயர்த்தி வழங்க வேண்டும் என்று, இப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்கின்றனர். ஏற்கனவே வழங்கப்பட்ட தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமெனில், இனி விசாரணைக் கமிஷன் தான் பரிந்துரை செய்ய வேண்டும். “இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்’ என்று, விசாரணைக் கமிஷன் பரிந்துரை செய்தால், அதை தமிழக அரசு அமல்படுத்தும். சில போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். நான் முதலில் டி.ஆர்.ஓ., தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்றேன். டி.ஆர்.ஓ., விசாரணை என்றால், விரைவாக அரசுக்கு அறிக்கை கிடைக்கும். ஆனால், அதை ஏற்காமல், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தான் விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்று, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். அதை ஏற்றுத்தான், விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்ட பின், அரசு தன்னிச்சையாக எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? விசாரணைக் கமிஷனுக்கு தலைமை தாங்கும் நீதிபதி, முழுமையாக விசாரணை நடத்தி, யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகிறாரோ, அவர்கள் மீது தமிழக அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.