இலவச திட்டங்கள் தொடக்க விழா 15-ந் தேதி நடக்கிறது: ஜெயலலிதா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்காக பிரமாண்ட பந்தல்

posted in: தமிழ்நாடு | 0

முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையில், இலவச கிரைண்டர், மிக்சி, மின்விசிறி, மாணவர்களுக்கு லேப்டாப், விவசாயிகளுக்கு ஆடு, மாடுகள் வழங்கப்போவதாக அறிவித்திருந்தார்.

இதுகுறித்து சமீபத்தில் அவர் கூறுகையில், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 15-ந் தேதி முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நலத்திட்டங்கள் தொடக்க விழா வருகிற 15-ந் தேதி திருவள்ளூரில் நடக்கிறது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

இதையட்டி, திருவள்ளூர்-காக்களூர் சாலையில் உள்ள பள்ளி விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விழா மேடை அமைப்பு பணிகளை திருவள்ளூர் எம்.எல்.ஏ.வும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான பி.வி.ரமணா திருவள்ளூரில் தங்கியிருந்து நேரில் பார்வையிட்டு வருகிறார்.

மேலும், நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், வேளாண்துறை அமைச்சர் செங்கோட்டையன், சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் சம்பத் மற்றும் காவல்துறை வடக்கு மண்டல ஐ.ஜி சைலேந்திரபாபு, காஞ்சிபுரம் சரக துணைத்தலைவர் திருஞானம், திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு வனிதா மற்றும் உயர் அதிகாரிகள் அந்த பகுதியை பார்வையிட்டனர்.

முதல்-அமைச்சர் வருகை தரும் ஹெலிகாப்டர் இறங்குவதற்காக விழா மேடைக்கு அருகில் ஹெலிபேட் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. ஹெலிகாப்டரில் இருந்து இறங்கும் முதல்வர் விழா மேடைக்கு செல்லும் வழியில் சிமெண்ட் சாலையும் போடப்பட்டு வருகிறது.

விழாவிற்கு வருகை தரும் வி.ஐ.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுடைய வாகனங்கள் அனைத்தும் காக்களூர் தொழிற்பேட்டைக்கு அருகில் நிறுத்தி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், திருவள்ளூருக்கு அனைத்து பகுதிகளில் இருந்தும் வருகை தரும் கட்சியினரின் வாகனங்களை நகர எல்லைகளில் நிறுத்தி வைப்பதற்கான இடங்களும் தயார் செய்யப்பட்டுள்ளன.

மணிமாறன் எம்.எல்.ஏ., திருவள்ளூர் ஒன்றிய செயலாளர் புட்லூர் சந்திரசேகர் உள்பட கட்சி நிர்வாகிகள் அந்த பகுதியில் முகாமிட்டு பணிகளை பார்வையிட்டு வருகின்றனர்.

Source & Thanks : .maalaimalar

Leave a Reply

Your email address will not be published.