அரிசியை கொடுத்து ஆயுதங்கள் இறக்குமதி : மியான்மர் “டீல்’ வெளியிட்டது விக்கிலீக்ஸ்

பாங்காக்: மியான்மர் அரசு, வட கொரியாவுக்கு அரிசி ஏற்றுமதி செய்து விட்டு, அதற்கு ஈடாக ஆயுதங்கள் பெற்றதாக, “விக்கிலீக்ஸ்’ ரகசிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

“விக்கிலீக்ஸ்’ இணையதளம், சமீபத்தில் தன்வசம் இருந்த இரண்டரை லட்சம் அமெரிக்க வெளியுறவு ரகசிய ஆவணங்களை வெளியிட்டது. அவற்றில், கடந்த 2009 ஜூலையில், மியான்மரின் யாங்கூன் நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இருந்து வாஷிங்டனுக்கு அனுப்பப்பட்ட செய்தி ஒன்றில் கூறப்பட்டிருந்ததாவது: மியான்மர் ராணுவ அரசு, தனக்குச் சொந்தமான “மியான்மர் எகனாமிக் ஹோல்டிங்ஸ்’ நிறுவனம் மூலம், 20 ஆயிரம் டன் அரிசியை வடகொரியாவுக்கு ஏற்றுமதி செய்தது. அரிசி தவிர, விவசாயப் பொருட்களையும் வடகொரியாவுக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளாக மியான்மர் ஏற்றுமதி செய்து வருகிறது. ஏற்றுமதி செய்யப்படும் அரிசிக்கு ஈடாக, வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை மியான்மர் இறக்குமதி செய்து கொள்கிறது. இவ்வாறு அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்தாண்டில்,”விக்கிலீக்ஸ்’ வெளியிட்ட ரகசிய ஆவணங்களின்படி, மியான்மர் பல ஆண்டுகளாக , அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதாக அமெரிக்கா சந்தேகம் கொண்டிருந்தது. மேலும், ஐ.நா., வெளியிட்ட அறிக்கையின்படி, ஈரான், சிரியா மற்றும் மியான்மருக்கு, வடகொரியா அணு ஆயுத ஏவுகணைகளை வழங்க தடை விதிக்கப்பட்டது. வடகொரியா உடனான அணு ஆயுதப் பரிமாற்றம் பற்றிய தகவலை மியான்மர் ஏற்கனவே மறுத்து விட்டது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.