தென்மண்டல அமைப்பு கலைப்பு – ஸ்டாலின் : பொதுக்குழுவுக்கு வரமாட்டோம் – அழகிரி

posted in: தமிழ்நாடு | 0

சென்னை: தலைமைக்கு இணையாக உள்ள தென் மண்டல அமைப்பைக் கலைக்க வேண்டும் என, ஸ்டாலின் ஆதரவாளர்கள் குரல் கொடுக்க துவங்கியுள்ளனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கோவையில் நடக்கும் பொதுக்குழுக் கூட்டத்துக்கு வரமாட்டோம் என அழகிரியும், அவரது ஆதரவாளர்களும் கட்சித் தலைமைக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.
நில அபகரிப்பு வழக்கில் போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து, தி.மு.க., முன்னாள் அமைச்சர்களும், நிர்வாகிகளும் தலைமறைவாகி வருவதும், கட்சியில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில், ஸ்டாலின், அழகிரி இடையே நடக்கும் மோதலும், தி.மு.க.,வில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. கோவையில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் பொதுக்குழு நாளை துவங்க உள்ள நிலையில், கட்சியில் நிலவும் இந்த மோதல், பெரும் நெருக்கடியை, தி.மு.க., தலைமைக்கு ஏற்படுத்தி உள்ளது.

கட்சியை சீரமைப்பதற்கு, மாவட்டச் செயலர்களை நீக்கிவிட்டு, லோக்சபா தொகுதிகள் அடிப்படையில் பொறுப்பாளர்களை நியமிக்க அறிவித்துள்ளதற்கு, கட்சியில் வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த சீரமைப்பை, ஸ்டாலின் ஏற்கவில்லை.

தற்போது உள்ள மாவட்டச் செயலர்கள் மற்றும் நிர்வாகிகளில், 90 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள், ஸ்டாலின் ஆதரவாளர்கள். “இந்த ஆதரவைக் கொண்டு, கட்சி அதிகாரத்தை பிடிக்க ஸ்டாலின் முயற்சிக்கிறார்’ என, அழகிரியும், அவரது ஆதரவாளர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
“கட்சியின் செயல் தலைவர் பதவியை ஸ்டாலினுக்கு அளித்து, கட்சிக் கட்டுப்பாட்டை அவரிடம் அளிக்க வேண்டும். தலைவர் கருணாநிதி, வழிகாட்டும் பணியைச் செய்ய வேண்டும். இதற்கு, பொதுக்குழுவில் முடிவெடுக்க வேண்டும்’ என, ஸ்டாலின் ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர். பொதுக்குழுவில், ஸ்டாலின் தன் ஆதரவாளர்களைக் கொண்டு, கருணாநிதிக்கு நெருக்கடி அளித்து, தன் விருப்பத்தை சாதித்து விடுவார் என அழகிரி ஆதரவாளர்கள் அஞ்சுகின்றனர். இதனால், ஸ்டாலினுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பொதுக்குழுவில், எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என, கருணாநிதிக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். “பொதுக்குழுவுக்கு போக வேண்டாம்’ என, அழகிரியிடம் அவர்கள் கூறுகின்றனர். அழகிரியும், கட்சித் தலைமையை மிரட்டும் வகையில், “பொதுக்குழுவுக்கு வரமாட்டேன்’ என, கூறியுள்ளதாக தெரிகிறது.

மூத்த தலைவர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களில் பலர், ஸ்டாலினுக்கு ஆதரவாகவும், அழகிரிக்கு எதிராகவும் பேச தயாராகி விட்டனர். “கட்சியின் மாநிலத் தலைமைக்கு இணையாக, தென் மண்டல அமைப்பு எதற்கு? தென் மண்டலத்தைப் போல, மாநிலத்தின் பிற மண்டலங்களில், இதுபோன்ற அமைப்புகள் இல்லாத நிலையில், தென் மண்டல அமைப்பைக் கலைக்க வேண்டும்’ எனக் கூறுகின்றனர்.

கனிமொழி மற்றும் குடும்பத்தினரின் ஆதரவையும் அழகிரி திரட்டுவதாக கூறப்படுகிறது. ஸ்டாலின், அழகிரி இடையேயான மோதல் உச்சக்கட்டத்துக்கு சென்றுள்ளது. இதனால், கோவையில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழு தள்ளிவைக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.