முதல் மூன்று இடங்களையும் பிடித்து தனியார் பள்ளிகள் சாதனை

posted in: தமிழ்நாடு | 0

நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில், மாநில அளவிலான, முதல் மூன்று இடங்களையும், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பிடித்து சாதனை படைத்துள்ளன.

அரசு பள்ளியோ, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இருந்து ஒரு மாணவர் கூட, மாநில அளவிலான இடத்தை பிடிக்கவில்லை. இதன்மூலம், “தரமான கல்வியை வழங்குவது தனியார் பள்ளிகளே என்ற வாதம்’ எடுபட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள, 50 ஆயிரம் பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2 வரை, ஒரு கோடி மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில், 75 லட்சம் பேர், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கின்றனர். 25 லட்சம் பேர், தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர்.பெரும்பான்மை மாணவர்கள், அரசு பாடத்திட்டத்தின் கீழ், கல்வி பயின்றாலும், கல்வித் தரத்தில், அரசு பள்ளிகளை விட, தனியார் பள்ளிகள், குறிப்பாக, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சிறந்து விளங்குகின்றன. இதனால், பொதுத்தேர்வுகளில், தனியார் பள்ளி மாணவர்கள், அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனர்.பொறியியல் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளிலும், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கே அதிகளவில் இடம் கிடைக்கின்றன. இவற்றின் அடிப்படையில், தனியார் பள்ளிகள் மட்டுமே தரமான கல்வியை வழங்கி வருகின்றன என்றும், தனியார் பள்ளிகளின் பாடத்திட்டம் தான் தரமான பாடத்திட்டம் என்றும், தனியார் பள்ளி சங்க நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

இவர்களின் வாதத்திற்கு தகுந்தாற்போல், ஒவ்வொரு ஆண்டு பொதுத் தேர்விலும், தனியார் பள்ளி மாணவர்கள் சாதித்து வருகின்றனர். நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில், மாநில அளவிலான மூன்று இடங்களையும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களே தட்டிச் சென்றுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சேர்ந்த ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, மாநில அளவில் முதல் இடத்தையும், மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. மீதமுள்ள நான்கு இடங்களையும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளே பிடித்துள்ளன. பெரும்பான்மை மாணவர்கள் பயிலும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இருந்து, ஒரு மாணவர் கூட, மாநில அளவில் மதிப்பெண் பெறவில்லை.

காரணம் என்ன?போதுமான உள் கட்டமைப்பு வசதிகள், தகுதியான ஆசிரியர்கள் மற்றும் கண்டிப்பான நிர்வாகம் ஆகிய மூன்றும், தனியார் பள்ளிகளில் தரமான கல்வியை அளிப்பதில், முக்கிய பங்கு வகிக்கின்றன. மற்றொரு காரணமும், முக்கியமானதாக இருக்கிறது.தனியார் பள்ளிகளில், அனைத்து மாணவர்களையும் சேர்த்துக் கொள்வதில்லை. பெற்றோரின் கல்வியைப் பார்த்தும், புத்திசாலித்தனமான குழந்தைகளாக இருக்கின்றனரா என்பதைப் பார்த்தும், தனியார் பள்ளிகள் சேர்க்கின்றன.படித்த பெற்றோர், வீட்டில் மாணவர்களுக்கு கற்றுத் தருகின்றனர். மேலும், படித்த குடும்பங்களில் இருந்து வரும் குழந்தைகள், பெரும்பாலும் நன்றாகவே படிப்பர். இப்படி, அடிப்படையிலேயே திறமையாக இருக்கும் மாணவர்களை மேலும் மெருகேற்றி, அதிக மதிப்பெண் வாங்கக் கூடிய வேலைகளை, தனியார் பள்ளிகள் செய்கின்றன.தனியார் பள்ளிகள் சாதிப்பதற்கு, இது ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆனால், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளால், இதுபோன்ற சாதனைகளை செய்ய முடியவில்லை.

இது குறித்து, கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், எவ்வித அளவுகோலையும் பார்க்காமல், மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். 10ம் வகுப்பில் தோல்வியடைந்து, மூன்று, நான்கு முறை எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களும், அரசு பள்ளிகளில் பிளஸ் 1 சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இதுபோன்ற மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகளில் இடம் கிடையாது.முதல் வகுப்பில் சேர்க்கும் போதும், தனியார் பள்ளிகளைப் போல் தேர்வு வைத்து எடுப்பது கிடையாது. இப்படி, ஒவ்வொரு நிலையிலும், திறன் அடிப்படையில் மாணவர்கள் பிரிக்கப்படுவதால், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், மாநில அளவில் பெரும்பாலும் சாதிக்க முடிவதில்லை.எனினும், முன்பை விட, தற்போது தேர்ச்சியிலும், அதிக மதிப்பெண்கள் பெறுவதிலும், அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகள், கணிசமான வளர்ச்சியை பெற்றுள்ளன.இவ்வாறு கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.