ஆயுதமின்றி வெறுங்கையுடன் இருந்த ஒசாமா பின்லாடன் : அதிரடிப்படை நடவடிக்கை குறித்து பரபரப்பு தகவல்

வாஷிங்டன் : “ஒசாமா பின்லாடனுடன் சண்டை நடந்தபோது, அவர் கையில் ஆயுதம் எதுவும் வைத்திருக்கவில்லை’ என, அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை, உலகம் முழுவதும் பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

இதனால், ஒசாமா மீதான தாக்குதல் குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஒசாமா பின்லாடனுடன் நடந்த சண்டை குறித்து, அமெரிக்க உயர் அதிகாரிகள், பல்வேறு முரண்பட்ட கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஒசாமாவிடம் ஆயுதம் இருந்ததா: வெள்ளை மாளிகை ஊடகச் செயலர் ஜே கார்னே நேற்று பேட்டியளித்த போது, “பின்லாடன் சுடப்பட்டு கொல்லப்பட்டார்; அவர் கையில் ஆயுதம் எதுவும் இல்லை’ என்றார். ஆனால், நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய, அதிபர் ஒபாமாவின் பயங்கரவாத எதிர்ப்பு ஆலோசகர் ஜான் பிரன்னன், “”பின்லாடன் தன்னை எதிர்த்தவர்களுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டார்,” என கூறியிருந்தார்.

உயிருடன் ஏன் பிடிக்கவில்லை: ஒசாமா ஆயுதத்துடன் இல்லை என்றால், அவரை உயிருடன் பிடித்திருக்கலாமே என்ற கேள்விக்கு விடையளித்த கார்னே, “அவரிடம் ஆயுதம் இல்லை என்பதாலேயே அவர் சரணடையத் தயார் நிலையில் இருந்தார் என்று அர்த்தமில்லை. அதோடு, அந்த வீட்டில் இருந்தவர்கள், தற்கொலை குண்டுகளை தங்கள் உடம்பில் கட்டியிருந்தனரா என்பது அமெரிக்க வீரர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை’ என்றார்.
இந்தக் கேள்வி எழுப்பப்படுவதற்கு முன்னரே, நேற்று முன்தினம் பேட்டியளித்த ஜான் பிரன்னன் கூறியதாவது: ஒசாமாவிற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடப் போகும் வீரர்களின் உயிர் பாதுகாக்கப்பட வேண்டுமென, அதிபர் ஒபாமா வலியுறுத்தினார். அதனால், ஒசாமாவோ, அவரது பாதுகாவலர்களோ திருப்பித் தாக்குவதற்கான அவகாசத்தை அமெரிக்க வீரர்கள் கொடுக்கவில்லை. சரண் அடையத் தயாராக இருப்பதாக ஒசாமா கூறியிருந்தால், கைகளைத் தூக்கியிருந்தால், அவர் எந்த அச்சுறுத்தலையும் செய்யாமல் இருந்திருந்தால் அதற்கான ஏற்பாடுகளையும் வீரர்கள் செய்திருப்பர். இவ்வாறு பிரன்னன் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் பேட்டியளித்த சி.ஐ.ஏ., இயக்குனர் லியோன் பனெட்டாவும், “”ஒசாமாவை சுட்டுக் கொல்லும்படியாகத்தான் வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இருந்தாலும், ஒசாமா கைகளைத் தூக்கி தன்னை கைது செய்யும்படி கோரியிருந்தால், அவர் கைது செய்யப்பட்டு இருந்திருப்பார்,” என்றார்.

ஒசாமாவின் மனைவி யார்: “ஒசாமா தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக, தன்னுடன் இருந்த ஒரு பெண்ணை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினார். துப்பாக்கிச் சண்டையில் அப்பெண் இறந்தார். அவர், ஒசாமாவின் மனைவியாகக் கூட இருக்கலாம்’ என்றும் பிரன்னன் தெரிவித்திருந்தார். நேற்று வெளியான தகவல்களின்படி, “இறந்தவர் ஒசாமாவின் மனைவி அல்ல; காயம்பட்டு, பாக்., ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் தான் ஒசாமாவின் மனைவி. இறந்தவர், மனிதக் கேடயமாகப் பயன்படுத்தப்படவில்லை; ஒசாமா இறந்தது மூன்றாவது தளத்தில்; அந்தப் பெண் கொல்லப்பட்டது இரண்டாவது தளத்தில்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “ஒசாமாவிற்கு எதிரான நடவடிக்கை வீர தீரமான செயல். இதை உலகத்திற்கு மிக விரிவாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற உயர் அதிகாரிகளின் ஆர்வக் கோளாறு தான், சில முரண்பட்ட தகவல்கள் வருவதற்கு காரணம்’ என்றும் அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஐ.நா., கேள்வி: ஐ.நா., மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் நவி பிள்ளை, “உலகில் மிக ஆபத்தானவராகக் கருதப்பட்டவர் ஒசாமா பின்லாடன். அவருக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் சட்டப்பூர்வமாகவே செய்யப்பட்டிருக்க வேண்டும்’ என்றார். ஒசாமா கொல்லப்பட்டதில் உள்ள முழு விவரங்களையும் அமெரிக்க அரசிடம் அவர் கேட்டுள்ளார். மேற்கு ஜெர்மனியின் முன்னாள் அதிபர் ஹெல்மட் ஷ்மிட், “இது சர்வதேச சட்டத்தை மீறிய செயல்பாடு. ஏற்கனவே மக்கள் எழுச்சியால் கொந்தளிப்பில் இருக்கும் அரபு நாடுகளில் இது கணக்கிட இயலாத பல விளைவுகளை ஏற்படுத்தும்’ என, தெரிவித்துள்ளார். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் செயல்பட்டு வரும் மனித உரிமை அமைப்புகள் தற்போது இதுகுறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன.

Source & Thanks : dinamalar

 1. Nalliah Thayabharan

  பின்லேடனின் மரணத்தை அறிவிக்கையில் ஜனாதிபதி பராக் ஒபாமா “நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக’ வலியுறுத்தினார்.

  ஒரு கடற்படை அதிரடி குழுவால் நடத்தப்பட்ட அவரின் படுகொலை துளியும் கூட நீதியோடு சம்பந்தப்பட்டதல்ல.

  அல்ஹைடா, அமெரிக்க உளவுத்துறையின் நிதியுதவி மற்றும் ஆயுத உதவியுடன்தான் ஸ்தாபிக்கப்பட்டது.

  ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் பின்வாங்கிய பின்னர் பொஸ்னியாவிலும் கொசோவாவிலும் நிகழ்ந்த யுத்தங்களில் அமெரிக்க இராணுவ உளவுப்பிரிவின் உடைமைகளாக பின்லேடனும், அல்ஹைடாவும் உதவினர்.

  அமெரிக்க வெளியுறவுத்துறை கொள்கையில் அடிக்கடி நிகழும், இன்றைய கூட்டாளி நாளைய எதிரியாகிறான் என்பதைப் போலவே சோவியத் ஒன்றியத்திற்கு குழிபறிக்க ஒரு கருவியாக வாஷிங்டனால் தூண்டிவிடப்பட்ட இஸ்லாமிய கிளர்ச்சி, இறுதியில் மத்தியகிழக்கிலும் குறிப்பாக சவூதி அரேபியாவிலும் அதிகரித்துவரும் அமெரிக்காவின் இருப்பிற்கு விரோதமாக மாறியது. கொல்லப்பட வேண்டிய அமெரிக்காவின் எதிரியாக சித்திரிக்கப்பட்ட பின்லேடனுக்கும் அமெரிக்க உளவுப்பிரிவுக்கும் இருந்த இந்த நீண்டகால நெருக்கமான உறவின் வரலாறு, ஊடகங்களால் மூடிமறைக்கப்பட்டது.

  செப்ய்டம்பர் 11, 2001இல் நிகழ்ந்த பரிதாபகரமான சம்பவங்களுக்கு குற்றஞ்சாட்டப்பட்ட 9/11 விமானக்கடத்தல்காரர்களில் யாருமே ஆப்கானிஸ்தானில் இருந்தோ அல்லது ஈராக்கில் இருந்தோ வரவில்லை.

  நல்லையா தயாபரன்

Leave a Reply

Your email address will not be published.