சட்டசபை தேர்தலுக்கு பின் பெட்ரோல் விலை உயரும்?

புதுடில்லி: மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் முடிந்தவுடன், டீசல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதே அளவுக்கு பெட்ரோல் விலையும் உயரலாம் என, அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தமிழகம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் முடிந்து விட்டது. மேற்குவங்கத்தில் மட்டும் வரும் 10ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த தேர்தல் நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படலாம் என, ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இதை மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவரும் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து, டில்லியில் அந்த உயர் அதிகாரி கூறியதாவது: மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், வரும் 11ம் தேதி, டில்லியில் கூடும் அமைச்சர்கள் குழு கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து முடிவு எடுக்கப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியாகும், மே 13ம் தேதிக்கு முன்னரே, விலையை உயர்த்த அனுமதி பெறுவது தொடர்பாக, தேர்தல் கமிஷனை பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் சந்தித்துப் பேசினர். இதற்கு, தேர்தல் கமிஷன் அனுமதி அளிக்கும் என, நம்பப்படுகிறது. அப்படி அனுமதி அளித்தால் டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்படும். பெட்ரோல் விலையிலும் அதே அளவுக்கு மாற்றம் இருக்கும். தற்போதைய விலையில் டீசல், சமையல் காஸ் மற்றும் கெரசின் வழங்குவது தொடர்ந்தால், அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றுக்கு நடப்பு நிதியாண்டில் (2011-2012), 1.80 லட்சம் கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்படும் என, ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

பெட்ரோல், டீசல் விலையுடன் சமையல் காஸ் விலையும் உயர்த்தப்படலாம். எண்ணெய் நிறுவனங்கள் எந்தளவிற்கு நஷ்டத்தை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கின்றனவோ, அதைப் பொறுத்து விலை நிர்ணயிக்கப்படும். அமைச்சர்கள் கூட்டத்தில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும். கடந்த நிதியாண்டில், மூன்று எண்ணெய் நிறுவனங்களும் 78 ஆயிரத்து 202 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளன. இதில், இழப்பீட்டு தொகையாக, மத்திய அரசு 20 ஆயிரத்து 911 கோடி ரூபாய் மட்டுமே வழங்கியது. இவ்வாறு உயர் அதிகாரி கூறினார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.