96 பந்துகளில் 15 சிக்ஸ், 14 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 185 ரன் குவித்த வாட்சன்

டாக்கா: வங்கதேச பந்து வீச்சை நையப்புடைத்த ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் ஷான் வாட்சன், 96 பந்துகளை மட்டுமே சந்தித்து 185 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 15 சிக்ஸர்களும், 15 பவுண்டரிகளும் அடக்கம்.

ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஆஸ்திரேலிய வீரர் எடுத்த அதிகபட்ச தனி நபர் ஸ்கோர் இதுதான். மேலும், இப்போட்டியில் வங்கதேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா துவைத்து எடுத்து காயப்போட்டு விட்டது.

ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் ஏற்கனவே வென்று விட்ட ஆஸ்திரேலியா இன்று 2வது போட்டியில் மோதியது.

இப்போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம், 229 ரன்களை எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா, வங்கதேசப் பந்து வீச்சை ஊதித் தள்ளி 26 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது.

ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் வாட்சன் அதி பயங்கரமாக ஆடி வங்கதேசத்தை நடுநடுங்க வைத்து விட்டார்.

96 பந்துகளை மட்டுமே சந்தித்த வாட்சன், 185 ரன்களைக் குவித்தார். இதில் 15 சிக்ஸர்களும், 15 பவுண்டரிகளும் அடக்கம். ஒரு ஆஸ்திரேலிய வீரர் ஒரு நாள் போட்டியில் இவ்வளவு அதிக ரன்களைக் குவித்தது இதுவே முதல் முறையாகும். அந்த வகையில் வாட்சன் புதிய சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்பு மாத்யூ ஹெய்டன், 2007ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 181 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்து வந்தது. அதை வாட்சன் முறியடித்து விட்டார்.

மேலும் ஒரு நாள் போட்டி ஒன்றில் ஒரு வீரர் அதிக அளவிலான சிக்ஸர்களை விளாசியது இதுவே முதல் முறையாகும். எனவே வாட்சனின் இந்த சாதனை ஒரு உலக சாதனையாகவும் மாறியுள்ளது. இதற்கு முன்பு 2008ம் ஆண்டில் மேற்கு இந்திய வீரர் சேவியர் மார்ஷல் 12 சிக்ஸர்களை விளாசியதே சாதனையாக இருந்து வந்தது.

அது மட்டுமில்லை, மேலும் 2 சாதனைகளையும் இன்று வாட்சன் படைத்தார். ஒரு நாள் போட்டி ஒன்றில் ஒரு வீரர் அதிக ரன் சராசரியைத் தொட்டது இது 2வது முறையாகும். இதற்கு முன்பு விவியன் ரிச்சர்ட்ஸ் வைத்திருந்த 69.48 சதவீதமே அதிகபட்ச சராசரி அளவாக இருந்து வந்தது. தற்போது அதை முறியடித்த வாட்சன் இன்றைய போட்டியில் 79.7 சதவீதத்தை எட்டி சாதனை படைத்தார்.

மேலும், பவுண்டரிகள் மூலம் நூறு ரன்களை விரைவாக கடந்த வீரராக இருந்து தென் ஆப்பிரிக்க வீரர் கிப்ஸையும் இன்று வாட்சன் முந்தி விட்டார்.

போட்டியின் நாயகனாக வாட்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. மூன்றாவது மற்றும் இறுதி ஒரு நாள் போட்டி புதன்கிழமை நடைபெறவுள்ளது.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.