சுனாமி பாதித்த இடங்களில் இருந்து 117 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு: விமானத்தில் அழைத்து வரப்பட்டனர்

ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமி பேரலைகள் தாக்கி கடும் பாதிப்பு ஏற்பட்டது. அங்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் சுமார் 25 ஆயிரம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். அவர்களும் சுனாமியால் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். அவர்களை மீட்டு இந்தியா அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. தேவைப்பட்டால் விமானங்களை அனுப்பவும் தயார் என்று கூறி உள்ளது.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்படும் இந்தியர்கள் தாயகம் திரும்பியபடி உள்ளனர். நேற்று டெல்லி வந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் 117 இந்தியர்கள் நாடு திரும்பினார்கள். அவர்கள் சுனாமி பாதித்த போது சந்தித்த நேரடி அனுபவங்களை டெல்லியில் நிருபர்களிடம் கூறினார்கள்.

லக்னோவைச் சேர்ந்த 21 வயது நிரம்பிய ஹிப்ரா சௌஹான் கூறியதாவது:-

நான் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டாக்டர் பட்டம் பெறுவதற்காக ஜப்பானில் உள்ள இப்ராகி சென்றேன். நான் தங்கியிருந்த கட்டிடம் பூகம்பத்தின் பாதிப்பினால் மூன்று மணி நேரம் பயங்கரமாக நடுங்கியது. அதிர்ச்சி அடைந்த நாங்கள் அனைவரும் கட்டிடத்தை விட்டு பத்திரமாக வெளி யேற்றப்பட்டோம். ஜப்பானில் உள்ள உணவு கிடைக்காமலும், குடிக்க தண்ணீர் கூட இல்லாமலும் அவதிப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

நாடு திரும்பியவர்களில் டெல்லியைச் சேர்ந்த ராஜ்குமார் மெஹ்ராகூறும் போது நாளுக்கு நாள் நிலைமை மோசமடைகிறது. இயற்கைச் சீற்றம் ஒரு புறம், அணுஉலை கதிர் வீச்சு அபாயம் மற்றொரு புறம். இதனால் மக்கள் படும் அவதி மிகவும் கொடூரமானது என்றார்.

13 ஆண்டுகள் ஜப்பானில் வசித்து வந்தேன். நாடு திரும்பிய பின்பு தான் நான் நிம்மதி அடைந்துள்ளேன் என்று அவர் கூறினார். ஐதராபாத் பல்கலைக்கழ கத்தில் பணியாற்றும் நீமாசிங், டெல்லி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நடாசா சர்மா இருவரும் பயிற்சிக்காக ஜப்பான் நாட்டுக்கு சென்றிருந்தனர். அவர்கள் கூறுகையில், ஜப்பானில் ஏற்பட்ட இயற்கை சீற்றம் மிகவும் பயங்கரமானது என்றும் ஜப்பானிய அரசு பாதிப்படைந்த அனைத்து தரப்பு மக்களுக்கும் எல்லா உதவிகளையும் செய்து தருவதாகவும் கூறினர்.

டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கிய அனைவருக்கும் அணுஉலை பேரிடர் நிர்மாணிப்புக் குழுவால் கதிர் வீச்சு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Source & Thanks : newindianews

Leave a Reply

Your email address will not be published.