கேரளாவில் ‌காங்கிரஸ் 81 இடங்களில் போட்டி: கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது

கேரள மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 81 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் 59 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளன.

இதன் மூலம், பல நாட்களாக நடந்து வந்த சிக்கல்களில் இருந்து காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விடுபட்டு நிம்மதியடைந்துள்ளன.கேரள மாநிலத்தில் வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வது குறித்து நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இக்கூட்டணியில் கேரள காங்கிரஸ் (மானி), ஜனாதிபத்திய சம்ரக்ஷன் சமிதி (ஜெ.எஸ்.எஸ்.), முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ் (பாலகிருஷ்ண பிள்ளை), ராஷ்டிரிய சோஷலிஸ்ட் கட்சி, சி.எம்.பி., மற்றும் கேரள காங்கிரஸ் (ஜேக்கப்) ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.இதில், கேரள காங்கிரஸ் (மானி) கட்சி, ஜெ.எஸ்.எஸ்., முஸ்லிம் லீக், ஆர்.எஸ்.பி., ஆகியவை தங்களுக்கு கடந்த தேர்தலைவிட அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என கோரின.

இதனால் ஏற்பட்ட சிக்கல்களால் காங்கிரஸ் கட்சி பெரிதும் திணறி வந்தது. இதில் குறிப்பாக, இடமலையார் பிரச்னையில் பாலகிருஷ்ண பிள்ளைக்கு சுப்ரீம் கோர்ட் சிறை தண்டனை விதித்தது; பாமாயில் வழக்கு மீண்டும் தூசி தட்டப்படுவது, கூட்டணியை விட்டு ஜெ.எஸ்.எஸ்., கட்சி விலகிவிடுமோ என்ற அச்சம் போன்ற காரணங்கள் முக்கியமானவை.

கேரள காங்கிரஸ் (மானி) கட்சி தங்களுக்கு 22 தொகுதிகள் தேவை என வற்புறுத்தி வந்தாலும், அக்கட்சியுடன் இரு தினங்களாக, முஸ்லிம் லீக் கட்சி பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதை தொடர்ந்து இதன் பலனாக, அக்கட்சி 15 தொகுதிகளில் போட்டியிட சம்மதம் தெரிவித்துள்ளது.

கூட்டணி கட்சிகளுடன் சுமுகமாக பேச்சுவார்த்தைகளை முடித்து கொண்ட காங்கிரஸ் தற்போது சற்று நிம்மதி அடைந்துள்ளது.இக்கூட்டணியில் காங்கிரஸ் 81 தொகுதிகளிலும், முஸ்லிம் லீக் 24, கேரள காங்கிரஸ் (மானி) 15, சோஷலிஸ்ட் ஜனதா 7, ஜெ.எஸ்.எஸ்., 4, சி.எம்.பி., கேரள காங்கிரஸ் (ஜேக்கப்) ஆகிய கட்சிகளுக்கு தலா 3, கேரள காங்கிரஸ் (பி) 2 மற்றும் ஆர் எஸ் பி 1 என மொத்தம் 140 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கன்வீனர் பி.வி.தங்கச்சன் தெரிவித்தார்.

Source & Thanks : newindianews

Leave a Reply

Your email address will not be published.