ஜப்பான் சுனாமி தாக்குதலுக்கு 10,000 பேர் பலி

டோக்கியோ: ஜப்பானைத் தாக்கிய கடும் பூகம்பம் மற்றும் சுனாமிக்கு 10,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஜப்பானில் சுனாமி தாக்கியதில் பெரும் சேதமடைந்த பகுதி மியாகி. இங்குதான் பெருமளவில் உயிரிழப்பு நடந்திருக்கலாம் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.

கடும் சேதத்தை சந்தித்துள்ள மியாகி பகுதியின் கீழ் வரும் மினமிசான்ரிகு என்ற நகரம் சுனாமி தாக்குதலில் முழுமையாக மூழ்கிப் போய் விட்டது. இந்த நகரில் மட்டும் 10,000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இங்கு மட்டும் இத்தனை பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் ஜப்பான் பூகம்பம் மற்றும் சுனாமி தாக்குதல் உயிர் பலி பல ஆயிரமாக உயரும் அபாயமும் உருவாகியுள்ளது.

இதற்கிடையே, பூகம்பம் மற்றும் சுனாமி தாக்குதலில் சிக்கி மீண்ட லட்சக்கணக்கான மக்கள் சரியான உணவு, குடிநீர், மின்சாரம் உள்ளிட்டவை கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஜப்பான் பிரதமர் நவோட்டா கான் இதுகுறித்துக் கூறுகையில், 65 ஆண்டு காலத்தில் ஜப்பான் சந்தித்துள்ள மிகப் பெரிய நெருக்கடி இது. இதிலிருந்து மீண்டு வர மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

இதேபோல சென்டாய் நகரம் மிகப் பெரிய பேரழிவை சந்தித்துள்ளது. இந்த நகரின் ஒரு பகுதி முற்றிலும் அழிந்து போய் விட்டது. விமான நிலையம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகள், உடமைகளை இழந்துள்ளனர்.

ஜப்பான் வரலாற்றிலேயே இல்லாத அளவு மிகப் பெரிய அளவில் மீட்பு மற்றும் நி்வாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சுனாமி தாக்கிய பகுதிகளில் எங்கு பார்த்தாலும் சிதிலமடைந்த வீடுகள், அடித்துச் செல்லப்பட்ட கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் என சுடுகாடு போல காட்சி அளிக்கின்றன.

ஜப்பான் அரசு மீட்பு நடவடிக்கைளை முழு வீச்சில் முடுக்கி விட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கானோர் இதில் ஈடுபட்டுள்ளனர்.

2 அணு உலைகளில் கதிர்வீச்சுக் கசிவு

இந்த நிலையில், ஜப்பானில் உள்ள 2 அணு உலைகள் வெடிக்கும் அபாயத்தில் இருப்பதால் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 2 லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இரண்டு அணு உலைகளையும் கட்டுக்குள் கொண்டு கடுமையாக போராடி வருகிறது ஜப்பான். இருப்பினும் இரண்டு அணு உலைகளிலிலும் வெப்பமும், அழுத்தமும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போவதால் பேராபத்து நெருங்கி வருகிறது.

ஜப்பானை உலுக்கிப் போட்ட மிகப் பெரிய பூகம்பமும், அதைத் தொடர்ந்து பெரும் சீரழிவை ஏற்படுத்திய சுனாமியும், ஜப்பானின் அணு உலைகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தி விட்டன.

பூகம்பம் ஏற்பட்டவுடனேயே 5 அணு உலைகளை மூடியது ஜப்பான். இருப்பினும் பூகம்பத்தின் அதிர்வு காரணமாக, அவற்றில் 2 அணு உலைகளில் குளிரூட்டும் சாதனங்கள் செயலிழந்தன. இதன் காரணமாக அணு உலைகளில் வெப்பம் அதிகரித்து அழுத்தம் பல ஆயிரம் மடங்கு அதிகரித்து விட்டது.

இதன் காரணமாக அவை வெடித்துச்சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதைத் தவிர்க்க கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறது ஜப்பான். இதில் புகுஷிமோவில் உள்ள ஒரு அணு உலையில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது. அங்கிருந்து கதிர்வீச்சும் வெளியாகத் தொடங்கியுள்ளது. இந்தக் கதிர்வீச்சுக்கு 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்னொரு அணு உலையிலும் லேசான கதிர்வீச்சு வரத் தொடங்கியிருப்பதாக ஜப்பான் உறுதிப்படுத்தியுள்ளது. அந்த அணு உலையிலும் வெடிவிபகத்து ஏர்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவும் புகுஷிமோவில்தான் உள்ளது.

அணு உலைகள் வெடித்துச் சிதறினால் மிகப் பெரிய மனித உயிர்ப் பலி ஏற்படும் என்பதால் ஜப்பான் மட்டுமல்லாமல் ஜப்பானுக்கு அருகே உள்ள நாடுகளும் பெரும் பீதியில் உள்ளன.

இந்தியா உதவுகிறது

ஜப்பானில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இந்தியா, கம்பளிப் போர்வைகளை அனுப்பி வைக்கிறது.

பாதிக்கப்பட்ட செண்டாய் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தரமான கம்பளிப் போர்வைகளுடன் இந்தியாவில் இருந்து முதல் விமானம் புறப்படத் தயாராக உள்ளது என வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், டெல்லியில் உள்ள ஜப்பான் தூதருடன் இதுகுறித்து விவாதித்தோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு குளிரைத் தாங்கக்கூடிய கம்பளிப்போர்வைகள் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

ஹரியானா, பஞ்சாப் அரசுகள் கம்பளிப்போர்வைகளை அளித்து உதவி வருவதாகவும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.