தமிழக சட்டசபை: தேர்தல் தேதியில் மாற்றம் இல்லை பள்ளிகள் அருகே பிரசாரத்துக்கு தடை; ஐகோர்ட்டு அதிரடி நிபந்தனை

posted in: தமிழ்நாடு | 0

சென்னை ஐகோர்ட்டில் திண்டிவனம் பெரியதச்சூரைச்சேர்ந்த குரு அப்பாசாமி பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 2-ந் தேதியில் இருந்து 25-ந் தேதிவரையும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் மார்ச் 28-ந் தேதி முதல் ஏப்ரல் 11-ந் தேதிவரையும் நடத்தப்பட உள்ளது. பொதுத்தேர்தல் 13.4.11 அன்று நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த 17 லட்சம் மாணவர்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கக்கூடிய தேர்வுகள் நடக்கும்போது, பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள் மூலம் அதிக ஒலியை எழுப்புவதால் அவர்களின் படிப்பை பாதிக்கும். எனவே தேர்தல் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். இதுபோல் பல்வேறு நடைமுறை பிரச்சினைகளை சுட்டிக்காட்டி தேர்தலை வேறு தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டு மக்கள் சக்தி கட்சி, மயிலாடுதுறை வக்கீல் கே.ராஜேந்திரன் ஆகியோரும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, தீர்ப்பை தள்ளி வைத்தனர். இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர்.

தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவுகளின்படி ஏற்கனவே தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. உள்நோக்கம் குறித்து எந்த குற்றச்சாட்டையும் மனுதாரர்கள் குறிப்பிடவில்லை. தேர்வு நடக்கும் நாட்களில் தேர்தல் நடைபெறவில்லை. தேர்தல் பணியாளர்களாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள், தேர்தல் பயிற்சி பெறுவதற்காக தேர்தல் நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு அழைக்கப்படுவார்கள் என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. விடுமுறை நாட்களில்தான் பயிற்சி வகுப்புகள் நடக்கும் என்றும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் முடிந்த பிறகே தேர்தல் நடக்க உள்ளது. எனவே தேர்தலை வேறு தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் சில கட்டுப்பாடுகளை விதித்து அதை தேர்தல் கமிஷன் கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறோம்.

*தேர்தல் நடக்கும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் யாரையும் தேர்வு முடிவதற்கு முன்னதாக தேர்தல் பணிக்காகவோ, பயிற்சிக்காகவோ நியமிக்கக்கூடாது.

*தேர்வுகள் நடக்கும் நாள்வரை பள்ளி வாகனங்களோ, பள்ளிக்கு சொந்தமான மற்ற வாகனங்களோ தேர்தல் பணிகளுக்காக எடுத்துக்கொள்ளப்படக்கூடாது.

*மாணவர்கள் நலன் பாதிக்கப்படாத வகையில் அரசு பஸ்களை தேர்தல் கமிஷன் பயன்படுத்த வேண்டும்.

*தேர்வு மையங்களாக நியமிக்கப்பட்டுள்ள பள்ளிகளில் இருந்து 200 மீட்டருக்குள் எந்த ஒரு அரசியல் கட்சியும், அதன் ஆதரவாளர்களும் பிரசாரம் செய்யக்கூடாது.

மனுக்கள் முடித்து வைக்கப்படுகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Source & Thanks : maalaimalar

Leave a Reply

Your email address will not be published.