60 சீட் தந்தாலும் தொகுதிகளில் கரிசனம் தி.மு.க.,வுக்கு காங்., நெருக்கடி தொடர்கிறது

தி.மு.க., கூட்டணியில், தங்களுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்படுவதை ஏற்றுக் கொண்ட காங்கிரஸ் மேலிடம், அந்த தொகுதிகள் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக இருக்க வேண்டும் என, அடுத்த கோரிக்கையை வைத்துள்ளது.

இந்த விவகாரத்தில், தி.மு.க.,வுக்கு காங்கிரசின் நெருக்கடி தொடர்வதால், தொகுதிப் பங்கீடு உடன்பாடு ஏற்படுவதில் இழுபறி நீடிக்கிறது.

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு 60 தொகுதிகள் தரப்பட்டாலும், அது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மூன்றுக்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தை நடத்தியும் கூட, தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. சென்னையில், முதல்வர் கருணாநிதியை சந்தித்து விட்டு டில்லி திரும்பிய குலாம்நபி ஆசாத், நேற்று முன்தினம் இரவு தமிழக காங்கிரசின் ஐவர் குழுவை வரவழைத்து, தன்னுடைய வீட்டில் ஆலோசனை நடத்தினார். மாலை 6 மணிக்கு துவங்கி நடந்த கூட்டம், 45 நிமிடங்கள் கழிந்த பின், உள்துறை அமைச்சர் சிதம்பரம் மட்டும் அங்கிருந்து சென்றார்.அன்றைய தினம், ஊழல் கண்காணிப்பு ஆணையராக தாமசை நியமனம் செய்தது செல்லாது என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து இருந்ததால், அது பற்றிய முக்கிய ஆலோசனைக்காக அவர் சென்றார்.

சிதம்பரம் சென்ற அரை மணி நேரத்தில் வாசனும் கிளம்பிச் சென்றார். பின்னர், ஜெயந்தி நடராஜனும் சில நிமிடங்களில் கிளம்பவே, இறுதியாக தங்கபாலுவும் கிளம்பினார். அதன் பிறகு, மறுபடியும் இரவு 11 மணிக்கு கூட்டம் நடந்தது. இந்த இடைவெளியில் சோனியாவை சந்திக்க, குலாம் நபி ஆசாத் சென்றார். அப்போது தி.மு.க., கூட்டணியில் 60 இடங்கள் பெறுவதற்கு முடிவாகி, அதுகுறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமென்ற நிலை இருந்தது. அந்த சந்திப்பின்போது, உள்துறை அமைச்சர் சிதம்பரமும் உடன் இருந்துள்ளார்.

இதுகுறித்து டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:கடும் இழுபறிக்கு மத்தியில் 60 தொகுதிகள் வரை காங்கிரஸ் பெறுவது என்று முடிவெடுக்கப்பட்டது. இதுகுறித்து தி.மு.க.,விடமும் தெரிவித்து சம்மதம் பெறப்பட்டுவிட்டது. ஆனால், ஏற்கனவே குறைந்த தொகுதிகளை வாங்கும்போது, வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளாக அவை இருக்கவேண்டுமென, காங்கிரஸ் மேலிடம் கருதுகிறது. எனவே, தொகுதிகள் எண்ணிக்கை 60 என்று முடிவெடுத்தாலும், அவை எந்தெந்த தொகுதிகள் என்பதை தெரிந்து கொண்டுவிட்டு, அதன் பிறகு தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திடலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.

இதற்காக, சோனியாவின் முடிவுக்காக ஐவர் குழு காத்திருக்கிறது. தி.மு.க., தலைவர்களுடன் அகமது படேல் தொடர்பில் உள்ளார். தொகுதிகள் குறித்து இறுதி வடிவம் பெற்றபின், தேர்தல் பணிகள் சுலபமாக இருக்கும் என்றும் காங்கிரஸ் மேலிடம் கருதுகிறது. இவ்வாறு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

தி.மு.க., அதிருப்தி: காங்கிரசுக்கு 60 சீட் தருவதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று தி.மு.க., தரப்பில் தகவலறிந்த வட்டாரங்கள் சென்னையில் தெரிவித்தன.ஆனால், தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் விவரங்களை எழுத்து மூலமாக அளித்தால் மட்டுமே, ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என்று காங்கிரஸ் கூறுகிறது. இந்த திடீர் நெருக்கடி நிபந்தனையால், தேவையற்ற குளறுபடியை காங்கிரஸ் ஏற்படுத்துவதாக தி.மு.க., தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. கூட்டணிக் கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்படும்போது, போட்டியிட எத்தனை தொகுதிகள் என்பது தான் முடிவாகும். அதன் பின்னரே எந்தெந்த தொகுதிகள் என்பது தீர்மானிக்கப்படும். கூட்டணியில், ஆறேழு கட்சிகள் இருக்கும் நிலையில், அக்கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை எப்படி ஒதுக்குவது என்ற கருத்து தி.மு.க.,வில் பேசப்படுகிறது.

தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர், “இந்த குழப்பத்துக்கு விரைவில் முடிவு காணப்படும். காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 60 தொகுதிகளுக்கான அதிகாரப்பூர்வமான உடன்படிக்கை ஓரிரு தினங்களில் கையெழுத்தாகும்’ என்று சென்னையில் நேற்று கூறினார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.