விடுதலைப் புலிகளுக்கெதிரான முக்கிய விமானத்தாக்குதல்களை மேற்கொண்ட விமானியே விபத்தில் கொல்லப்பட்டுள்ளார்

இறுதிக்கட்ட போரின் போது விடுதலைப் புலிகளுக்கெதிரான முக்கிய தாக்குதல்களை மேற்கொண்ட விமானியே இன்று காலை இடம்பெற்ற விமான விபத்தில் கொல்லப்பட்டுள்ளதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்ட விமானியின் மரண விசாரணைகள் இன்று அத்தனகல்லை மேலதிக மாஜிஸ்திரேட் ருவன் பதிரண முன்னிலையில் விபத்து நடைபெற்ற இடத்தில் நடைபெற்றபோதே விமானப்படையினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

நான்காம் கட்ட ஈழப் போரில் முக்கிய பல தாக்குதல்களை மேற்கொண்டவர்களில் இன்று விபத்தில் கொல்லப்பட்ட மொனாஷ் பெரேரா முக்கிய பங்காற்றியவர். அதன் காரணமாகவே விமானப்படையின் அறுபதாம் ஆண்டு நிறைவுக் கண்காட்சியில் அவருக்க முக்கிய இடம் வழங்கப்பட்டிருந்தது.

இன்றைய விபத்தின் போது அவரது இருக்கை தன்னியக்க முறையில் விமானத்திலிருந்து வெளியே தூக்கியெறியப்பட்டிருந்த போதிலும், விமானத்தின் சிறகொன்றில் சிக்கிக்கொண்டதால் விரியாமற் போனதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட மொனாஷ் பெரேராவின் சடலத்தின் தலை மட்டும் தென்னை மரமொன்றின் அடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடலின் ஏனைய பாகங்கள் தீயில் கருகியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

அவரது பரசூட் விரியாத நிலையில் அருகிலிருந்த அன்னாசித் தோட்டம் ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.