இன்று பட்ஜெட் கூட்டத் தொடர் ஆரம்பம்-உருப்படியாக நடக்கும் என பிரதமர் நம்பிக்கை!

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்துடன், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுடன் தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடர் உருப்படியாகவும், உபயோகமாகவும் நடைபெறும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் முதல் கூட்டம் இது. எனவே, இரு அவைகளின் கூட்டுக் கூட்டமாக இது கூடுகிறது. இக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உரை நிகழ்த்துவார்.

அதன் பின்னர் இரு அவைகளும் தனித் தனியாக கூடும். இரண்டு கட்டமாக கூட்டத் தொடர் நடைபெறுகிறது. மார்ச் 16ம் தேதி வரை ஒரு பகுதியும், ஏப்ரல் 4ம் தேதி முதல் 21 வரை அடுத்த கட்டக் கூட்டத் தொடரும் நடைபெறும்.

25ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், 28ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும். தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் அந்த மாநிலங்களுக்கு இந்த பட்ஜெட்டுகளில் கூடுதல் அறிவிப்புகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த குளிர்காலக் கூட்டத் தொடரை, ஸ்பெக்ட்ரம் பிரச்சினை காரணமாக முடக்கிப் போட்டு விட்டன எதிர்க்கட்சிகள். தங்களது ஜேபிசி கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் பட்ஜெட் கூட்டத் தொடரையும் சுமூகமாக நடத்த விட முடியாது என்றும் எச்சரித்துள்ளன. எனவே இக்கூட்டத் தொடர் அமளி இல்லாமல் அமைதியாக நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த நிலையில் அமைதியான முறையில் கூட்டத் தொடர் நடைபெறும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று லோக்சபா சபாநாயகர் மீரா குமார் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பின்னர் மன்மோகன்சிங் கூறுகையில், பட்ஜெட் கூட்டத் தொடர் சுமூகமான முறையில் நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். எதிர்க்கட்சியினரின் அனைத்துக் கோரிக்கைகளும் விவாதிக்கப்படலாம். அதற்கு அரசு தயாராகவே உள்ளது.

இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் உருப்படியானதாகவும், உபயோகரமானதாகவும் அமையும் என்று நம்புகிறேன் என்றார்.

ஜேபிசி விசாரணைக்கு அரசு முடிவு

இதற்கிடையே, நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு அரசு தயாராகி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதுதொடர்பான அறிவிப்பு பிப்ரவரி 22ம் தேதி (அதாவது நாளை) நாடாளுமன்றத்தில் வெளியாகும் என்றும் தெரிகிறது.

நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பின்னர் இந்தத் தகவல் வெளியானது. இதன் மூலம் எதிர்க்கட்சிகளை அமைதிப்படுத்தி, நாடாளுமன்றக் கூட்டத்தை அமைதியான முறையில் நடத்த மத்திய அரசு இறங்கி வந்துள்ளது.

ஆறு வார காலம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் மொத்தம் 61 மசோதாக்கள் நிறைவேற்றப்படவுள்ளன.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.