சிபிஐ காவல் முடிந்தது-திகார் சிறையில் அடைக்கப்பட்ட ராசா

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் சிபிஐ காவல் முடிவடைந்ததையடுத்து அவரை மார்ச் 3ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 2ம் தேதி கைது செய்யப்பட்ட ராசாவை 4 முறை காவல் நீடிப்பு பெற்று, 15 நாட்களாக சிபிஐ தனது காவலில் வைத்து விசாரித்து வந்தது. டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வந்தது.

வழக்குப்ப திவு செய்து குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவரை போலீசார் அதிகபட்சமாக 14 நாட்கள் மட்டுமே காவலில் வைத்து விசாரிக்க முடியும். அதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் 14 நாட்கள் ராசாவை தங்கள் காவலில் வைத்து விசாரித்து விட்டனர்.

இதையடுத்து அவர் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை முடிந்துவிட்டதாக சிபிஐ கூறியதையடுத்து அவரை மார்ச் 3ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் திகார் சிறைச் சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இந்த விவகாரத்தில் ராசா தவிர ஸ்வான் டெலிகாம் அதிபர் உஸ்மான் பல்வா, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் அதிகாரிகள் சந்தோலியா, பெகுரியா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் சந்தோலியா, பெகுரியா இருவரும் இரு வாரங்களுக்கு முன்பே சிபிஐ விசாரணை முடிந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டனர். பல்வாவிடம் சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

எஸ்ஸார் நி்ர்வாக இயக்குனரிடம் சிபிஐ விசாரணை:

இதற்கிடையே எஸ்ஸார் குழுமங்களின் நி்ர்வாக இயக்குனரான பிரசாந்த் ருய்யா இன்று சிபிஐ முன் ஆஜரானார். 2ஜி ஸ்பெக்ட்ரம் பெற்ற நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் நிறுவனத்தில் பங்குகளை வைத்துள்ளது எஸ்ஸார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக இந்த நிறுவனத்திடமும் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.