5-வது நாளாக நீடிப்பு: கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்; பால் உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

posted in: தமிழ்நாடு | 0

கோரிக்கைகளை நிறை வேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இன்று 5-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. சேலம்- நாமக்கல் மாவட்டத்தில் பல பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் பாலை கீழே கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இன்னும் சிலர் கறவை மாடுகளை பிடித்து வந்து ரோட்டில் நிற்க வைத்து சாலைமறியல் செய்தனர். இந்த நிலையில் பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்ற நிர்வாகிகளுக்கும், கிராமங்களில் உள்ள சங்கத்தை சேர்ந்தவர்களுக்கும் பாலை கீழே கொட்டி அழிக்க கூடாது என்றும், பாலை அனாதை இல்லங்களுக்கு வழங்கிடவேண்டும் என்றும், அல்லது கோவிலுக்கு கொடுத்துவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டு கொண்டுள்ளனர்.

போராட்டம் நீடித்து வரும் நிலையில் பால் தட்டுப்பாட்டை சமாளிக்க ஆவின் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. ஆந்திரா, கர்நாடகா மாநிலத் தில் இருந்து பாலை கொள்முதல் செய்து சென்னையில் பால் தட்டுப்பாட்டை சமாளிக்கிறார்கள். தினமும் ஒரு லட்சம் லிட்டர் பால் அண்டை மாநிலத்தில் இருந்து வாங்கி சென்னையில் வினியோகிக்கப்படுகிறது.

இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் பால் தடையின்றி கிடைக் கிறது. பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பேச்சு வார்த்தைக்கு வருமாறு அமைச்சர் மதிவாணன் வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து பால் வழங்காமல் இருந்து வருகிறார்கள்.

இந்த போராட்டம் சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. போராட்டம் குறித்து பால் உற்பத்தியாளர்கள் நல சங்க தலைவர் கே.ஏ. செங்கோட்டுவேல் கூறியதாவது:-

நாளுக்கு நாள் பால் உற்பத்தியாளர்களின் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. பால் கொள்முதல் செய்வது தினமும் குறைந்து வருகிறது. இதனால் சென்னை உள்பட பல வெளியூர்களுக்கு பால் அனுப்புவது குறைந்து வருகிறது. ஆனால் அரசு பால் உற்பத்தியாளர்களை இன்னும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. அரசு பேச்சு வார்த்தைக்கு அழைக்கும் என எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறோம். அழைப்பு வந்தால் உடனே பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வோம்.

இந்த நிலையில் போராட்டம் தீவிரப்படுத்துவது குறித்து சேலத்தில் இன்று மாலை அவசர ஆலோசனை கூட்டம் நடக்க இருக்கிறது. இதில் அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள், பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள், பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர்கள் முகமது அலி கூறியதாவது:-

போராட்டத்தை முறியடிக்க அரசு சதி செய்து வருகிறது. பால் தட்டுப் பாட்டை சமாளிக்க தர்மபுரியில் தனியாரிடம் 50 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்துள்ளனர். இதே போல ஈரோட்டிலும் 50 ஆயிரம் லிட்டர் பால் தனியாரிடம் வாங்கி ஆவின் பால் என்ற பெயரில் விற்பனை செய்கிறார்கள். தனியார் பால் கலப்படமானது, ரசாயணம் கலந்தது. அத்தகைய பாலை ஆவின் பால் என்று கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள்.

சுகாதார கேட்டை விளைவிக்கிறார்கள். தட்டுப்பாட்டை சமாளிக்க ஆவின் செய்யும் இந்த தவறை கண்டிக்கிறோம். ஈரோடு அருகே உள்ள சித்தோடு பால் ஒன்றிய அலுவலகத்தில் இன்று முற்றுகை போராட்டம் நடக்கிறது. பேச்சு வார்த்தைக்கு அழைப்பதாக கூறி விட்டு இதுவரை அழைக்கவில்லை. எங்கள் போராட்டத்தை முறியடித்து நசுக்கி விட்டு அரசு பேச நினைத்தால் ஏமாற்றம் தான் கிடைக்கும். மேலும் பல மாவட்டங்களில் இப்போது போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source & Thanks : maalaimalar

Leave a Reply

Your email address will not be published.