ஜெ ஓய்வு விவகாரம்: சட்டசபையில் அதிமுக அமளி-பட்ஜெட் புத்தகம் கிழிப்பு

posted in: தமிழ்நாடு | 0

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஓய்வு எடுக்கும் விவகாரம் தொடர்பாக சட்டசபையில் தி்முக, அதிமுக எம்ஏல்ஏக்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வெளிநடப்பு செய்த அதிமுகவினர் பட்ஜெட் புத்தகத்தை கிழித்து தூக்கி வீசினர்.

சட்டசபையில் இன்று நிதியமைச்சர் அன்பழகன் 2010-2011ம் ஆண்டுக்கான இறுதி துணை மதிப்பீடுகளை தாக்கல் செய்தார். அதில், துணை மானிய கோரிக்கைகளை விளக்கி கூறும் விரிவான ஒரு அறிக்கை இந்த மன்றத்தில் வைக்கப்பட்டுஉள்ளது. இந்த துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ. 11,772 கோடி அளவிலான நிதியை ஒதுக்க வகை செய்கிறது.

இதில் ரூ. 9,144 கோடி வருவாய் கணக்கிலும், ரூ. 2,628 கோடி மூலதனம் மற்றும் கடன் கணக்கிலும் அடங்கும். இலவச கலர் டி.வி. வழங்கும் திட்டத்துக்கு கூடுதலாக ரூ. 258.22 கோடி அரசுக்கு தேவைப்படுகிறது.

இத்தொகை மானிய கோரிக்கை எண் 31 தகவல் தொழில் நுட்பவியல் துறை என்பதன் கீழ் சேர்க்கப்பட் டுள்ளது. கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு கூடுதலாக ரூ. 214.52 கோடி அரசுக்கு தேவைப்படுவதும் துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் வாரியம் அரசுக்கு செலுத்த வேண்டிய மின் வரி- அதன் மீதான வட்டித் தொகை ரூ. 1235.13 கோடி தமிழ்நாடு மின் வாரியத்துக்கு பங்கு மூலதனமாக அரசு மாற்றி உள்ளது. இதுவும் துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.

மாநில போக்குவரத்து கழகங்களுக்கு டீசல் மானியம்-ஊதிய ஒப்பந்தம் ஆகியவற்றுக்கு கூடுதலாக ரூ. 623.49 கோடி முன் பணமாக தேவைப்படுகிறது. இதுவும் துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

இதன்மீது பின்னர் விவாதம் நடந்தது. அதன் விவரம்:

அமைச்சர் அன்பழகன்: எதிர்க்கட்சித் துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசி முடிக்கும் போது எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா முதல்வராக வர வேண்டும் என்ற எண்ணத்தில் பேசினார். அவர் ஆசைபடுவது தவறல்ல. ஆனால் ஓய்வு எடுத்து கொண்டு இருக்கும் எதிர்க்கட்சி தலைவர் எப்படி முதல்வராக வரமுடியும். ஓய்வெடுப்பதாக சொல்லி கொண்டிருக்கும் அவரை எப்படி முதல்வராக்குவார்கள்.

(அதிமுகவி எம்எல்ஏக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போட்டனர். ஓய்வு என்ற வார்த்தையை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றனர்)

அன்பழகன்:எதிர்க்கட்சி தலைவருக்கு உடல் நிலை சரியில்லை. அவர் பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என்று தான் இந்த அவையில் தீர்மானம் கொண்டு வந்தீர்கள். அதுவும் நிறைவேற்றப்பட்டது. பூரண ஓய்வு எடுப்பவரை எப்படி முதல்வர் ஆக்குவீர்கள் என்று தான் சொன்னேன். இதில் உங்களுக்கு என்ன கடுப்பு?. நீங்கள் கொண்டு வந்த தீர்மானத்தில் அப்படி வார்த்தை இல்லையென்றால் வாபஸ் பெற்று கொள்கிறேன்.இது ஒன்றும் தவறான வார்த்தை இல்லையே.

சபாநாயகர் ஆவுடையப்பன்: உழைத்தவர்கள் ஓய்வில் இருப்பார்கள். இதில் என்ன தவறு?. அந்த வார்த்தையை ஏன் நீக்க வேண்டும்?.

அன்பழகன்:என் பேச்சுரிமையை யாரும் தடுக்க முடியாது. பெங்களூர் நீதிமன்றத்தில் கூட தான் (ஜெயலலிதா) ஆஜராக முடியாததற்கு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பூரண ஓய்வு தேவை என்ற தீர்மானத்தை அங்கே சுட்டிக் காட்டி உள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக): புரட்சித் தலைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் இந்த சட்டமன்ற தொடருக்கு மட்டும் வர முடியாது என்பதால் தான் தீர்மானத்தை கொண்டு வந்தோம். அதை அரசியல் ஆக்கும் வகையில் நிதியமைச்சர் பேசுவது சரியல்ல.

அன்பழகன்: ஓய்வு எடுக்கும் ஒருவரே முதல்வராக மீண்டும் வருவார் என்று சொல்லும் போது இன்று செயல்பட்டு கொண்டிருக்கும் முதல்வரால் (கருணாநிதி) பதவியை காப்பாற்றி கொள்ள முடியாதா?

இதையடுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் எழுந்து நின்று அமைச்சர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அமைச்சர்களுக்குத் துணையாக திமுக எம்எல்ஏக்களும் குரல் தந்தனர். இதனால் அவையில் கடும் கூச்சல்- குழப்பமும் அமளியும் நிலவியது.

அப்போது பேசிய அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன், நிதியமைச்சர் அன்பழகன் பேசிய வார்த்தை வாபஸ் பெறப்படாததால் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.

இதைத் தொடர்ந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார் பட்ஜெட் புத்தகத்தை கிழித்து தாள்களை வீசினார். இன்னொரு எம்எல்ஏ அரி பட்ஜெட் புத்தகத்தையே தூக்கி வீசினார்.

அவர்களது செயலுக்கு சபாநாயகர் கடும் கண்டனம் தெரிவித்தார்.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.