ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆ.ராசாவை பலிகடா ஆக்கவேண்டாம்: அரசுக்கு கட்காரி கோரிக்கை

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கைதாக வேண்டும் என பா.ஜனதா தலைவர் நிதின் கட்காரி கூறினார்.

மேலும், இவ்வழக்கில் ஆ.ராசாவை அரசு பலிகடா ஆக்க வேண்டாம் எனவும் கட்காரி கேட்டுக்கொண்டார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமரும், அவரின் அமைச்சர்களும் நேரடியாக தொடர்புடையவர்கள்.

ஸ்பெக்ட்ரம் ஒப்பந்த முடிவுகள் அனைத்தையும் ஆ.ராசா தனியாக எடுத்திருக்கமாட்டார். பிரதமர் மற்றும் பிறத்துறை அமைச்சர்களையும் ஆலோசித்திருப்பார். பிரதமரின் அனுமதியில்தான் ஸ்பெக்ட்ரம் உரிம ஒப்பந்தங்கள் கையெழுத்திடப் பட்டிருக்கும்.

அதனால் ஆ. ராசாவுக்கு கட்டளையிட்டது யார்? என்பதையும், ஊழலில் தொடர்புடைய மற்றவர்களையும் விரைவில் மக்கள்முன் ஒப்படைக்க வேண்டும். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை விசாரிக்கும் அதிகாரிகளின் கேள்விகளுக்கு பிரதமர் இதுவரையிலும் பதிலளிக்கவில்லை.

அலைக்கற்றை உரிம விலை நிர்ணயத்தில் பல அமைச்சர்களுக்கு தொடர்புடையதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஊழல் செய்வதெற்கென்றே உரிம ஒப்பந்தங்கள் ஒதுக்கப்பட்டது போல் தெரிகிறது. தொலைத்தொடர்புத் துறையை அரசு தி.மு.க.விற்கு வழங்கிவிட்டது.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசாவையும், காமன்வெல்த் ஊழலில் கல்மாடியையும் அரசு பலிகடா ஆக்க வேண்டாம். ஸ்பெக்ட்ரம் ஊழலின் முழு விவரங்கள் வெளிவரும் வரை பா.ஜனதா நாடாளுமன்றக் கூட்டுக்குழுக்கு தொடர்ந்து வலியுறுத்தும்.

அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யும் வரை ஆ.ராசாவின் கைது நடவடிக்கை வெறும் கண்துடைப்புதான். 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் முழுமையாகவும் வெளிப்படையாகவும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நித்தின் கட்காரி கூறினார்.

கட்காரியுடன் பேட்டியளித்த ராஜ்யசபை எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தன் பதவியை பாதுகாக்க நினைக்கிறார் பிரதமர் என கூறினார்.

Source & Thanks : maalaimalar

Leave a Reply

Your email address will not be published.