காஷ்மீர் மனித உரிமை நிலவரம்: ஐ.நா. கவலை

இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்புப் படையினருக்கு பெருமளவு அதிகாரங்களை வழங்கும் சிறப்புச் சட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என மனித உரிமைகளுக்கான ஐ.நா. மன்ற சிறப்புப் பிரதிநிதி மார்கரெட் செகாக்யா வலியுறுத்தியுள்ளார்.

படையினருக்கு எதிராக காஷ்மீரில் அண்மையில் பெரும் ஆர்ப்பாட்டங்களும் நடந்திருந்தன.

ஏற்கெனவே பல முறை ஐ.நா. மனித உரிமைப் பிரிவினர் காஷ்மீரில் பயணம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், முதல் முறையாக இந்திய அரசு தற்போது அவர்களது பயணத்துக்கு அனுமதியளித்திருந்தது.

அதையடுத்து, காஷ்மீர், ஒரிஸா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், குஜராத் மற்றும் டெல்லியில் ஐ.நா. மன்ற மனித உரிமை அமைப்பின் சிறப்புப் பிரதிநிதி மார்கரெட் செகாக்யா பத்து நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

தனது பயணத்தின் முடிவில், வெள்ளியன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மார்கரெட் செகாக்யா, பாதுகாப்புச் சட்டங்கள் பெருமளவு பயன்படுத்தப்படுவது குறித்துக் கவலை வெளியிட்டார்.

குறிப்பாக, இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் பயன்படுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பொது பாதுகாப்பு சட்டம் மற்றும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டம், ஜம்மு காஷ்மீர் பொது பாதுகாப்பு சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் ஆகியவை ஆகியவை மனித உரிமை ஆர்வலர்களின் பணிகளை நேரடியாகப் பாதிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மனித உரிமை ஆர்வலர்கள், நக்ஸலைட்டுகள், தீவீரவாதிகள், தேசவிரோத சக்திகள் என்று முத்திரை குத்தப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவது கவலையளிப்பதாக அவர் தெரிவித்தார். பிரிவினைவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை வெளிக்கொணரும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் அரசு மற்றும் எதிர்தரப்பினர் ஆகிய இருவராலும் குறிவைக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவில் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் திட்டங்களை எதிர்க்கும் மனித உரிமை ஆர்வலர்களும்குகூட குறிவைக்கப்படுவதாக மார்கரெட் செகாக்யா கவலை தெரிவித்தார்.

மனித உரிமை மீறல், ஊழல் அதிகாரிகள் உள்பட தவறான நிர்வாகம் ஆகியவற்றைத் தோலுரித்துக் காட்டும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் போராடும் ஆர்வலர்கள் மீதான தாக்குதலும் அதிகரித்து வருவதாக அவர் கவலை வெளியிட்டார்.

மனித உரிமை ஆர்வலர்களின் பணிகளை மதிக்குமாறு பாதுகாப்புப் படையினருக்கு தெளிவான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு எதிராக நடைபெறும் அத்துமீறல்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மனித உரிமைகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி போலீஸ் துறை மறுசீரமைப்பு முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரை செய்துள்ளார்.

அவரது பயணம் தொடர்பான விரிவான அறிக்கை, ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் முன்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

Source & Thanks : bbc.

Leave a Reply

Your email address will not be published.