காய்கறி விலை உயர்வில் எனக்கு தொடர்பில்லை: சரத் பவார்

புதுடில்லி : “காய்கறிகள் விளைவிப்பது தொடர்பாக எமது அமைச்சகத்திற்கு நேரடி தொடர்பு இல்லை’ என மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் கூறினார்.

வெங்காயத்தில் துவங்கி தக்காளி என வரிசையாக காய்கறிகளின் விலை ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. இந்த விலை உயர்வால் மத்திய அரசுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு அலைகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், காய்கறி விலை உயர்வு குறித்து டில்லியில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவாரிடம் நிருபர்கள் கேள்விகள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த சரத்பவார் கூறியதாவது: காய்கறிகள் விலை உயர்வுக்கு எமது அமைச்சரகம் பொறுப்பு ஏற்க முடியாது. காய்கறிகள் விளைச்சலில் எமது அமைச்சகத்துக்கு எவ்வித நேரடி தொடர்பும் இல்லை. காய்கறிகள் பயிரிடுவதும், உற்பத்தி பண்ணுவதும் உள்ளூர் சீதோஷண நிலையை பொறுத்தது. காய்கறிகளை விளைவித்து உள்ளூர் சந்தையில் போய் விவசாயிகள் விற்பார்கள். வெங்காயத்தை பொறுத்தமட்டில் குஜராத்தில் பவநகரில் இருந்தும், மகாராஷ்டிராவில் நாசிக்கில் இருந்தும் வெங்காய வரத்து வந்ததும் ஏறிய விலை குறையத்துவங்கியுள்ளது.வெங்காயத்தினால் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னையில் இருந்து அரசு பாடம் கற்றுக்கொண்டுள்ளது. இவ்வாறு சரத்பவார் கூறினார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.