விலைவாசி உயர்வு பிரச்னையில் கூட்டணி ஆட்சியை கிண்டல் செய்த ராகுலுக்கு எதிர்ப்பு

புதுடில்லி : “”விலைவாசி உயர்வு பிரச்னைக்கு, சரத் பவாரை மட்டும் குறை சொல்வது சரியாக இருக்காது.

விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டியது, ஒட்டுமொத்த அரசின் பொறுப்பு,” என, ராகுலின் பேச்சுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், மாணவர்களுடன் கலந்துரை யாடினார். அப்போது,”இந்திரா பிரதமராக இருந்த காலத்தில், பணவீக்கமும், விலைவாசி உயர்வும் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பணவீக்கத்தையும், ஊழலையும் கட்டுப்படுத்தமுடியாதது ஏன்?’ என, மாணவர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராகுல், “இந்திரா பிரதமராக இருந்த காலத்தில் ஒரு கட்சி ஆட்சியில் இருந்தது. இன்று காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி பதவியில் உள்ளது. அதனால், சில நிர்ப்பந்தங்கள் உள்ளன. அதுவே விலைவாசி உயர்வையும், பணவீக்கத்தையும் மத்திய அரசு கட்டுப்படுத்த முடியாததற்கு காரணம்’ என்றார். விலைவாசி உயர்வுக்கு மத்திய உணவு மற்றும் விவசாய அமைச்சர் சரத் பவாரே காரணம் என, முன்னர் காங்கிரஸ் தலைவர்கள் பலர் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், தற்போது ராகுலும், “கூட்டணி ஆட்சியே காரணம்’ என, தெரிவித்துள்ளது தேசியவாத காங்கிரஸ் கட்சியை எரிச்சல் அடைய வைத்துள்ளது. இது தொடர்பாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் தாரிக் அன்வர் கடுமையாக கூறியதாவது: விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாததற்கு, விவசாய அமைச்சர் சரத் பவாரை மட்டும் குறை சொல்வது சரியாக இருக்காது. அப்படிச் சொன்னால் அது அநீதியாகும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டியது, ஒட்டுமொத்த அரசின் பொறுப்பு. அதனால், ராகுலின் கருத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை.பீகார் தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் எங்கு உள்ளது என்பதையும், அந்தக் கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது நடப்பது கூட்டணி ஆட்சிக்காலம். கூட்டணி அரசுகளை நாம்புறக்கணிக்கக் கூடாது. இவ்வாறு தாரிக் அன்வர் கூறினார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மற்றொரு பொதுச் செயலரும், அக்கட்சியின் தகவல் தொடர்பாளருமான திரிபாதி கூறியதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் காங்கிரசே முதன்மையான கட்சி. அந்தக் கட்சியைச் சேர்ந்த தலைவரின் கருத்து, தாழ்வு மனப்பான்மையை பிரதிபலிக்கிறது. ராகுலின் கருத்து துரதிருஷ்டவசமானது. பவார் உட்பட, எந்த ஒரு தனி அமைச்சரும் விலைவாசி உயர்வுக்கு காரணமாக இருக்க முடியாது, அதற்கு பொறுப்பாகவும் முடியாது. நான் எப்போதும் ராகுலை பாராட்டுபவன், அரசியலில் அவர் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துபவன். அவர் தெரிவித்துள்ள கருத்து உண்மையின் அடிப்படையிலானது அல்ல. உணவு மற்றும் விவசாயத் துறையை கவனிக்கும் சரத் பவாரை, பிரதமர் மன்மோகன் சிங்கே பாராட்டியுள்ளார். தனிக்கட்சி ஆட்சி என்பதற்கு இனி வாய்ப்பே இல்லை. இவ்வாறு திரிபாதி கூறினார். இப்பிரச்னை குறித்து கருத்து தெரிவித்த காங்., தகவல் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, “ராகுல் பேசியது யாரையும் குறை கூறும் நோக்கில் இல்லை; பொதுவாகத்தான் பேசினார்’ என்றார். ஆனால், கூட்டணி அரசியல் பற்றி தெரியாமல், ஏதோ பேசுகிறார் ராகுல் என, பா.ஜ., கருத்து தெரிவித்தது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.