போர்ப்படைக்கு உதவும்: “தேஜஸ்’ முழு வெற்றி

பெங்களூரு : இந்தியாவின் இலகு ரக விமானம் தேஜஸ், விமானப் படையிடம் நேற்று முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு முதல் இந்த விமானம், போர்ப் படை பிரிவில் சேர்க்கப்பட உள்ளது.

பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனமும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமும் இணைந்து, 1983ம் ஆண்டு 560 கோடி ரூபாய் முதலீட்டில் தேஜஸ் இலகு ரக விமான வடிவமைப்பு திட்டம் துவங்கின. தற்போது 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை இத்திட்டத்துக்கு செலவிடப்பட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாய் இந்த விமானத்துக்கு, “தேஜஸ்’ என பெயர் சூட்டினார். 98ம் ஆண்டு “பொக்ரான்’ அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டதால், அமெரிக்காவின் பொருளாதார தடை காரணமாக தேஜஸ் வடிவமைப்பில் பின்னடைவு ஏற்பட்டது.

தேஜஸ் இலகு ரக விமானம் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டது என்ற பெருமை இருந்தாலும், அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிகல் நிறுவனத்தின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதே போல இந்த விமானத்தின் ரேடார் கருவி ரஷ்ய தயாரிப்பாகும். இருந்தாலும் நவீன தொழில்நுட்பம் அதிகம் கொண்டது. விமானப் படையில் 200 தேஜஸ் விமானங்கள் சேர்க்கப்பட்டவுடன், பழைய மிக் ரக போர் விமானங்கள் ஓரங்கட்டப்பட்டு விடும். பெங்களூரில் நேற்று நடந்த விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி, விமானப் படை தளபதி பி.வி.நாயக்கிடம் தேஜசை முறைப்படை ஒப்படைத்தார்.

ராணுவ அமைச்சகத்தின் அறிவியல் ஆலோசகர் சரஸ்வத் குறிப்பிடுகையில், “இந்திய விமான தயாரிப்புத் துறையில் இது ஒரு முக்கியமான நாள். நவீன தொழில்நுட்ப வளர்ச்சி, இந்த விமானத்துக்கு மேலும் பெருமை சேர்த்திருக்கிறது’ என்றார். அமைச்சர் அந்தோணி குறிப்பிடுகையில், “உள்நாட்டு விமான தயாரிப்பில் இது அரையிறுதி தான். தேஜஸ், நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த பேருதவியாக இருக்கும். கடற்படையிலும் இந்த ரக விமானங்கள் விரைவில் சேர்க்கப்படும்’ என்றார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.