ஆஸி., நகரை அச்சுறுத்தும் வெள்ள அபாயம் : வீடுகளை விட்டு வெளியேற மக்கள் மறுப்பு

ராக்ஹேம்ப்டன் : ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிற பகுதிகள் எல்லாம் ஓரளவு மீண்டு வரும் நிலையில், ராக்ஹேம்ப்டன் நகர் மீண்டும் வெள்ள அபாயத்தில் சிக்கியுள்ளது.

அதன் அருகில் ஓடும் ஆறுகளில் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் வடபகுதியில் உள்ள குயின்ஸ்லேண்ட் மாகாணம், கடந்த ஒரு மாத காலமாக வெள்ளத்தில் சிக்கி சீரழிந்து வருகிறது. வெள்ளத்தால் இதுவரை அம்மாகாணத்தில் இரண்டு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 நகரங்கள் நீரில் மூழ்கியுள்ளன. பல பகுதிகளில் தரைவழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லேண்ட் மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றன. அங்கு நிவாரணப் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

நிலக்கரிச் சுரங்கங்களில் 75 சதவீதம் மூடப்பட்டு விட்டதாக அம்மாகாண முதல்வர் அன்னா பிளிக் தெரிவித்துள்ளார். அபாயத்தில் ராக்ஹேம்ப்டன்: மாகாணத்தின் பிற பகுதிகளில் வெள்ள நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ராக்ஹேம்ப்ட்டன் நகர் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு விட்டது. அதன் அருகில் ஓடும் பிட்சோரி ஆற்றின் நீர்மட்டம் தற்போது 31 அடியாக உள்ளது. இது மேலும் உயரும் என்று வானிலை மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நகரின் முக்கிய விமானநிலையம் மூடப்பட்டு விட்டது. மேலும், பல சாலைகள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. இதனால், மக்கள் போக்குவரத்துக்கு சிறிய படகுகளைப் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது ராணுவ வீரர்கள் படகுகள் மூலம் அங்கு உணவு மருந்து பொருட்களைக் கொண்டு செல்கின்றனர். தேவைப்பட்டால் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படும் என்று, பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார்.
மொத்தம் 75 ஆயிரம் பேர் வசித்து வரும் அந்நகரில், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் என்று போலீசார் வற்புறுத்திய போதும் பலர் அங்கிருந்து நகர மறுத்து வருகின்றனர். தற்காலிக முகாமில் இப்போது ஆயிரத்து 500 பேர் தங்கியுள்ளனர். இதனால் மீட்புப் பணியில் மேலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் பாம்புகளும் சேர்ந்து வருவதால் மக்கள் கட்டாயமாக வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இறந்த மூன்று பேர் பாம்புக் கடித்துதான் இறந்து போயினர் என்பது குறிப்பிடத் தக்கது.

பொருளாதார பாதிப்பு
* இந்த வெள்ளத்தால் இதுவரை 5,000 கோடி ரூபாய்க்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
* ஆஸ்திரேலியாவின் மிக முக்கிய ஏற்றுமதியே நிலக்கரி தான். அது குயின்ஸ்லேண்ட் மாகாணத்தில் தான் அதிகளவில் கிடைக்கிறது. வெள்ளத்தால் சுரங்கங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் ஏற்றுமதி தேறுவதற்கு இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகலாம்.
* வெள்ளத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால், பழங்கள், காய்கறிகள், பால் மற்றும் அதைச் சார்ந்த உணவுப் பொருட்களின் விலை எகிறி விட்டது.
* வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கான இன்சூரன்ஸ் தொகையை அதிகளவில் நிதி நிறுவனங்களில் இருந்து வாங்கி வருவதால் நாட்டின் பிரபல “சன் கார்ப்’ என்ற இன்சூரன்ஸ் நிறுவனம் நேற்று பங்குச் சந்தையில் 3 சதவீதம் வர்த்தகத்தை இழந்தது.
* இருப்பினும் வெள்ளத்தால் ஏற்பட்ட இந்த மொத்த இழப்பு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.4 சதவீதம் மட்டுமே இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.