தூய்மையான ஆட்சியையா தந்தார் ஜெயலலிதா?-கருணாநிதி கேள்வி

posted in: தமிழ்நாடு | 0

சென்னை: ஜெயலலிதாவின் கடந்த ஆட்சிக்காலங்களில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை பட்டியலிட்டுள்ள முதல்வர் கருணாநிதி, இதுதான் ஜெயலலிதா தந்த தூய ஆட்சியா என்று கடுமையாக சாடியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜெயலலிதாவின் அறிக்கைகள் சிலவற்றைப் படிக்கும்போது, “அவருக்கு ஏன் நீங்கள் பதில் சொல்கிறீர்கள்” என்று கூட சிலபேர் என்னைக் கேட்கிறார்கள். கேட்பவர்கள் எழுதத் தெரிந்தவர்கள்தான்! ஆனால் அவர்களே இது ஏன் வீண் வேலை என்று கருதுகிறார்கள் போலும்! அதனால்தான் என்னைக் கேட்கிறார்கள்; அது எப்படியோ போகட்டும்! ஜெயலலிதாவின் அறிக்கைகள் சிலவற்றைப் படிக்கும்போது சிரிப்பை அடக்கிக்கொள்ள முடிவதில்லை.

இதற்கோர் உதாரணம் கூறட்டுமா? ஜெயலலிதாவின் 26-ந் தேதிய அறிக்கையில் “2001-2006 ஆட்சி காலத்தில் ஒரு சிறு தவறு கூட நடைபெறாத தூய்மையான ஆட்சியை நான் நடத்தியதால் என் மீது பொய் வழக்குப் போட கருணாநிதிக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை” என்ற வாசகங்களைப் படித்தபோது சிரிப்பு வராமல் என்ன செய்யும்? ஒரு சிறு தவறுகூட நடைபெறாத தூய்மையான ஆட்சியாம்! அதைப் படிக்கின்ற- அ.தி.மு.க. ஆட்சியிலே பணியிழந்த மக்கள் நலப்பணியாளர்களும்- சாலைப்பணியாளர் களும்- பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு அலுவலர்களும்- எஸ்மா, டெஸ்மா சட்டங்களுக்கு ஆளான தொழிலாளர்களும் தங்களுக்குள் என்ன நினைத்துக்கொள்வார்கள்!

தூய்மையான ஆட்சி நடத்தியிருக்கிறார்களாம்- அதனால்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரும் போட்டி போட்டுக்கொண்டு ஜெயலலிதா அணியிலே “நான் முந்தி” – “நீ முந்தி” என்று யார் அவருக்கு “முந்தி”யாக இருப்பது என்று பந்தயம் கட்டிக்கொண்டு அணி திரளுகிறார்கள் போலும்!

முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவியேற்றுக்கொண்டதே தூய்மையற்ற ஆட்சிக்கு உதாரணமாக அமைந்தது. அவர் பதவியேற்றது பற்றி 15-5-2001 தேதிய “இந்து” தனது தலையங்கத்தில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து உறுதியாக தடை செய்யப்பட்ட ஒருவர் (ஜெயலலிதா) முதல்-அமைச்சராவது இதுவே முதல் முறை என்றும், சட்டப்படி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவர் இத்தகைய பதவியில் அமர்வதும் இதுவே முதல்முறை என்றும், இருநிலைகளிலும் அவருடைய செயல் அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை உணர்வையே மீறுவதோடு சட்ட ரீதியாகவும், நியாயப்பூர்வமாகவும் வேதனை அளிக்கும் வினாக்களை எழுப்பியுள்ளது என்றும் எழுதியது.

அன்றைய ஆனந்தவிகடன் வார இதழ் தனது தலையங்கத்தில், தன்மீதுள்ள களங்கத்தை சட்டரீதியாக துடைத்தெறிந்த பிறகே முதல்வர் பதவியில் ஜெயலலிதா அமர வேண்டும், அதுதான் கண்ணியமும், கவுரவமுமிக்க அந்தப் பதவிக்கும் அழகு, அவருக்கும் அழகு என்று எழுதியது.

ஜெயலலிதாவை முதல்-அமைச்சராக நியமித்தது சட்டப்படி செல்லாது என்று தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் 21-9-2001 அன்று உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.பி.பரூச்சா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் வழங்கிய ஒருமனதான தீர்ப்பில் “தமிழக முதல்வராக ஜெயலலிதா நியமனம் செய்யப்பட்டது செல்லாது. அது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இனியும் அவர் முதல்-அமைச்சராக நீடிக்க முடியாது” என்று கூறிய பிறகுதான்; ஜெயலலிதாவின் வழக்கறிஞரான கே.கே.வேணுகோபால், நீதிபதிகளிடம் மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கு சில நாட்கள் அவகாசம் தேவையென்று கேட்டார்.

அதற்கு உச்சநீதிமன்ற நீதிபதி, “முதல்-அமைச்சர் இறந்தால் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யப்படுகிறதே; இவ்வளவு பெரும்பான்மையைப் பெற்றிருக்கும் ஒரு கட்சி எந்த நேரத்திலும் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கலாமே” என்று கூறினார்கள். இதுவும் ஒரு தூய்மையான ஆட்சிக்கு கொடுக்கப்பட்ட சான்றிதழ்தானே? இதற்கு பிறகுதான் இடைக்கால முதலமைச்சர் பதவி பன்னீருக்கு கிடைத்தது!

சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த பரிதி இளம்வழுதி மீது கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்ததோடு, 17-5-2001 அன்று கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். இது ஜெயலலிதா பதவியேற்ற மூன்றாம் நாளிலே செய்த தூய்மையான ஆட்சி நிர்வாகம்!

23-5-2001 அன்று பரிதியின் ஜாமீன் மனுவிலே உயர்நீதிமன்ற நீதிபதி கூறும்போது, பரிதி மீது புகார் கொடுத்தவரே, அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் போலீசார் பரிதி மீது கொலை முயற்சி வழக்கைப் பதிவு செய்தது ஏன் என்று தெரியவில்லை என்று தெரிவித்தார்.

பரிதி இளம்வழுதி மட்டுமல்ல, ஆற்காடு வீராசாமியின் தம்பியை 26-5-2001 அன்றும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பரசுராமனை 27-5-2001 அன்றும், சட்டமன்ற உறுப்பினராக இருந்த புரசை ரெங்கநாதனை 30-5-2001 அன்றும், சட்டமன்ற உறுப்பினராக இருந்த தாமரைக்கனி போன்றவர்களையும் கைது செய்தனர்.

ஏன் என்னையே 29-6-2001 அன்று நள்ளிரவில் வீடு புகுந்து படுக்கையறை வரை வந்து கைது செய்த சம்பவமும் நடைபெற்றது. கைது செய்ததோடு விட்டார்களா? அதையொட்டி முரசொலி மாறனும், டி.ஆர்.பாலுவும் தாக்கப்பட்டதோடு கைதும் செய்யப்பட்டார்கள். மு.க.ஸ்டாலினை கைது செய்து மதுரை சிறைச்சாலைக்குக் கொண்டு சென்றனர். மதுரையில் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன், மு.க.அழகிரி போன்றவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டார்கள். இவையெல்லாம் ஜெயலலிதாவின் தூய்மையான ஆட்சிக்கான சான்றுகள்!

30-5-2001 தேதிய “இந்தியன் எக்ஸ்பிரஸ்” “பழி வாங்கும் நாடகம், இரண்டாம் கட்டம்” என்ற தலைப்புடனும், “போயஸ் தோட்டத்தை விட தமிழ்நாடு பெரியது என்பதை எப்போது ஜெயா உணரப்போகிறார்?” என்ற துணைத் தலைப்புடனும் தலையங்கமே எழுதியது. அந்தப் பழைய பத்திரிகைகளையெல்லாம் வாங்கி இப்போது ஜெயலலிதா படிக்கலாமே?

11-6-2001 அன்று ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் என்று கூறப்பட்ட சுதாகரனையே போலீசார் கைது செய்தனர். அதைப்பற்றி “தி பயனீர்” ஏடு “பத்ரகாளியாக மாறி வஞ்சம் தீர்க்கும் ஆத்திரத்துடன் செயல்பட்டு வரும் ஜெயலலிதா” என்ற தலைப்பில் கட்டுரை தீட்டியது. அதே ஜுன் திங்களில் என் மீது ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டபோது- தற்போது ஜெயலலிதாவின் தூதராக இருந்து கொண்டு அவரை விழுந்து விழுந்து ஆதரிக்கும் “துக்ளக்” – 27-6-2001 இதழில் “கருணாநிதியை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தின் காரணமாகவே இந்தப் பிரச்சினை இந்த வகையில் கையாளப்படுகிறது என்ற சந்தேகத்திற்கு இடம் உண்டு. இம்மாதிரி விஷயத்தில் காட்டப்பட வேண்டிய பொறுப்புணர்வுமிக்க அணுகுமுறையை இந்த அரசு காட்டவில்லை. இது நல்லதல்ல” என்று எழுதியிருந்தது.

தூய்மையான ஆட்சிக்கு எடுத்துக்காட்டாக ஜெயலலிதா 2002-ம் ஆண்டில் எந்த காரணமும் இல்லாமல் பத்தாயிரம் சாலைப்பணியாளர்களை இரவோடு இரவாக பணி நீக்கம் செய்து வீட்டிற்கு அனுப்பினார். இதனை எதிர்த்து சாலைப்பணியாளர்கள் உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், பணி நீக்கம் செய்தது சட்ட விரோதமானது. அந்த உத்தரவு செல்லாது. அதை ரத்து செய்கிறோம். அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது. கடந்த அரசு மக்கள் நலத்திட்டங்கள் படி வேலை வழங்கியது. அதை இந்த அரசு ரத்து செய்தது தவறானது. ஒரு அரசு நல்ல வேலை வாய்ப்பு நிறுவனமாகத் திகழ வேண்டுமே தவிர, இது போல செயல்படக்கூடாது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்றெல்லாம் தீர்ப்பு கூறப்பட்டது.

“தி ஸ்டேட்ஸ்மேன்” ஆங்கில நாளேடு எழுதிய தலையங்கத்தில், “தமிழக சட்டமன்ற தி.மு.கழக உறுப்பினர்களில் ஒருவரும், இரண்டு முறை சென்னை மாநகர மேயராக இருந்தவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை இட்டுக்கட்டிய குற்றச்சாட்டுகளின் மீது நள்ளிரவிலே கைது செய்ததின் மூலம், உச்சநீதிமன்றம் 1994-ம் ஆண்டிலும், 1997-ம் ஆண்டிலும் முறையே ஜோகிந்தர் குமார் வழக்கிலும், டி.கே.பாசு வழக்கிலும் கைது செய்வதற்காக வழங்கிய விதிமுறைகளையெல்லாம் எந்த அளவிற்கு மதிக்கவில்லை என்பதை மீண்டும் ஒரு முறை அ.தி.மு.க. அரசாங்கம் செய்து காட்டியிருக்கின்றது.

மு.க.ஸ்டாலினின் தந்தை மு.கருணாநிதி இரண்டாண்டுகளுக்கு முன்பு சாதாரண குற்றச்சாட்டுகளின் பேரில் இதைப்போலவே நள்ளிரவில் கைது செய்யப்பட்டபோது, எதிர்காலத்தில் அரசியல் சட்டக் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் வேண்டுமென்றே தகராறினை உருவாக்கும் இதுபோன்ற எண்ணத்தைத் தவிர்க்க வேண்டுமென்று மத்திய அரசின் உள்துறை, மாநில அரசினை எச்சரித்தது.

எந்த காரணத்தை முன்னிட்டும் இது போன்ற துரதிருஷ்டவசமான செயல்களில் மற்றொரு முறை ஈடுபடாத அளவிற்கு மாநில அரசு பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும் மத்திய அரசு அப்போது தெரிவித்திருந்தது. 2001-ம் ஆண்டு மீண்டும் பதவியேற்ற நாள் முதல் ஜெயலலிதாவின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கைகளே அதன் செயல்பாடுகளாக உள்ளன” என்று எழுதியிருந்தது.

பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை பொடா சட்டத்தின்கீழ் கைது செய்ததோடு, அவருடைய மாமனார் ஆர்.எஸ்.பாண்டியனை 6-7-2003 அன்று அழைத்துச் சென்றபோது கொடூரமாக மிரட்டியதின் காரணமாக அவர் தூக்குப் போட்டுக் கொண்டு இறந்தே போனார். இதுதான் ஜெயாவின் தூய்மையான ஆட்சிக்கு உதாரணமா?

தமிழகத் தணிக்கைத் துறை அதிகாரி தீத்தன் 31-7-2004 அன்று அ.தி.மு.க. அரசின் தவறான அணுகுமுறையால் 11 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது என்று அறிக்கை கொடுத்தார் என்பதற்காக- அந்தத் தணிக்கைத் துறை அதிகாரியை பதவி நீக்கம் செய்ய வழக்குத் தொடுத்ததோடு, அவருக்கு எதிராக ஏடுகளில் எல்லாம் முழுப் பக்க விளம்பரங்களும் தரப்பட்டன. அந்த ஜெயலலிதாதான் இப்போது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தணிக்கைத் துறை அதிகாரி கொடுத்த அறிக்கையை தலையிலே தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த எம்.கே.பாலன் சென்னையில் 30-12-2001 அன்று கடத்திச் செல்லப்பட்டவர் பின்னர் கண்டுபிடிக்கப்படவே இல்லை. 2003-ம் ஆண்டு மார்ச் திங்களில் ஜெயலலிதா அரசு மின் கட்டணங்களை சுமார் 1400 கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்தியது. தி.மு.கழக ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை அ.தி.மு.க. அரசு ரத்து செய்தது.

7-5-2002 அன்று “பிளாஸ்டிக்” பொருள்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்து சட்டப்பேரவையில் ஒரு மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. 30-1-2003 அன்று இந்த சட்ட முன்வடிவு அ.தி.மு.க. அரசினராலேயே திரும்பப் பெறப்பட்டது. இடையில் என்ன நடந்தது? தூய்மையான ஆட்சிக்குத்தான் வெளிச்சம்!

2003-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற அரசு அலுவலர், ஆசிரியர் போராட்டம் ஜெயாவின் தூய்மையான ஆட்சி நிர்வாகத்திற்கு மற்றும் ஓர் சான்றாகும். அரசு ஊழியர்களை அவர்களுடைய வீடுகளுக்கே சென்று நள்ளிரவில் போலீசார் கைது செய்த கொடுமையும் அப்போது நடைபெற்றது. சுமார் 2 லட்சம் அரசு அலுவலர்கள் தங்கள் நிலைக்கு விளக்கமளிக்க வாய்ப்பு அளிக்கப்படாமலே வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள். அது குறித்த வழக்கிலே என்ன தீர்ப்பு வருமோ என்றுகூடக் காத்திருக்காமல், புதிதாக 15,500 பேரை பணி நியமனம் செய்தார்கள். வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று, பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு அலுவலர்களை மீண்டும் பணியிலே அமர்த்த நீதிபதி உத்தரவிட்டார்.

2002-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் வாரத்தில் ஜெயலலிதா அரசு மற்றுமோர் தூய்மையான நிர்வாகத்திற்கு உதாரணமாக, மதம் மாறுவதைத் தடை செய்து அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. அதைக் கண்டித்து தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தும் ஜெயா கேட்கவில்லை. 2003-ம் ஆண்டு ஜுன் திங்கள் முதல் வாரத்தில் போப் ஆண்டவரே அதனைக் கண்டித்தார். அதுபற்றிகூட ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், “இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் நிறைவேற்றும் சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்கவோ, எதிர்ப்பு தெரிவிக்கவோ போப்புக்கு எந்த விதமான அதிகாரமும் கிடையாது, உரிமையும் கிடையாது” என்றார். இந்தச் செய்தியைக் கூட கன்னியாகுமரி மாவட்ட கிறித்தவர்கள் சிலர் மறந்து விட்டது தான் ஆச்சரியத்திலும் ஆச்சர்யம்!

திரைப்படத் துறையிலும் ஜெயலலிதாவின் தூய்மையான நிர்வாகம் குறுக்கிடாமல் இல்லை. 2003-ம் ஆண்டு திரைப்படத் துறையினர் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியிருந்த நேரத்தில் ஜெயா ஆட்சியில் படப்பிடிப்புக் கட்டணங்கள் எல்லாம் 25 மடங்கு அதிகமாக உயர்த்தப்பட்டது.

ஜெயலலிதா தனது ஒவ்வொரு அறிக்கையிலும் இந்த ஆட்சியிலே மணல் கொள்ளை, விலை உயர்வு என்றெல்லாம் எழுதத் தவறுவதில்லை.

அவருடைய தூய்மையான ஆட்சியிலே மணல் கொள்ளை பற்றி 4-5-2003 தேதிய “கல்கி” தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்த ஒரு பகுதி இதோ:- “நிர்வாகத்தில் அரசியல் தலையீடு இருந்தே தீரும் என்பதற்கு மணல் குவாரி காண்டிராக்ட் நிதர்சன எடுத்துக்காட்டு! அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த சில நாட்களுக்குள்ளேயே ஆற்று மணல் விலை கணிசமாக உயர்ந்தது. ஏன் இந்தத் திடீர் விலை உயர்வு என்று விசாரித்த போது, அதெல்லாம் கண்டுக்காதீங்க, தேவையில்லாமல் தலையை நுழைச்சா, மீண்டு வருமா சந்தேகம் தான் என்ற பதிலே கிடைத்தது. அதற்கேற்பத்தான் இன்று, தட்டிக் கேட்கப்போன ஓர் அதிகாரி, மணல் லாரியாலேயே இடித்துத் தள்ளப்பட்டு பரிதாபமாக உயிர் துறந்திருக்கிறார். இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான அதிகாரி இவர் மட்டுமல்ல, இவருக்கு முன்னும் பலர் இருந்திருக்கிறார்கள். மணல் குவாரியில் இறங்கிய காண்டிராக்டர்களுக்கு இவ்வளவு துணிவு எங்கிருந்து வந்தது? ஒரு லாரி லோடுக்கு இவ்வளவு என்று நிர்ணயித்து வாங்கப்படும் லஞ்சப் பணம்தான் இத்தகைய துணிவைத் தர முடியும். அங்கிங்கெனாதபடி எங்கும் பரவியுள்ள லஞ்ச ஊழலும், அதன் நேரடி விளைவான அரசியல் தலையீடும் நீக்கப்பட்டாலன்றி சண்முகசுந்தரம் போன்ற அரசு அதிகாரிகள் பலரை நாம் பரிதாபமாகப் பலி கொடுக்கத்தான் நேரும்”- ஜெயலலிதாவின் தூய்மையான ஐந்தாண்டு கால ஆட்சிக்கு இந்த ஒரு உதாரணம் போதாதா?

இந்த பட்டியலை இத்துடன் நிறுத்திவிடுகிறேன். ஜெயலலிதா 2001-2006-ம் ஆண்டு தூய்மையான நிர்வாகம் நடத்தியதாகவும், அதனால்தான் அவர் மீது வழக்குப் போடவில்லை என்றும் அறிக்கையில் எழுதியிருந்த காரணத்தால் இத்தனை விளக்கங்களையும் அளித்துள்ளேன். 1991-1996-ம் ஆண்டுகளில் அவர் ஆட்சியிலே இருந்த போது நடத்திய ஊழல்களுக்காக போடப்பட்ட வழக்குகளே பெங்களூர் போன்ற சிறப்பு நீதிமன்றங்களில் இன்னும் நீடித்துக்கொண்டிருக்கையில் 2001-2006-ம் ஆண்டு நடைபெற்றவைகளுக்காக வழக்கு என்றால், அது எப்போதுதான் முடியுமோ? என்று கேட்டுள்ளார் கருணாநிதி.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.