மாணவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி ஆந்திராவில் உண்ணாவிரதம்

ஐதராபாத் : தெலுங்கானா தனிமாநில போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெறக்கோரி, காங்கிரஸ் எம்.பி.,க்களும், எம்.எல்.ஏ.,க்களும் ஐதராபாத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

தனி தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கக்கோரி நடந்த போராட்டத்தின் போது, பஸ்கள் மீது மாணவர்கள் பலர் தாக்குதல் நடத்தினர். சிலர் கடைகளை அடித்து நொறுக்கினர். இது தொடர்பாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை வாபஸ் பெறும் படி தெலுங்கானா பகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.,க்களும், எம்.எல்.ஏ.,க்களும் மத்திய அமைச்சர் சிதம்பரத்திடம் கோரியிருந்தனர். உரிய காலத்தில், இந்த வழக்குகளை வாபஸ் பெறுவதாக அவர் உறுதியளித்திருந்தார். ஆனால், 600 சிறு வழக்குகள் மட்டுமே வாபஸ் பெறப்பட்டுள்ளன. தெலுங்கானா போராட்டம் தொடர்பாக, மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறக்கோரி தெலுங்கானா பகுதியை சேர்ந்த 11 எம்.பி.,க்களும், 20 எம்.எல்.ஏ.,க்களும் ஐதராபாத்தில் எம்.எல்.ஏ.,விடுதி அருகே நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

காங்கிரஸ் ராஜ்யசபா உறுப்பினர் கேசவராவ் குறிப்பிடுகையில், “”தெலுங்கானா பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள துணை ராணுவ படையினரை வாபஸ் பெற வேண்டும். தனி தெலுங்கானா மாநிலத்தை உருவாக்குவதற்குரிய மசோதாவை பார்லிமென்ட்டில் நிறைவேற்றாவிட்டால், எங்கள் ராஜினாமா கடிதத்தை விரைவில் சோனியாவுக்கு அனுப்புவோம்,” என்றார். ஆந்திராவில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கக்கோரி, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டார். எட்டு நாட்களுக்குப் பின், அரசியல் கட்சித் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று, உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். அதேபோல், மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும் 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இதைத் தொடர்ந்து, தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும் தங்களின் பங்கிற்கு உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று மாலையில் நிருபர்களிடம் பேசிய ஆந்திர ஜவுளித் துறை அமைச்சர் சங்கர் ராவ், “”834 பேருக்கு எதிரான 134 வழக்குகளை வாபஸ் பெற அரசு தற்போது சம்மதம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே 2,437 பேருக்கு எதிரான 565 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இப்போது கூடுதலாக இவை வாபஸ் பெறப்படுகின்றன. முதல்வர் கிரண்குமார் ரெட்டி தலைமையில் நடந்த உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது,” என்றார். இருந்தாலும், 2009 டிசம்பர் முதல் 2010 செப்டம்பர் வரை, 8,400 பேருக்கு எதிராக தொடரப்பட்ட 1,665 வழக்குகளையும் நிபந்தனையின்றி வாபஸ் பெற வேண்டும் என, காங்கிரஸ், தெலுங்குதேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அந்தக் கோரிக்கையை ஆந்திர மாநில அரசு நிராகரித்து விட்டது.

“டிவி’ சேனல்களுக்கு அறிவுறுத்தல்: புதுடில்லி: தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய, மத்திய அரசு அமைத்த ஸ்ரீகிருஷ்ணா கமிஷன், வரும் 31ம் தேதி தனது அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதால், அது தொடர்பான செய்திகளை எச்சரிக்கையுடன் வெளியிடும்படி “டிவி’ செய்தி சேனல்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கும்படி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் நீண்ட காலமாக வற்புறுத்தி வருகின்றன. ஆளும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தனி தெலுங்கானா கோரி அடிக்கடி போராட்டம் வெடிப்பதால், இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிஷன், வரும் 31ம்தேதி தன்னுடைய அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. ஏற்கனவே, தெலுங்கானா தொடர்பான விஷயங்களால் கலவரம் ஏற்படும் அபாயம் உள்ளதால், தெலுங்கானா பகுதிகளில் மத்திய ரிசர்வ் படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வரும் 31ம் தேதி ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை தாக்கல் செய்ததும், அது தொடர்பாக பல்வேறு கோணங்களில் செய்திகளை ஒளி பரப்ப “டிவி’ செய்தி சேனல்கள் காத்திருக்கின்றன. இந்த செய்தி சேனல்களால், சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, செய்தி ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. தனி தெலுங்கானா தொடர்பாக தற்கொலை, போராட்டம், வன்முறை போன்றவை நடந்துள்ளன. இனியும் நடப்பதற்கு வாய்ப்புள்ளதால் இது தொடர்பான செய்திகளால் மேலும் பிரச்னை அதிகரிக்காதவாறு, செய்திகளை தணிக்கை செய்து வெளியிடும் படி, அனைத்து செய்தி சேனல்களுக்கும், செய்தி ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.