திமுகவுடன் தர்ம யுத்தம்: ஜெயலலிதா ஆவேசம்

posted in: தமிழ்நாடு | 0

சென்னை: திமுகவுக்கும், அதிமுகவுக்கும் நடைபெறும் யுத்தம், தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடைபெறும் யுத்தம். 3 முறை புரட்சி தலைவர் திமுகவை வீழ்த்தி ஆட்சிக்கு வந்தார்.

நான் 2 முறை வீழ்த்தினேன். ஆனால் திமுகவை இதுவரை நிரந்தரமாக அகற்ற முடியவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் கூறினார்.

இன்று எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது சமாதியில் ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் பேசுகையில்,

மறைந்த பின்னரும் மறக்க முடியாத மாமனிதராய் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். விரைவில் தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில் இன்று இங்கு கூடியிருக்கிறோம்.

இந்த நேரத்தில் அதிமுக கடந்து வந்த வெற்றிப் பாதையையும், சந்தித்த சோதனைகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். திருக்குவளையில் இருந்து சென்னைக்கு வந்த கருணாநிதி அதிமுகவை ஒழித்துக்கட்ட திட்டமிட்டார். ஆனால் அதிமுகவை நிறுவிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கட்சி உருவான சில மாதத்தில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் முதல் வெற்றி பெற்றார்.

அதைத் தொடர்ந்து 1977 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்றார். இதைக் கண்டு பொறுக்காத கூட்டம் 1980ல் அதிமுக அரசை கலைக்கச் செய்தது. ஆனால் சில மாதங்களில் நடந்த பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று முதல்வரானார்.

கட்சிப் பணி, ஆட்சிப் பணி ஆகிய இரண்டையும் ஒன்றாக கவனிக்க முடியாத சூழ்நிலையில் 1983ல் என்னை கொள்கை பரப்பு செயலாளராக நியமித்தார். 1984ம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினராக அனுப்பி வைத்தார்.

எதிர்பாராத விதமாக 1984ம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த ஆண்டு இறுதியில் வந்த பொதுத் தேர்தலில் தேர்தல் களத்தில் புரட்சித் தலைவர் இல்லாத சூழ்நிலையில் நான் கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய்து கட்சிக்கு வெற்றிக் கனியை ஈட்டித் தந்தேன்.

3வது முறையாக புரட்சித் தலைவர் முதல்வரானார். 1987ல் அவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து துரோகிகள் துணையோடு கழகத்தை பிளவுபடுத்தினார்கள். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. 1989ல் பிளவுபட்டுக் கிடந்த கழகத்தை ஒன்றிணைத்து இரட்டை இலை சின்னத்தையும் மீட்டு புத்துணர்ச்சி ஏற்படுத்தினேன்.

அதைத் தொடர்ந்து மதுரை கிழக்கு, மருங்காபுரி தொகுதி இடைத் தேர்தல்களில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதால் 1991ல் கருணாநிதி அரசு கலைக்கப்பட்டது.

அதே ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் நமது கழகம் அமோக வெற்றி பெற்று நான் முதல்வரானேன். என்னுடைய ஆட்சிக் காலத்தில் தொட்டில் குழந்தை திட்டம், 8வது உலகத் தமிழ் மாநாடு, சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கம், கோயம்பேடு பஸ் நிலையம் உள்பட பல சாதனைகளைப் படைத்தோம்.

தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது. விலைவாசி கட்டுக்குள் இருந்தது. 1996 தேர்தலில் கழகத்துக்கு எதிராக பொய்யையும், புரட்டுகளையும் வெளியிட்டு ஆட்சி கட்டிலில் அமர்ந்தார் கருணாநிதி.

1996-2001 வரை கருணாநிதி மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றவில்லை என்னை பழிவாங்குவதையே குறிக்கோளாக கொண்டிருந்தார். எனக்கு எதிரான பொய் வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்தேன். 12 வழக்குகளில் நிரபராதி என்று தீர்ப்பு வந்தது. ஒரு வழக்கு அவர்களாலேயே வாபஸ் பெறப்பட்டது. இதன் மூலம் என் மீது போடப்பட்ட வழக்குகள் பொய் வழக்கு என்பது தெளிவானது.

அனைத்து தடைகளையும் மீறி 2001 பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று முதல்வரானேன். திருக்கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் அன்னதான திட்டம், மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள், 1 முதல் 12ம் வகுப்பு வரை இலவச பாடப் புத்தகங்கள், உழவர் பாதுகாப்பு திட்டங்கள், மழை நீர் சேமிப்பு திட்டம் இப்படி பல முத்தான மக்கள் நல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழகம் மீண்டும் அமைதிப் பூங்காவாக மாறியது. சென்னை மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கருணாநிதியின் தடைகளையும் மீறி புதிய வீராணம் திட்டத்தை நிறைவேற்றினேன்.

எம்ஜிஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை கேலியும் கிண்டலும் செய்தார்கள். ஆனால் அந்த திட்டத்தை இன்று வரை அவர்களால் தவிர்க்க முடியவில்லை. அதே போல் நான் அறிமுகப்படுத்திய மாணவர்களுக்கு இலவச சைக்கிள் இலவச பாடப் புத்தகம் போன்ற திட்டங்களை தவிர்க்க முடியவில்லை.

இப்படி தவிர்க்க முடியாத மக்கள் நலத் திட்டங்களை தந்த மாபெரும் மக்கள் சக்திதான் அதிமுக. ஆனால் மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி நிறைவேற்ற முடியாத இலவச திட்டங்களை அறிவித்தார். இப்போது அலங்கோல ஆட்சி நடக்கிறது. 6.5 கோடி மக்களை வேதனையில் தள்ளியிருக்கிறார்கள்.

விலைவாசி உயர்வு, மணல் கொள்ளை, நில அபகரிப்பு, திரைப்பட துறையில் தலையீடு, சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு சமூக விரோதிகளுக்கு துணை போதல் நடைபெறுகிறது.

மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு இல்லை.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டார்கள்.

இப்போது திமுகவுக்கும், அதிமுகவுக்கும் நடைபெறும் யுத்தம், தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடைபெறும் யுத்தம். 3 முறை புரட்சி தலைவர் திமுகவை வீழ்த்தி ஆட்சிக்கு வந்தார். நான் 2 முறை வீழ்த்தினேன். ஆனால் நிரந்தரமாக இதுவரை அகற்ற முடியவில்லை.

எதிரிகளை தாக்கும் விதத்திலும் சில வழிகள் உண்டு. லேசாக தாக்கினால் தள்ளாடுவார்கள். பலமாக தாக்கினால் விழுந்து விடுவார்கள். ஆனால் எழுந்து விடுவார்கள். இனி எதிரிகள் எழுந்திருக்க முடியாதபடி நம்முடைய அடி மரண அடியாக இருக்க வேண்டும்.

2011ல் அதிமுக ஆட்சி அமையப்போவது உறுதி. அந்த அளவுக்கு இந்த அரசு மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. நீங்கள் துணிவோடு பணியாற்றுங்கள் எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாதீர்கள். உங்களுக்கு வழிகாட்ட, துணை நிற்க நான் இருக்கிறேன். நமக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டார்கள். அந்த வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் கொண்டு சேர்க்க நீங்கள் தயாராகுங்கள்.

உங்களிடையே உள்ள வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றிக் கனியை ஈட்டுங்கள். புதிய வரலாறு படைக்க உற்சாகத்துடன் பணியாற்றுங்கள். தமிழகம் அனைத்து துறைகளிலும் பின்நோக்கி செல்கிறது.

மீண்டும் தமிழகத்தை முன்னோக்கி கொண்ட வர சட்டத்தின் ஆட்சியை மீண்டும் நிலைநாட்ட புரட்சித் தலைவரின் நல்லாட்சி அமைய இந்த நாளில் சபதம் ஏற்போம். வெற்றிக் கனியை பறிப்போம் என்றார் ஜெயலலிதா.

Source & Thanks : maalaimalar

Leave a Reply

Your email address will not be published.