இன்று ‘ஹெவி’ ஜிசாட் 5 பியை ஏவுகிறது இந்தியா!

சென்னை: தொலைக்காட்சி, தொலை மருத்துவம் மற்றும் தொலைக் கல்வி போன்றவற்றை மேம்படுத்தும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறை இஸ்ரோ அதிக எடை கொண்ட ஜிசேட் 5 பி- செயற்கைக் கோளை இன்று மாலை விண்ணில் செலுத்துகிறது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்திலிருந்து மாலை 4 மணிக்கு சீறிக் கிளம்பும் இந்த செயற்கைக்கோளுக்கான கவுன்ட் டவுன் நேற்று தொடங்கியது.

கடந்த ஆண்டு இந்திய தொழில்நுட்பத்தில் உருவாகி தோல்வியடைந்த ஜிஎஸ்எல்வி – டி 3-க்குப் பிறகு, நடக்கும் ஜிஎஸ்எல்வி முயற்சி இது.

இந்த ஜிசாட் 5 பி செயற்கைக் கோள் 24 சி பேண்ட் ட்ரான்பாண்டர்கள் மற்றும் 12 விரிவாக்கப்பட்ட சி பேண்ட்கள் கொண்டது. தொலைக்காட்சி சேவையை மேம்படுத்தவும், தொலைக் கல்வி மற்றும் தொலை மருத்துவம் போன்ற வசதிகளை சிறப்பாக அளிக்கவும் இந்த செயற்கைக் கோள் பயன்படும்.

ரஷ்யாவின் கிரயோஜெனிக் எஞ்ஜின் மூலம் இந்த முறை ஜிஎஸ்எல்வி இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

12 ஆண்டுகள் இயங்கக்கூடிய வகையில், பெங்களூர் இஸ்ரோ சாட்டிலைட் மையத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக் கோள், ஜிசாட் வரிசையில் தயாராகியுள்ள 5வது செயற்கைக் கோள் ஆகும்.

கடந்த டிசம்பர் 20-ம் தேதி செலுத்த உத்தேசித்து பின் தள்ளிப்போடப்பட்டது இந்த செயற்கைக் கோள்.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.