ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பெரிய எதிர்க்கட்சிகளின் வேகம் குறைந்தது ஏன்?கருணாநிதி

posted in: தமிழ்நாடு | 0

சென்னை : “ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பார்லிமென்ட் கூட்டுக் குழு அமைத்தே தீர வேண்டும் என, பார்லிமென்டை நடத்த விடாமல் செய்த பெரிய எதிர்க்கட்சிகள் எல்லாம் இப்போது அதைப் பற்றி வேகமாகக் குரல் கொடுக்காதது ஏன்?’ என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:மத்தியிலும், மாநிலத்திலும் அரசியல் பலம் வாய்ந்த பெரும்பாலானோர் ஸ்பெக்ட்ரம் ஊழலின் பின்னணியிலும், ஊழலுக்கு துணையாகவும் செயல்பட்டிருக்கின்றனர் என்ற ஜெயலலிதாவின் அறிக்கையை பார்க்கும் போது, சிரிப்பு தான் வருகிறது.ஊழலைப் பற்றி ஜெயலலிதா குற்றம் சாட்டி அறிக்கை விட்டால், சிரிப்பு வராதா என்ன? அதிலும், சி.பி.ஐ., விசாரணையை சுப்ரீம் கோர்ட் கண்காணிக்கும் என்ற தீர்ப்பை தான் வரவேற்பதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார்.சுப்ரீம் கோர்ட் இந்த ஒரு வழக்கில் மாத்திரமா தீர்ப்பு சொல்லியிருக்கிறது. தமிழக அரசுக்கு சொந்தமான டான்சி நிலத்தை, முதல்வர் பொறுப்பில் இருந்த ஜெயலலிதா, அடிமாட்டு விலைக்கு வாங்கியதைப் பற்றி சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை ஜெயலலிதா வரவேற்றாரா? அதற்காக வெட்கப்பட்டாரா? மனசாட்சிக்கு இடம் கொடுத்தாரா?

அப்படிப்பட்டவர் தற்போது ஊழல் பற்றி அறிக்கை விட தகுதி படைத்தவரா?கடந்த 1993 – 94ம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை ஜெயலலிதா தாக்கல் செய்யவில்லையென வருமான வரித்துறையே அவர் மீது வழக்கு தொடுத்தது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நடந்த அந்த வழக்கு குறித்து, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் விமர்சனம் செய்ததை ஜெயலலிதா மறந்து விடலாமா? சுப்ரீம் கோர்ட்டின் கருத்தை ஜெயலலிதா மதித்தாரா? வரவேற்றாரா? அது பற்றி அறிக்கை விட்டாரா?ஜெயலலிதாவின் வீட்டைச் சோதனையிட்ட போது கிடைத்த பொருட்கள், அதன் மதிப்பு குறித்து சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பட்டியலே வெளியானது. இந்த சொத்துகள் எப்படி ஜெயலலிதாவிற்கு கிடைத்தன? அவை ஊழல் சொத்துகள் தானே.கடந்த 1991ம் ஆண்டு ஜூலை மாதம் 1ம் தேதியன்று, ராஜ்யசபாவில் வெளியிடப்பட்ட விவரப்படி எடுத்துக்கொண்டால், அப்போது ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு 2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய். ஐந்து ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த பின், 1996ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் தேதி அவரின் சொத்து மதிப்பு 66 கோடியே 44 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய்.

இந்த 66 கோடி ரூபாய் சொத்துகள் எப்படி வந்தன? இதற்காகத்தானே, பெங்களூரில் வழக்கு விசாரணை நடக்கிறது. இந்த வழக்கை தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு மாற்றும் போது, நீதிபதிகள் கூறிய காரணங்களை மறக்க முடியுமா?பெங்களூரு வழக்கு விசாரணையை எந்த அளவிற்கு தாமதப்படுத்த முடியுமோ, அந்த அளவிற்கு தாமதப்படுத்த முயற்சிக்கிறார். தற்போது கூட, அந்த வழக்கை தாமதப்படுத்த, சுப்ரீம் கோர்ட் வரை ஜெயலலிதா மேல் முறையீடு செய்தார். ஆனால், வழக்கு விசாரணை யை தடை செய்ய மறுத்து தீர்ப்பளித்துள்ளதும் சுப்ரீம் கோர்ட் தானே! ஊழல் என்றால் என்ன விலை என்று கேட்கக்கூடிய அள விற்கு தன்னை உத்தமியாகக் கருதிக் கொண்டு, ஜெயலலிதா ஊழலைப் பற்றி கேள்வி கேட்கலாமா?ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பார்லிமென்ட் கூட்டுக் குழு அமைத்தே தீர வேண்டும் என பார்லிமென்டை நடத்த விடாமல் செய்த பெரிய எதிர்க்கட்சிகள் எல்லாம் இப்போது அதைப் பற்றி வேகமாகக் குரல் கொடுக்காதது ஏன்?இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.