இந்தியாவையும் விமர்சிக்கிறது “விக்கிலீக்ஸ்’ : சகிப்பு தன்மைக்கு பாராட்டு

வாஷிங்டன் : இதுவரை வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரக செய்திகளை வெளியிட்ட “விக்கிலீக்ஸ்’ ரகசிய ஆவணங்கள், இப்போது சிறிது சிறிதாக, இந்தியா பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

இந்தியாவின் சகிப்பு தன்மை, காஷ்மீர் பிரிவினை தலைவர் ஒருவருக்கு விசா வழங்க அமெரிக்க தூதரகம் எதிர்ப்பு தெரிவித்தது, மியான்மரில் ஜனநாயகம் குறித்த இந்தியாவின் கவலை போன்றவற்றை, ரகசிய ஆவணங்கள் வெளியிட்டுள்ளன.

கடந்த 2006 ஏப்ரலில், டில்லி அமெரிக்க தூதரகரத்தில் இருந்து அனுப்பப்பட்ட தகவல் ஒன்றில் கூறப்பட்டிருப்பதாவது: இந்திய முஸ்லிம்கள், இந்துக்களுடன் கொண்டுள்ள நெகிழ்வான உறவுகள், ஒரு ஜனநாயக பன்முகத் தன்மை கொண்ட சமூகத்தில் பயங்கரவாதத்தை எவ்விதம் எதிர் கொள்வது என்பதை நமக்கு காட்டுகிறது. உலகின் பெரும் மதங்கள் அனைத்தும் சுதந்திரமாக கலந்துறவாடும் இந்தியா, ஒரு ஜனநாயக நாடு. அதேநேரம் அங்கு பல மதங்கள், பல கலாசாரங்கள், பல இனங்கள் என கலவையான சமூகமும் உள்ளது. பயங்கரவாதத்துக்கு பல நாடுகள் இரையாகிவிட்ட சூழலில், இந்தியா தனது, சமூக நல்லிணக்கம், அகிம்சை வழியிலான அரசியல் போராட்டம் மற்றும் சுயேச்சையான ஊடகங்கள் ஆகியவை மூலம் சரியான வழியில் சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2007 ஜூனில், அமெரிக்க தூதரகம் அனுப்பிய தகவல் ஒன்றில், அப்போதைய காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீது அமைச்சரவையில் அமைச்சராக இருந்த உஸ்மான் அப்துல் மஜீத்துக்கு, அமெரிக்க விசா வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அந்த தகவலில் கூறப்பட்டிருப்பதாவது: இக்வான் உல் முஸ்லிமின் என்ற அமைப்பின் தலைவராக உஸ்மான் உள்ளார். அந்த அமைப்பு, காஷ்மீர் பொதுமக்களை, சித்ரவதை செய்தல், சட்டத்தை கையில் எடுத்து கொண்டு கொலை செய்தல், கற்பழிப்பு, சுரண்டல் போன்றவற்றுக்கு புகழ் பெற்றது. பயங்கரவாதிகளுக்கு துணை போகிறது. அந்த அமைப்பு மனித உரிமைகளுக்கு எதிராக செயல்பட்டுள்ளது. அதனால் அவருக்கு விசா வழங்க முடியாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கடந்த 2004ல் தெற்காசியாவுக்கான இந்திய துணை செயலர் மித்ரா வசிஷ்டா, அமெரிக்க தூதரக அதிகாரிகளுடன் பேசியது குறித்து ஆவணங்கள் கூறியதாவது: மியான்மரில் ஜனநாயகத்தை ஊக்குவிப்பது குறித்த அமெரிக்காவின் யோசனைகளை இந்தியா வரவேற்கும் என்று வசிஷ்டா தெரிவித்தார். மேலும் அவர், “மேலும் மேலும் அந்நாட்டின் மீது தடைகளை விதித்தால் அது தனிமைப்பட்டு போகும். அதேநேரம் அங்குள்ள ராணுவத்துடன் கூட்டுப்பயிற்சி மேற்கொள்ள, எந்த திட்டமும் இல்லை. அவுங் சான் சூகியின் காலம் வரலாம், போகலாம். ஆனால், மியான்மர் மக்களுடன் கொள்ளும் தொடர்பு மூலமே அங்கு ஜனநாயகத்தை வளர்க்க முடியும்,’ என்றார். இவ்வாறு அந்த ஆவணங்கள் தெரிவித்துள்ளன.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.