சர்வமும் நானே சர்வரும் நானே: சீன ஓட்டலில் அசத்தும் ரோபோ

பீஜிங்: சீனாவின் ஜினான் நகரில் புதிதாக ஒரு ஓட்டல் திறக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 6 சர்வர்கள். 6 பேரும் ரோபோக்கள்.

இவர்கள் பரிமாற வசதியாக டேபிள்கள் அனைத்தும் வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருக்கின்றன. ரோபோக்கள் வருவதற்கு சைக்கிள் போன்ற வாகனமும் இருக்கிறது.

ஆர்டர் செய்த ஐட்டங்களை கிச்சனில் இருந்து எடுத்து வருவது ரோபோக்கள்தான். டிரேயில் வைத்து தள்ளியபடி சைக்கிள் வாகனத்தில் வருகின்றன. சாப்பிடுகிறவரின் அருகில் வந்ததும் டிரேயில் இருப்பவற்றை அவர்கள் முன்பு எடுத்து வைக்கின்றன. ‘போதும்’ என்று கமாண்ட் கொடுத்தால் காலி பாத்திரங்களை எடுத்து டிரேயில் வைத்துக்கொண்டு சென்று விடுகின்றன.

முழுக்க முழுக்க ரோபோக்களே பரிமாறுகிற வகையில் எல்லா வசதிகளையும் ஷான்டாங் டாலு அறிவியல், தொழில்நுட்ப நிறுவனம் செய்து கொடுத்திருக்கிறது. பரிமாறுவது மட்டுமல்லாமல் பாத்திரங்களை எடுத்துக் கொடுப்பது, சமையலுக்கு உதவுவது போன்ற வேலைகளையும் தற்போது ரோபோக்கள் செய்து வருகின்றன.

கீழே இருந்து மாடிக்கு காய்கறி, மளிகைப்பொருள் ஏற்றுவது, பத்துப் பாத்திரங்கள் கழுவுவது, ஓட்டலை பெருக்கித் துடைப்பது போன்ற வேலைகளையும் செய்யும் வகையில் விரைவில் புதிய ரோபோக்கள் ‘பணி நியமனம்’ செய்யப்படுவார்கள் என்கின்றனர் ஷான்டாங் டாலு நிறுவன ஆராய்ச்சியாளர்கள்.

Source & Thanks : dinakaran

Leave a Reply

Your email address will not be published.