ஊழல் பற்றி பா.ஜ., பேச உரிமை ஏது? நிதியமைச்சர் பிரணாப் காட்டம்

புதுடில்லி : “தெகல்கா ஊழலில் ஈடுபட்டதாக பா.ஜ., தலைவராக இருந்தவர் மீது, ஆதாரபூர்வமாக குற்றம் சாட்டப்பட்டது.

எனவே, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் குறித்து பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறுவதற்கு, பா.ஜ., தலைவர்களுக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை’ என, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.

“ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் நடந்த முறைகேடு குறித்து பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மத்திய அரசு இதை ஏற்க மறுக்கிறது. இதனால், கடந்த இரண்டு வாரங்களாக பார்லிமென்ட் முடங்கியுள்ளது.குளிர்கால கூட்டத்தொடர் துவங்கியதில் இருந்து பார்லிமென்டின் இரு அவைகளும் செயல்படவில்லை. மேலும், வரலாற்றில் புதுமையாக, நிதித்துறை சார்ந்த மற்றும் ரயில்வே துறை சம்பந்தப்பட்ட மானியக் கோரிக்கைகள் எவ்வித விவாதமும் இன்றி கூச்சலுக்கு நடுவே குரல் ஓட்டெடுப்பில் நிறைவேறின. முதல் 11 நாட்கள் பார்லிமென்ட் நடைபெறாததால் உத்தேச இழப்பு ரூ.75 கோடி என்று கூறப்படுகிறது. அதைவிட, ஜனநாயகத்தின் கோட்பாட்டிற்கு பார்லிமென்ட் செயல்படுவது அவசியம். அதை வெளிப்படையாக முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி,”நாம் பெரிய ஜனநாயக நாடு என்று பெருமை பேசுகிறோம்; ஆனால் பார்லிமென்ட் நடக்கவில்லை.

முக்கியமாக, மக்கள் சம்பந்தப்பட்ட மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டன. அப்படி மசோதாக்கள் நிறைவேறியதை யாரும் ஆட்சேபிக்கவில்லை’ என்கிறார்.ஆனால், எதிர்க்கட்சிகள் விவாதம் செய்தால், அதை அனுமதிக்குமா ஆளும் தரப்பு என்பது எதிர்க்கட்சிகளின் கேள்வி. மாறாக பார்லிமென்ட் முடக்கப்பட்டதால், ராஜா பதவி ராஜினாமா, காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல், ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல் பற்றி ஓரளவு தகவல்கள் வந்து அடுத்தடுத்த நடவடிக்கைகள் வந்திருக்கின்றன என்ற கருத்தை எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

இந்நிலையில், இதுகுறித்து மத்திய நிதி அமைச்சரும், காங்., மூத்த தலைவர்களில் ஒருவருமான பிரணாப் முகர்ஜி கூறியதாவது:முந்தைய தே.ஜ., கூட்டணி ஆட்சியில் என்ன நடந்தது என்பதை மக்கள் மறந்து விடவில்லை. அப்போது பா.ஜ., தலைவராக இருந்தவர், தெகல்கா ஊழலில் சிக்கினார். அவர் கரன்சி நோட்டுகள் எண்ணுவதை, மீடியாக்கள் ஆதாரத்துடன் படம்பிடித்து காட்டின. எனவே, தற்போது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என, கூறுவதற்கு பா.ஜ., தலைவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை. காமன்வெல்த் போட்டியில் நடந்த முறைகேடுகள் குறித்து, ஆரம்ப கட்டத்திலேயே விசாரணையை அரசு துவங்கி விட்டது.இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

மத்திய பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் கூறியதாவது: பார்லிமென்டில் 24 அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் உள்ளனர். பார்லிமென்ட் கூட்டுக் குழு அமைத்தால், அதில் ஏழு கட்சிகள் மட்டுமே பங்கேற்க முடியும். மற்ற கட்சிகள் பங்கேற்க தேவையில்லை என, எதிர்க்கட்சிகள் கருதுகின்றனவா? ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக எத்தனை நாள் வேண்டுமானாலும், பார்லிமென்டில் விவாதம் நடத்த தயாராக உள்ளோம். இதுகுறித்து விவாதிக்க, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் ஏற்கனவே நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.ஆனால், பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என, பிடிவாதம் பிடிப்பதன் மூலம், எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்துகின்றன. இவ்வாறு பவன்குமார் பன்சால் கூறினார்.

பா.ஜ., பதிலடி: காங்கிரசின் இந்த குற்றச்சாட்டை, பா.ஜ., மறுத்துள்ளது.

இதுகுறித்து பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி கூறியதாவது:பங்காரு லட்சுமண், தெகல்கா போன்ற விஷயங்களை கூறி, ஸ்பெக்ட்ரம் ஊழலை காங்கிரஸ் திசை திருப்ப முயற்சிக்கிறது. பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணையை ஏன் வலியுறுத்துகிறோம் என்பதை, அத்வானி ஏற்கனவே தெளிவாக தெரிவித்து விட்டார். மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், சி.பி.ஐ., போன்றவற்றின் நம்பகத்தன்மையை மத்திய அரசு கேள்விக் குறியாக்கி விட்டது. இதன் காரணமாகவே, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என, வலியுறுத்துகிறோம்.இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.