எஸ்.ஐ.,பணிக்கு தேர்வு எழுதிய தனி “ஏட்டு’ திண்டுக்கலில் 2 எஸ்.பி.,க்கள் கண்காணிப்பு

posted in: தமிழ்நாடு | 0

திண்டுக்கல் : திண்டுக்கலில் இரண்டு எஸ்.பி.,க்கள் கண்காணிப்பில், ஒரு ஏட்டு நேற்று எஸ்.ஐ.,க்கான தேர்வை தனியாக எழுதினார். 2005ல் தனக்கு எஸ்.ஐ., பதவி கிடைக்காததால் போராடி வெற்றியும் பெற்றுள்ளார்.


திண்டுக்கல் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக இருப்பவர் வீரப்பத்தேவர்(50). இவர் 2005ல் போர்டு மூலம் எஸ்.ஐ.,க்கள் தேர்வு செய்யப்பட்ட போது, தனக்கு பதவிமூப்பு அடிப்படையில் எஸ்.ஐ., பதவி வழங்க வேண்டும் என்று விண்ணப்பித்தார். ஏட்டு மீது ஒழுங்கு நடவடிக்கை இருந்ததால்,அப்போது அவருக்கு எஸ்.ஐ., பதவி வழங்கப்படவில்லை. இந்நிலையில், ஏட்டு வீரப்பத்தேவர் ஒழுங்கு நடவடிக்கையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

பின்னர், தனக்கு அனைத்து பணி மூப்பு, தகுதி இருந்தும் எஸ்.ஐ., பதவி வழங்கப்படவில்லை எனக் கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். விசாரித்த சென்னை ஐகோர்ட், ஏட்டு மீதுள்ள ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு ஒரு தேர்வு வைத்து, 2005ல் இருந்து எஸ்.ஐ.,பதவி வழங்க வேண்டும் என கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணனுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து திண்டுக்கல் எஸ்.பி., தினகரன் தலைவராகவும், தேனி எஸ்.பி., பாலகிருஷ்ணன் கமிட்டி உறுப்பினராகவும்,தேர்வு சூப்பர்வைசராக மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகனும் நியமிக்கப்பட்டனர்.

திண்டுக்கல் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று ஏட்டு வீரப்பத்தேவர் மட்டும் தனியாக எழுத்துத் தேர்வு எழுதினார். இவரை, இரண்டு எஸ்.பி.,க்கள் கண்காணித்தனர்.தேர்வு இரண்டு மணிநேரம் நடந்தது. திண்டுக்கல் எஸ்.பி., தினகரன் கூறுகையில், “”கோர்ட் உத்தரவுப்படி ஏட்டு தேர்வு எழுதினார்.தேர்வில் அவர் தேர்ச்சி பெற்று விட்டார். வரும் 26ல் உடல் தகுதி தேர்வு நடக்கிறது. இதை இரண்டு எஸ்.பி.,க்களும் கண்காணிப்போம்,” என்றார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.