நாக்பூர் டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 198 ரன்னில் அபார வெற்றி; 1-0 கணக்கில் தொடரை கைப்பற்றியது

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 193 ரன்னில் சுருண்டது.

இந்தியா முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 566 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. டிராவிட் 191 ரன்னும், டோனி 98 ரன்னும் எடுத்தனர். வெட்டோரி 3 விக்கெட் கைப்பற்றினார்.

373 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சை ஆடியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 1 விக்கெட் இழப்புக்கு 24 ரன் எடுத்து இருந்தது. மேக்குல்லம் 15 ரன்னிலும், ஹோப்கின்ஸ் 1 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) 4-வது நாள் ஆட்டம் நடந்தது.

நியூசிலாந்து அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடியது. சுழற்பந்து வீரர்கள் ஒஜா, ஹர்பஜன் சிங்கின் அபாரமான பந்து வீச்சில் நியூசிலாந்து அணி திணறியது. 62 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட் விழுந்தது. மேக்குல்லம் 25 ரன்னிலும், குப்தில் ரன் எதுவும் எடுக்காமலும் ஒஜா பந்தில் ஆட்டம் இழந்தனர். ஹோப்கின்ஸ் 8 ரன்னில் ஹர்பஜன்சிங் பந்தில் ஆட்டம் இழந்தார்.

ஸ்கோர் 93 ஆக இருந்தபோது டெய்லர் 29 ரன்னில் ஹர்பஜன்சிங் பந்தில் பெவிலியன் திரும்பினார். அதன்பின் மதிய உணவு இடைவேளைக்குள் நியூசிலாந்து 140 ரன்னுக்குள் 8 விக்கெட்டை இழந்தது. ரைடர் மற்றும் வெட்டோரி ரெய்னா பந்தில் அவுட் ஆனார்கள்.

மதிய உணவு இடைவேளைக்குப்பிறகு விளையாடிய நியூசிலாந்து மேலும் 35 ரன் எடுப்பதற்குள் 2 விக்கெட்டையும் இழந்து 175 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியா டெஸ்ட்போட்டியை இன்னிங்ஸ் மற்றும் 198 ரன்னில் அபார வெற்றி பெற்றது. தொடரையும் 1-0 கணக்கில் வென்றது.

Source & Thanks : maalaimalar

Leave a Reply

Your email address will not be published.