ஸ்பெக்ட்ரம்-எதிர்க்கட்சிகளுடன் மீண்டும் பேச பிரணாபுக்கு காங். உத்தரவு

டெல்லி: ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நிலவி வரும் அமளியை முடிவுக்குக் கொண்டு எதிர்க்கட்சி் தலைவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துமாறு பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

நேற்று டெல்லியில் நடந்த காங்கிரஸ் உயர் மட்டத் தலைவர்கள் கூட்டத்தில் இதற்கான அதிகாரம் பிரணாபுக்கு வழங்கப்பட்டது.

கடந்த இரு வாரங்களாக ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றம் ஸ்தம்பித்துப் போயுள்ளது. ஒருஅலுவலும் நடக்காமல் உள்ளது.

இந்த நிலையில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் உயர் மட்டத் தலைவர்கள் கூட்டம் நடந்தது.

இதில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை குறித்து விவாதிக்கப்பட்டது. இறுதியில், எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பிரணாப் முகர்ஜி மீண்டும் பேசுவது என முடிவானது.

கூட்டத்தில் அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இன்று நாடாளுமன்றம் மீண்டும் கூடுவதற்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பிரணாப் பேசவுள்ளார். அதன் பின்னர் அவர்கள் சொல்வதை சோனியாவிடம் கூறுவார்.

சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் விசாரணைக்கு காங். உடன்பாடு?

இதற்கிடையே, நாடாளுமன்ற கூட்டுக் கமிட்டி விசாரணை என்பதிலிருந்து விலகி, சுப்ரீம்கோர்ட் கண்காணிப்பிலான சிபிஐ விசாரணையை நடத்த காங்கிரஸ் இறங்கி வரலாம் என்று தெரிகிறது.

ஸ்பெக்ட்ரம் வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் வரும்போது உச்சநீதிமன்றமே இந்த திட்டம் குறித்து அறிவிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது குஜராத்தில் சோராபுதீன் போலி என்கவுன்டர் உள்ளிட்ட வழக்குகள் தற்போது உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் எஸ்ஐடி மற்றும் சிபிஐ ஆகியவற்றால் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கையும் உச்சநீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிடக் கூடும் என்று தெரிகிறது. ஜேபிசி விசாரணை தேவை என்ற எதிர்க்கட்சிகளின் நெருக்குதலிலிருந்து தப்பிக்க மத்திய அரசு இந்த விசாரணைக்கு ஒப்புக் கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு வேளை உச்சநீதிமன்றம் தனது கண்காணிப்பிலான சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடாவிட்டால், ஜேபிசி விசாரணைக்கு காங்கிரஸ் அரசு உடன்பட வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக மட்டுமல்லாமல் இடதுசாரி கட்சிகளும் ஜேபிசி விசாரணையை மட்டுமே ஏற்போம் என்பதில் உறுதியாக உள்ளனர்.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.