சென்னை மாநகர எல்லை விரிவாக்கம் : 9 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் இணைப்பு

posted in: தமிழ்நாடு | 0

சென்னை : சென்னை மாநகராட்சியுடன் ஒன்பது நகராட்சிகள், எட்டு பேரூராட்சிகள் மற்றும் 25 கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, காஞ்சிபுரம், கரூர், நாகர்கோவில் நகராட்சிகளின் எல்லைகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் அசோக் வர்தன் ஷெட்டி பிறப்பித்துள்ள உத்தரவு: சென்னை மாநகர எல்லையுடன் பல்வேறு பகுதிகளை இணைத்து, மாநகராட்சியின் ஒரு பகுதியாக அமைக்க கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி இணைக்கப்பட்டுள்ள பகுதிகள் வருமாறு:

திருவள்ளூர் மாவட்டம் கத்திவாக்கம், திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், மதுரவாயல், வளசரவாக்கம் ஆகிய நகராட்சிகளின் பகுதிகள் முழுமையாகவும், காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூர், உள்ளகரம் – புழுதிவாக்கம் நகராட்சிகள் முழுமையாகவும், சென்னை மாநகருடன் இணைக்கப்படுகின்றன.

இது தவிர, திருவள்ளூர் மாவட்டம் சின்னச் சேக்காடு, புழல், போரூர் பேரூராட்சிகளும், காஞ்சிபுரம் மாவட்டம் நந்தம்பாக்கம், மீனம்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் பேரூராட்சிகளும் முழுமையாக இணைக்கப்படுகின்றன.

கிராம ஊராட்சிகளை பொறுத்தவரை, இடையஞ்சாவடி, சடையங்குப்பம், கடப்பாக்கம், தீயம்பாக்கம், மாத்தூர், வடப்பெரும்பாக்கம், சூரப்பட்டு, கதிர்வேடு, புத்தகரம், நொளம்பூர், காரப்பாக்கம், நெற்குன்றம், ராமாபுரம், முகலிவாக்கம், மணப்பாக்கம், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், ஒக்கியம் – துரைப்பாக்கம், மடிப்பாக்கம், ஜல்லடம்பேட்டை, செம்மஞ்சேரி, உத்தண்டி ஆகியவை முழுமையாக சென்னையுடன் இணைக்கப்படுகின்றன.

இவை அனைத்தும் சென்னை மாநகராட்சி சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. இந்த உள்ளாட்சிகளுக்கான வார்டுகள், அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலின் போது பிரிக்கப்படும்.

இதுதவிர, காஞ்சிபுரம் நகராட்சி எல்லையுடன், செவிலிமேடு பேரூராட்சி, ஓரிக்கை, தேனம்பாக்கம், நாதபேட்டை ஆகிய கிராம ஊராட்சிகள் இணைக்கப்படும். திருப்பத்தூர் நகராட்சியுடன் திருப்பத்தூர் கிராம ஊராட்சி முழுமையாக இணைக்கப்படுகிறது. கரூர் நகராட்சியுடன் இனாம்- கரூர் நகராட்சி, தாந்தோணி நகராட்சி, சேனபிராட்டி ஊராட்சி ஆகியவை முழுமையாக இணைக்கப்படுகின்றன.

நாகர்கோவில் நகராட்சியுடன், ஆசாரிபள்ளம் பேரூராட்சி, பெருவிளை, வடக்கு சூரன்குடி, காந்திபுரம், கரியமாணிக்கபுரம் கிராம ஊராட்சிகள் முழுமையாக இணைக்கப்படுகின்றன. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.