மகிந்தாவின் கழுத்தில் கத்தி விழாவிட்டாலும் அது தொங்கிக் கொண்டிருக்கிறது!

மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவுக்கான பயணத்தை வேலை நெருக்கடி காரணமாகவே ஒத்தி போட்டுள்ளதாக சிறீலங்கா அரசு சொல்கிறது. அது சரியாகவும் இருக்கலாம்.

இருந்தும் கைது செய்யக்கூடிய சாத்தியமும் அதனால் ஏற்படுகிற மனப்பயமும் அவருக்கு இருக்கவே செய்யும். கழுத்தில் கத்தி விழாவிட்டாலும் அது தொங்கிக் கொண்டிருப்பதை அவர் உணராமல் இருக்க முடியாது.

இந்த மாதம் முதலாம் நாள் இஸ்ரேல் நாட்டு புலனாய்வு அணு ஆற்றல் அமைச்சர் டான் மெரிடோர் லண்டனுக்குப் போக இருந்தார். ஆனால் அவரைக் கைதுசெய்யப் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட செய்தி அறிந்து தனது பயணத்தை விலக்கிக் கொண்டார்.

இவர் மே 31 இல் காசாவுக்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற Mavi Marmara  என்ற கப்பல் மீது இஸ்ரேலிய அதிரடிப்படை நடத்திய தாக்குதலில் இவருக்கும் பங்குண்டு என்று கூறப்பட்டது. இந்தத் தாக்குதலில் 9 துருக்கி செயல்வீரர்கள் கொல்லப்பட்டார்கள். இதே கதி 2009 ஆண்டு லண்டன் செல்ல இருந்த இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் லிவினி என்பவருக்கும் ஏற்பட்டது.

பிரித்தானியாவில் இரண்டு வகை சட்டங்கள் உண்டு. ஒன்று அந்த நாட்டுச் சட்டங்கள். மற்றது உரோம் உடன்படிக்கைச் சட்டம். இந்த இரண்டுவகைச் சட்டங்களையும் பிரித்தானியாவைக் கட்டுப்படுத்துகிறது.

உரோம்நாட்டு உடன்படிக்கைச் சட்டத்தின் கீழ் யார் யார் நடைவடிக்கை எடுக்கலாம்?

1) உரோம் உடன்படிக்கையில் கையெழுத்த நாடு முறையிட்டால்.
2) பன்னாட்டுப் பாதுகாப்பு அமைதி ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு அவை தீர்மானம் நிறைவேற்றினால்.
3) பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குத் தொடருநர்.

சூடான் நாட்டு ஆட்சித்தலைவர் ஒமார் பசீருக்கு எதிராக அமெரிக்காதான் பாதுகாப்பு அவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. அமெரிக்கா நீங்கலாக இதுவரை இந்தச் சட்டத்தின் கீழ் உகண்டா, கொங்கோ, வட உகண்டா, கென்யா மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசு நாடுகள் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்துக்கு முறையிட்டதன் பலனாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இப்போது ஆட்சிக்கு வந்திருக்கும் வழமைவாத – மக்களாட்சி கூட்டணி அரசின் தலைமை அமைச்சர் உரோம் உடன்படிக்கைச் சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவரப் போவதாக அண்மையில் அறிவித்துள்ளார்.

அதாவது ஆட்சித் தலைவர்கள், தலைமை அமைச்சர்கள் அரச பயணம் மேற்கொண்டு வரும்போது அவர்களைக் கைது செய்யும் உரிமையை இல்லாது செய்ய பிரித்தானிய தலைமை அமைச்சர் முயற்சிக்கிறார். இதன் பின்னால் இஸ்ரேல் நாட்டின் அழுத்தம் இருப்பது பற்றி சொல்லத் தேவையில்லை!

மகிந்த ராஜபக்ச தனது பயணத்தை வேலை நெருக்கடி காரணமாகவே ஒத்திப் போட்டுள்ளதாக சிறீலங்கா அரசு சொல்கிறது. அது சரியாகவும் இருக்கலாம். இருந்தும் கைது செய்யக்கூடிய சாத்தியமும் அதனால் ஏற்படுகிற மனப் பயமும் மகிந்த ராஜபக்சவுக்கு இருக்கவே செய்யும். கழுத்தில் கத்தி விழாவிட்டாலும் அது தொங்கிக் கொண்டிருப்பதை அவர் உணராமல் இருக்க முடியாது.

திருமகள்

Source  &   Thanks :  tamilwin

Leave a Reply

Your email address will not be published.