சீனர்கள் துணையுடன் யாழ்ப்பாணத்தில் சிங்களக் குடியேற்றம்!

கொழும்பு: சீனர்களின் துணையுடன் யாழ்ப்பாணம் முழுவதிலும் சிங்களர்களைக் குடியமைர்த்தும் பணியில் மும்முரமாக உள்ளது ராஜபக்சே அரசு.

முதல்கட்டமாக 12000 வீடுகளைக் கட்டுவதற்கான தளவாடங்களை சீனா வழங்கியிருப்பதாகவும், அவை யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ராணுவ முகாம்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் நெட் செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாண கோட்டை மற்றும் மணியம் தோட்டப் பகுதிகளில் இருந்த தமிழரின் நிலங்களைப் பிடுங்கிக் கொண்டுள்ள இலங்கை ராணுவம், இந்தப் பகுதிகள் சிங்களர்களுக்குச் சொந்தமானது என்று கூறி, இங்கெல்லாம் புதிய வீடுகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கடந்த அக்டோபர் 8-ம் தேதி 193 சிங்கள குடும்பங்கள் தென்னிலங்கையிலிருந்து யாழுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் யாழ் பழைய ரயில் நிலைய வாளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 1983-க்கு முன்பு இவர்கள் யாழ்ப்பாணத்தில் குடியிருந்ததாக கூறிக் கொள்கின்றனர்.

இவர்களுக்காக இந்தப் பகுதியில் இருந்த தமிழர்களை விரட்டியடித்துள்ளது ராணுவம்.

இந்த சிங்கள குடியேற்றத்துக்கு பெரும் உதவிகளைச் செய்து வருகிறது சீனா.

திருகோணமலைப் பகுதியிலும் பல தமிழ்க் குடும்பங்கள் விரட்டப்பட்டு, அவர்களின் நிலங்களில் சிங்களர்கள் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

ஆனால் இதுகுறித்து இலங்கை அரசுக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கவோ, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு காட்டவோ கூட யாருமற்ற நிலை இலங்கையில் நிலவுவதாக கூறப்படுகிறது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.