அயோத்தி தீர்ப்பை எதிர்த்து சன்னி வக்பு வாரியம் அப்பீல்

லக்னோ : அயோத்தி வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்ய சன்னி மத்திய வக்பு வாரியம் முடிவு செய்துள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், கடந்த மாதம் 30ம் தேதி அலகாபாத் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. சர்ச்சைக்குரிய இடத்தை ஆளுக்கு ஒரு பங்காக பிரித்து வழங்க வேண்டும் என்றும், ராமர் சிலை உள்ள பகுதி இந்துக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என கூறியது. மேலும், பாபர் மசூதி இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு உட்பட்டுதான் கட்டப்பட்டதா என்று கேள்வி எழுப்பியிருந்தது.

இந்நிலையில், தீர்ப்பு வந்து நான்கு நாட்களுக்கு பின், தீர்ப்பு குறித்து சன்னி மத்திய வக்பு வாரியம் கருத்து தெரிவித்துள்ளது. இது குறித்து வாரியத்தின் தலைவர் ஜுபேர் அகமது பரூக்கி கூறியதாவது: தீர்ப்பு குறித்து எங்கள் வாரியத்தில் நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. வாரியத்தை பொருத்தமட்டில் கோர்ட்டிற்கு வெளியே பிரச்னையை தீர்த்து கொள்ள முன்வரவில்லை. இது தொடர்பாக யாரையும் பிரதிநிதியாக அங்கீகாரம் செய்யவில்லை. இவ்வாறு ஜுபேர் அகமது பரூக்கி கூறினார்.

வாரியத்தின் வக்கீல் ஜாபர் யாப் ஜிலானி நிருபர்களிடம் கூறுகையில்,”தீர்ப்பின் முழு விவரத்தையும் படித்துப் பார்த்தபின், சட்ட வல்லுனர்களுடன் அலசி ஆராயப்படும். நீதிபதிகள் முன்வைத்துள்ள சில கேள்விகளுக்கு அப்பீல் மனுவில் பதில் அளிக்க உள்ளோம். ராமர் பிறந்த இடத்தை முடிவு செய்ய நம்பிக்கையின் அடிப்படையில் ஆதாரமாக கொண்டுள்ளதாக தெரிவித்த அலகாபாத் ஐகோர்ட் லக்னோ பெஞ்சின் முடிவை செல்லாதது என அறிவிக்க கோருவோம்.

பாபர் மசூதி இஸ்லாம் மதத்தின் கோட்பாடுகளுக்கும், நெறிமுறைகளுக்கும் உட்பட்டுதான் கட்டுப்பட்டுள்ளது. கடந்த 1949ம் ஆண்டு, ராமர் சிலையை மசூதிக்குள் ரகசியமாக வைக்கப்படும் வரை, மசூதியின் உட்பகுதி முஸ்லிம்களின் பயன்பாட்டில் தான் இருந்தது. இந்த விவரங்களை எல்லாம் மனுவில் குறிப்பிட உள்ளோம். இவ்வாறு ஜாபர் யாப் ஜிலானி கூறினார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.