அரணாக டில்லி மாறினாலும் இந்தியாவுக்கு கூடுதல் பெருமை

புதுடில்லி : உலகமே வியக்கும் அளவுக்கு, டில்லியில் காமன்வெல்த் போட்டியின் துவக்க விழா கோலாகலமாக நடந்தது. இதற்காக, தலைநகர் டில்லியில் செய்யப்பட்டிருந்த உச்சகட்ட பாதுகாப்பு, அதை ஒரு அரணாக மாற்றியது.

ராணுவம் உட்பட ஒரு லட்சம் பேர் பாதுகாப்புப் பணிகள் மேற்கொண்ட இந்த விளையாட்டு விழாவை, ஜனாதிபதி பிரதிபாவும் , பிரிட்டன் இளவரசர் சார்லசும் முறைப்படி துவக்கி வைத்தனர்.

டில்லியில், 19வது காமன்வெல்த் போட்டி நேற்று துவங்கியது. வரும் 14ம் தேதி நிறைவடைகிறது. மொத்தம் 12 நாட்கள் நடக்கும் இப்போட்டியில், 71 நாடுகளை சேர்ந்த 8,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் விஜேந்தர், சானியா, செய்னா, அபினவ் பிந்த்ரா உள்ளிட்ட மிகப் பெரும் நட்சத்திர படை களமிறங்குகிறது.

கண்கவர் கலைநிகழ்ச்சி:நேற்று இரவு 7 மணி அளவில் ஜவகர்லால் நேரு மைதானத்தில் துவக்க விழா வண்ணமயமாக நடந்தது. இதில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், இளவரசர் சார்லஸ், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதலில் தேசியகீதம் இசைக்கப்பட்டது. அதை தொடர்ந்து, சங்கொலி மற்றும் “மெகா’ முரசு முழங்க, மேளதாளத்துடன் விழா துவங்கியது. அடுத்து, ஒரிசாவின் டோலக், கேரளாவின் செண்டை மேளம் என, நாட்டின் பாரம்பரியம்மிக்க இசை நிகழ்ச்சி நடந்தது.ஏழு வயதான இளம் கேசவ் நிகழ்த்திய, “தபேலா’ இசை அனைவரையும் கவர்ந்தது. “ஸ்வாகதம்’ என்ற வணக்கப் பாடலை, டில்லி பள்ளிக் குழந்தைகளுடன் சேர்ந்து ஹரிஹரன் பாடினார்.

பிந்த்ராவுக்கு பெருமை:தொடர்ந்து நடந்த அணிவகுப்பில், இந்திய குழு சார்பில் மூவர்ணக்கொடியை “ஒலிம்பிக் தங்க நாயகன்’ அபினவ் பிந்த்ரா ஏந்தி வந்தார். அப்போது ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், இளவரசர் சார்லஸ், பிரதமர் மன்மோகன் மற்றும் அரங்கில் இருந்த 60 ஆயிரம் ரசிகர்கள் எழுந்து நின்று உற்சாக கரகோஷம் எழுப்பினர்.

பலத்த பாதுகாப்பு:இம்முறை பல்வேறு சர்ச்சைகளை கடந்து போட்டிகள் நடக்க இருப்பதால், டில்லி முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை சமாளிக்கும் பொருட்டு, ஒரு லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விளையாட்டு கிராமம் அமைந்துள்ள பகுதியில் ஹெலிகாப்டர்களில் பறந்தவாறு “கமாண்டோ’ படையினர் கண்காணித்தனர். போட்டி நடக்கும் மைதானங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ரகசிய “சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டு, டில்லி போலீஸ் தலைமையகத்தில் இருந்தவாறு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் நடந்தன.துவக்க விழா நடந்த ஜவகர்லால் நேரு மைதானம், பாதுகாப்பு கோட்டையாக மாறியிருந்தது. நான்கு அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரசிகர்கள் முழுமையான சோதனைக்குப்பின் அனுமதிக்கப்பட்டனர். எங்கு பார்த்தாலும் பாதுகாப்பு படையினர் தான் காணப்பட்டனர். மைதானத்தில் “கமாண்டோ’ படையினர் உட்பட 7,500 பேர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், டில்லி போலீஸ் கமிஷனர் தத்வால் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரடியாக ஆய்வு செய்தனர். டில்லி நகர மக்கள் தங்கள் தினசரி வாழ்க்கையில் சில தடைகள் இருப்பதாக குறை கூறினர். எந்த அளவுக்கு பாதுகாப்பு தீவிரம் என்பதற்கு அடையாளமாக பங்கேற்க வந்திருந்த வெளிநாட்டு வீரர்கள் குழுவினர், தங்கள் உடைமைகளில் துப்பாக்கிகள் வைத்திருப்பது கண்டறியப்பட்டு அவை அகற்றப்பட்டன. அந்த அளவு கவனம் காட்டப்பட்டது.மொத்தத்தில் இந்தியா தொடர்பான விமர்சனங்களை, இதுவரை பேசப்பட்ட களங்கங்களை மிகப் பிரமாண்டமான துவக்க விழா தகர்த்தெறிந்தது. இவ்விழா சிறப்பாக நடந்ததன் மூலம் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் கவுரவம் வெகுவாக உயர்ந்துள்ளது. காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் தலைவர் சுரேஷ் கல்மாடி பேசிய போது, சற்று சலசலப்பாக காணப்பட்டது. காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் பெடரேஷன் தலைவர் மைக்பென்னல் பேசிய போது, காமன்வெல்த் நகரத்தை தூய்மையாக பராமரிக்க டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டினார்.

விழாவைத் துவக்கி வைத்து ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், “”நமது கலாசார பெருமைக்கு அணியான விழா,” என்று குறிப்பிட்டார். பி

ரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் பேசுகையில், “” பிரிட்டிஷ் ராணி கேட்டுக் கொண்டபடி, இவ்விழாவில் என் மனைவி கமீலாவுடன் வந்து பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார்.

பிரதமர் மன்மோகன் பேசுகையில், “”பெருமைமிக்க இந்த போட்டிகள் இந்தியாவில் நடப்பது பெருமை. நாட்டின் மக்களுக்கு பெருமை தரும் நிகழ்ச்சி,” என்று வர்ணித்தார்.

இன்று முதல் துவங்கும் விளையாட்டு போட்டிகளில் இந்தியா அதிக பதக்கங்கள் பெறுவதன் மூலம் இதுவரை பேசப்பட்ட குறைகள் மாறும் என்ற கருத்து உள்ளது. அதற்கு காரணமும் இருக்கிறது. இந்திய அணியில் மொத்தம் 126 வீரர்கள் இருப்பது அதிக நம்பிக்கை தருகிறது.

மூன்றாவது விழா : இந்தியா சுதந்திரம் அடைந்த பின், 1951ல் முதன் முதலாக அப்போதைய முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு முன்னிலையில், “ஆசிய விளையாட்டுப் போட்டிகள்’ இதே நேரு மைதானத்தில் நடந்தன.இதையடுத்து, 31 ஆண்டுகள் கழித்து, இதே மைதானத்தில் 1982ல் மீண்டும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இப்போது, 28 ஆண்டுகள் கழித்து 19வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், நேரு மைதானத்தில் கோலாகலமாகத் துவங்கியுள்ளன.

பங்கேற்றவர்கள் யார் யார்?நிகழ்ச்சி துவங்குவதற்கு முன், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவி குர்சரண் கவுர் இருவரும் வந்திருந்தனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.துவக்க விழாவில், மாலத்தீவு அதிபர் முகமது நஷீத், மொனாக்கோ நாட்டின் இளவரசர் இரண்டாம் அல்பர்ட், சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் ஜேக்குவஸ் ரோகே, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கூட்டமைப்பின் தலைவர் மிக் பென்னல், நியூசிலாந்து கவர்னர் ஜெனரல் சர். ஆனந்த் சத்யானந்த் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பாக்., குழுவுக்கு உற்சாக வரவேற்பு : பாகிஸ்தானின் 54 பேர் கொண்ட குழு மைதானத்துக்குள் நுழைந்த போது, அனைத்து பகுதிகளிலும் இருந்து அவர்களை மனதார வரவேற்கும் விதமாக பலத்த கரகோஷம் எழும்பியது. பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் வெள்ளை நிறச் சீருடை அணிந்து, அதன் மீது பச்சை நிற கோட் அணிந்திருந்தனர்.

கண்கவர் நடனங்கள் : இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த இசைக்கருவிகள், மேளதாளங்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றன. சங்க நாதத்துடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில், புத்த மதத்தவர்களால் பயன்படுத்தப்படும் “டங் சென்’ எனப்படும் மிகப்பெரிய ஊதுகுழல்கள், மணிப்புரியின் “புங்’ வாத்தியம், கேரளாவின் பாரம்பரிய வாத்தியமான செண்டை, தபேலா, மிருதங்கம் உள்ளிட்ட பல்வேறு வாத்தியங்களின் இசை இடம்பெற்றன. மைதானத்தில் “ஹீலியம்’ காற்று நிரப்பப்பட்ட பொம்மைகள் பறக்க விடப்பட்டிருந்தன.பல்வேறு வாத்தியங்கள் எழுப்பிய இசை வெள்ளம், மைதானத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.பல்வேறு நாட்டிய நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. பரத நாட்டியம், ஒடிசி, கதக், மணிப்புரி, மோகினியாட்டம் மற்றும் குச்சிப்புடி நாட்டியங்கள் நடந்தன; யோகா நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

காமன்வெல்த் துவக்க விழாவில் விளம்பர சர்ச்சை : தூர்தர்ஷன்’ மீது புகார் : காமன்வெல்த் துவக்க விழா நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிய தூர்தர்ஷன், அளவுக்கு அதிகமாக விளம்பரங்களை காண்பித்து வெறுப்பேற்றியது. உண்மையில் இரவு 10 மணிக்கே நிகழ்ச்சிகள் முடிந்து விட்டன. ஆனால், இரவு 11 மணி வரை மிகவும் தாமதமாக ஒளிபரப்பு நீடித்தது. நேரடி ஒளிபரப்பு என்ற பெயரில், தூர்தர்ஷன் தங்களை ஏமாற்றி விட்டதாக ரசிகர்கள் ஆவேசமாக கூறினர்.

டில்லியில் 19வது காமன்வெல்த் போட்டி நடக்கிறது. இதன் துவக்க விழா ஜவகர்லால் நேரு மைதானத்தில் நேற்று இரவு 7 மணிக்கு துவங்கியது. இந்தியாவின் 5 ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியத்தை விளக்கம் விதமாக பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றன. “மகத்தான ரயில் பயணம்’ என்ற நிகழ்ச்சியில் வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியா சித்தரிக்கப்பட்டது. மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரை போராட்டம் தத்ரூபமாக காண்பிக்கப்பட்டது. அப்போது மைதானத்தின் நடுவே “லேசர்’ ஒளியில் காந்தியின் உருவம் தத்ரூபமாக தோன்றியது. இறுதியாக போட்டியின் அதிகாரப்பூர்வ பாடலை “ஆஸ்கர் நாயகன்’ ஏ.ஆர்.ரஹ்மான் பாடி அசத்த, விழா இனிதே நிறைவடைந்தது. பணம் முக்கியம்: இப்படி நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக இருந்த போதும், தூர்தர்ஷன் ஒளிபரப்பு தான் குறையாக அமைந்தது.

மைதானத்தில் இருந்தவர்கள் “போன்’ மூலம் தங்களது நண்பர்களுடன் பேசும் போது தான், நிகழ்ச்சிகள் தாமதமாக காண்பிக்கப்படும் விஷயம் அம்பலமானது. நிகழ்ச்சிகளுக்கு இடையில், அதிகமான விளம்பரங்களை ஒளிபரப்பியதால், துவக்க விழா தாமதமாக ஒளிபரப்பபட்டுள்ளது. இரவு 7 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி 10 மணிக்கு முடிந்து விட்டது. ஆனால், 11 மணி வரை ஒளிபரப்பானது. சுமார் 1 மணி நேரம் விளம்பரத்துக்கு ஒதுக்கி பணம் பார்த்துள்ளனர்.

இது குறித்து டில்லியை சேர்ந்த அனன்யா தாஸ் குப்தா என்ற கல்லூரி மாணவர் கூறுகையில்,””நாங்கள் ஏமாற்றம் அடைந்தோம். அரசு சார்பில் செயல்படும் தூர்தர்ஷன் இப்படி செய்திருக்க கூடாது. துவக்க விழாவை தாமதமாக ஒளிபரப்பி எங்களது மகிழ்ச்சியை கெடுத்து விட்டனர்,”என்றார்.

விளம்பர துறையில் பணியாற்றும் அஜித் சர்மா என்பவர் கூறுகையில்,””பணத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு தூர்தர்ஷன் செயல்பட்டுள்ளது. நேரடியாக ஒளிபரப்பு செய்யாமல் நாட்டு மக்களை ஏமாற்றி விட்டது,” என்றார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.