தொழில் கல்லூரி துவக்கி பயிற்சியளிக்க இக்னோவுடன் டி.வி.எஸ்.இ.எஸ்., ஒப்பந்தம்

posted in: தமிழ்நாடு | 0

சென்னை: முறையான கல்வி பெறாதவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கும் விதமாக, டி.வி.எஸ்., சமுதாய கல்வி மையம் (டி.வி.எஸ்.இ.எஸ்.,) இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தொழிற்கல்லூரியை துவக்க ஒப்பந்தம் செய்துள்ளது.

இது குறித்து டி.வி.எஸ்.இ.எஸ்., இயக்குனர் மாலினி சீனிவாசன் கூறியதாவது: பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள், முறையான கல்வி பெறாதவர்கள் மற்றும் தனித்திறனற்றோர் ஆகியோருக்கு உதவும் பொருட்டு, வானகரத்தில் உள்ள டி.எஸ்.ஸ்ரீனிவாசன் பாலிடெக்னிக் உயர் பயிற்சி மையத்தில், டி.வி.எஸ்., தொழில்கல்லூரி துவக்கப்பட்டுள்ளது. இத்தகைய பயிற்சி அளிக்க, இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதுபோன்ற திறன் மேம்பாட்டு பயிற்சிகளானது, இளைஞர்கள் மற்றும் தொழில்துறையினருக்கு உதவிகரமாக இருக்கும். 8ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி., வரை தேறியவர்கள் ஆறு மாத சான்றிதழ் படிப்பு மற்றும் ஓராண்டு பட்டயப் படிப்புகளில் சேரலாம். இன்டஸ்ட்ரியல் ஆட்டோமெஷன், பி.எல்.சி., புரோகிராம், மெஷினிங், வெல்டிங் போன்ற 12 தொழில்நுட்ப பயிற்சி படிப்புகளும், காப்பீடு, சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட நான்கு தொழில்நுட்பம் சாராத படிப்புகளும் என்று 16 வகை படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இது போன்ற மூன்று மையங்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு மாலினி சீனிவாசன் தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் குறித்து இக்னோ மண்டல இயக்குனர் பன்னீர்செல்வம் கூறும் போது, “”இந்தியாவின் எந்த பகுதியில் உள்ளவர்களும் தொழிற்கல்வியை பெறுவதற்கு எந்தவொரு தொழில் கல்லூரியுடனும் ஒப்பந்தம் செய்து கொள்ள இக்னோ ஆர்வமாக உள்ளது. இந்த ஒப்பந்தம் தரமான கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும்,” என்றார்

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.