முரளிதரன் உலக சாதனை-முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி

காலே: காலேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தனது 800வது விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார் முத்தையா முரளிதரன். இப்போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியது.

இந்த டெஸ்ட் போட்டியோடு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் 800 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைப்பாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு டெஸ்ட் போட்டியின் தொடக்கம் முதலே இருந்தது. இன்று பிற்பகல் வரை அவர் 799 விக்கெட்களுடன் இருந்தார் முரளி.

பிற்பகல் 2 மணியளவில் முரளிதரன் தனது உலக சாதனையை நிகழ்த்தினார். அவரது 800வது விக்கெட்டாக பிரக்யான் ஓஜா அவுட் ஆனார்.

இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை முரளிதரன் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்.

முரளிதரன் நிகழ்த்திய உலக சாதனையை அவரது மனைவி மதிமலர், அவரது குடும்பத்தினர், மகன் உள்ளிட்டோர் நேரில் கண்டு குதூகளித்தனர். 800வது விக்கெட்டை முரளிதரன் வீழ்த்தியதும், ரசிகர்கள் [^] பெரும் உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் குதித்தனர். மைதானத்தில் விழாக்கோலம் காணப்பட்டது.

10 வி. வித்தியாசத்தில் இந்தியா தோல்வி

முன்னதாக, காலேவில் நடந்த இந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் ஆட்டம் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்து. 2வது நாள் ஆட்டம் நடக்கவே இல்லை. முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 520 ரன்கள் எடுத்து இலங்கை டிக்ளேர் செய்தது.

இதையடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா சடசடவென விக்கெட்களை இழந்து 276 ரன்களில் வீழ்ந்தது.

முதல் இன்னிங்ஸில் ஷேவாக் சதம் போட்டார். அவர் 109 ரன்களை எடுத்தார். டெண்டுல்கர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து பாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது. 2வது இன்னிங்கிலும் இந்தியாவின் பேட்டிங் ஆர்டர் சொதப்பியது. ஷேவாக், கம்பீர் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். டிராவிட் நிதானமாக ஆடி44 ரன்களை எடுத்தார்.

முதல் இன்னிங்ஸில் சரியாக ஆடாத சச்சின் இந்த முறை 84 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இன்னிங்ஸ் தோல்வி என்ற பெரும் அபாயத்தை நோக்கி இந்தியா போய்க் கொண்டிருந்த நிலையில், லட்சுமண் ரூபத்தில் இந்தியாவுக்கு நிம்மதி வந்தது. மிக மிக நிதானமாக ஆடி வரும் லட்மண் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க உதவினார்.

அவரும், இஷாந்த் சர்மாவும் நிதானமாக ஆடி இந்தியாவின் சரிவை நிறுத்தினர். இதன் காரணமாக இலங்கையை விட 94 ரன்கள் முன்னிலை இந்தியாவுக்குக் கிடைத்தது.

லட்சுமண் 69 ரன்களும், இஷாந்த் சர்மா ஆட்டமிழக்காமல் 31 ரன்களும் எடுத்தனர். இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை 338 ரன்களுக்கு இழந்தது.

95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை தனது 2வது இன்னிங்ஸ் ஆட்டத்தைத் தொடங்கியது.

முதல் இன்னிங்ஸில் சதம் போட்ட பரவனவிதனா 23 ரன்களை எடுத்தார். திலகரத்னே தில்ஷன் 68 ரன்கள் எடுத்தார். இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை.

இதையடுத்து முதல் டெஸ்ட் போட்டியை 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வென்றது.

ஆட்ட நாயகனாக லசித் மலிங்கா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நினைவுப் பரிசு வழங்கிய ராஜபக்சே:

முரளிதரன் உலக சாதனையோடு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றதையொட்டி அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதை இலங்கை அதிபர் ராஜபக்சே நேரில் வந்து வழங்கி முரளிதரனைப் பாராட்டினார். போட்டியின் இறுதி நாளில் அவர் மைதானத்திலிரு்நது வந்திருந்து போட்டியையும் பார்த்தார்.

விடைபெற்றார் முரளிதரன்

இந்தப் போட்டியோடு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் முரளிதரன். போட்டியின் முடிவில் அவர் பேசுகையில், தனக்கு ஆதரவாக இருந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நன்றி கூறுவதாக தெரிவித்தார். மேலும், மனைவி, குடும்பத்தினர், முன்னாள், இன்னாள் வீரர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி கூறுவதாக தெரிவித்து விடைபெற்றார்.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.