பூர்வீகப் பிரதேசமான பளை மக்களை அரவணைக்க முடியாது தவித்துக் கொண்டிருக்கின்றது

இலங்கையில் போனால் பெரும்பாதிப்பைச் சந்தித்த பிரதேசங்களில் பளையும் ஒன்று. ஒரு பக்கத்தில் ஆனையிறவு, இயக்கச்சி போன்ற இடங்களில் இருந்த படைத்தளங்களால் விளைந்த மோதல்கள் இந்தப் பாதிப்புகளை உண்டாக்கின.

அடுத்த பக்கத்தில், முகமாலை, கிளாலி ஆகிய இடங்களில் இருந்த படையரண்களாலும் இந்தப் பகுதியில் நடந்த மோதல்களாலும் பளைப் பிரதேசம் பாதிக்கப்பட்டது.

பளைப் பிரதேசத்தின் அகதியொருவருக்கு வயது, ஏறக்குறைய இருபத்தைந்துக்கு மேலிருக்கும். ஆகவே 1980களின் முற்பகுதியில் இருந்தே இந்தப் பகுதி மக்கள் பாதிப்புகளைச் சந்திக்கத் தொடங்கினார்கள். அப்பொழுது தொடங்கிய இந்தப் பாதிப்புகளின் கதை இன்னும் முடியவேயில்லை.

இந்தப் பகுதிகளில்தான் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைப் படைத்தரப்புக்கும் இடையில் கடுமையான மோதல்கள் கடந்த காலங்களில் நடைபெற்றன. 1990, 1991ஆம் ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட ஆனையிறவுக்கான சமர், பின்னர், ஆகாய கடல் வெளிச் சமராக மாறியது. இதை முறியடிப்பதற்காக ஒபரேசன் பல வேகய படைநடவடிக்கையை அரச படைத்தரப்பு மேற்கொண்டது.

பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய ஓயாத அலைகள் மூன்றின்போது ஆனையிறவு இயக்கச்சிப் பகுதிகளில் நடந்த சமரில் பளைப் பிரதேச செயலர் பிரிவின் கிழக்குப் பகுதி முற்றாகவே அழிந்திருந்தது.

அத்துடன், மிக முக்கியமான குடாரப்புத் தரையிறக்கத்துக்குப் பின்னர் கேணல் பால்ராஜ் தலைமையிலான சமரை இத்தாவில் முகமாலைப் பகுதியில்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தினர்.

அதற்குப்பிறகு, படையினர் மேற்கொண்ட அக்கினிச் சுவாலை என்ற பெரிய சமரும் இதேபகுதியில்தான் நடந்தது. ஆகவே இந்தப் பிரதேசம் முற்றாகவே அழிந்து, இதன் நிலஅமைப்பே மாறிவிட்டது. இப்போது இலங்கையிலேயே இந்தப் பகுதியில்தான் மிக அதிகமான கண்ணிவெடிகள் இருப்பதாக ஒரு படை அதிகாரி சொல்கிறார். (இத்தாவில், வேம்போடுகேணி, கிளாலி ஆகிய பிரதேசங்களில்) இந்தக் கண்ணிவெடிகளால், தங்களுடைய படையினரே கால்களை இழந்திருப்பதாகவும் அவர் மேலும் சொன்னார்.

ஆனால், இப்போது, பளைப் பிரதேச செயலர் பிரிவில் உள்ள 18 கிராம அலுவலர் பிரிவுகளில் 08 பிரிவுகளில் மட்டும் மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இயக்கச்சி, முளங்காவில், கோவில்வயல், சங்கத்தார்வயல், முகமாலை, இத்தாவில், வேம்போடுகேணி, கிளாலி போன்ற பிரதேசங்கள் முற்றாகவே அழிந்து போயிருக்கின்றன. எனவே அங்கே மீள்குடியேற்றம் நடைபெறவில்லை.

மீள் குடியேற்றம் செய்யப்பட்ட எட்டுக் கிராம அலுவலர் பிரிவுகளிலும் மொத்தமாக, 1564 குடும்பங்களைச் சேர்ந்து 5032 பேர் மீளக் குடியமர்ந்திருக்கிறார்கள். இவர்களில், 260 பேர் விதவைகள். ஆதரவற்ற நிலையில் இருக்கும் குடும்பங்கள் 252.

இங்கே பெற்றோரை அதாவது தாய் தந்தை இருவரையும் இழந்திருக்கும் பிள்ளைகள் 21. தாயை மட்டும் இழந்தவர்கள், 47. தந்தையை இழந்தவர்கள் 206. இதைவிட இரண்டு கைகளையும் இழந்த நிலையில், கால்களை இழந்த நிலையில் என்று வேறு கணக்குகளும் உண்டு.

பளை மத்தியில் இருந்த பிரதான கடைத் தொகுதி, அப்படியே இடிந்து வீழ்ந்து தரை மட்டமாகியிருக்கிறது. அங்கே இரண்டு கதவுகள் மட்டும் ஏதோ ஒரு குறியீடாக இருக்கின்றன.

தபாற்கந்தோர், புகையிரத நிலையம், மத்திய கல்லூரியின் பெரிய கட்டிடத்தொகுதி, கூட்டுறவுச் சங்கத் தலைமையகம், கமநலச் சேவைகள் நிலையம் என்று எதுவுமே அங்கே இல்லை. எல்லாவற்றுக்கும் பதிலாக அங்கே நொருங்கிச் சிதறுண்ட கற்சிதறல்களே இருக்கின்றன.

என்னுடன் கூட வந்த நண்பர், பாடசாலை மைதானத்தில் இருந்த நிலத்தைப் பார்த்துக் கேட்டார், “என்ன, இந்த மண் ஒரு மாதிரி கற்சிதறல்களாக இருக்கிறதே! இந்த மணற்பாங்கான இடத்தில் இது எப்படி?’ என்று. ஆமாம், கற்சிதறல்கள் அப்படியே மண்ணுடன் கலந்து தரையின் அமைப்பையும் அந்தத் தரையின் மண் இயல்பையும் மாற்றிவிட்டன. அப்படியென்றால், அந்தப் பகுதியில் வெடித்த எறிகணைகளின் கந்தகம் என்ன மாதிரியான விளைவுகளையெல்லாம் உண்டு பண்ணியிருக்கும்?

ஆனையிறவு, இயக்கச்சி, சோரன்பற்று, முகமாலை, அல்லிப்பளை, கிளாலி, மருதங்கேணி தாளையடி ஆகிய எட்டு உப தபாலகங்களுக்குத் தாய்த் தபாலகமாக இருந்த தபாற்கந்தோர் இப்போது ஒரு கற்குவியல். அதற்கருகே இருந்த இரட்டைக்கேணி அம்மன் கோவில் மட்டும் சேதங்கள், சிதைவுகளோடு மிஞ்சிக்கிடக்கிறது. மருத்துவமனை இருந்த சுவடே இல்லை. பதிலாக ஒரு தனியாரின் உடைந்த வீட்டில் அதை வைத்து இயக்குகிறார்கள். மின்சார சபைக் கட்டிடத்தில் காடு. பெருந்தெருக்கள் திணைக்களத்தில் படைவீடு.

பிரசவ விடுதிக் கட்டிடம், பொது நூலகம், சனங்களின் வீடுகள் எல்லாம் கற்களாகிவிட்டன. கல்லாகவே இருந்து கட்டிடங்களாக மாறியவை, மீண்டும் கற்களாகி விட்டன என்றார் ஒரு முதியவர், நாங்கள் இடிந்த கட்டிடங்களைப் பார்த்துக் கொண்டு நடந்தபோது.

பளையைப் பொறுத்தவரை தென்னை முக்கியமான வருவாய்க்குரிய பயிர்ச் செய்கையாக இருந்தது. ஆனால், இப்போது கறிக்குத் தேங்காய்க்கே பலரும் சிரமப்படுகிறார்கள். அங்கேயிருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த தென்னைகள் மொட்டையாக நிற்கின்றன. காவலரண்கள், பதுங்குகுழிகளுக்குப் பயன்படுத்தப்படுவதற்காகத் பல தென்னைகள் தறிக்கப்பட்டு விட்டன.

யுத்தத்தில் எல்லாமே யுத்தத்துக்கானவை என்று சொல்லப்படுவதுண்டு. அப்படியே இங்கேயிருந்த பனைகளும் தென்னைகளும் தறிக்கப்பட்டுவிட்டன. அல்லது எறிகணைகள் பட்டு அழிந்துவிட்டன.

“பார்க்கும் இடமெல்லாம் மொட்டைத் தென்னை… நந்தலாலா…’ என்று இதைப் பார்த்தால் இப்போது பாரதியார் துக்கத்தோடு பாடக்கூடும். அவர் சொன்னதைப்போல பத்துப் பன்னிரண்டு தென்னைகள் கூட இங்கே நல்லமாதிரி இருப்பது சிரமம்தான்.

பளைப் பிரதேச செயலர் பிரிவில் குறிப்பிடத்தக்க அளவு வயல் நிலம் உண்டு. இயக்கச்சி, சங்கத்தார் வயல், கோவில்வயல், கொற்றாண்டார் குளம் போன்ற இடங்களில். ஆனால், அங்கே யாரும் மீளக்குடியமர்த்தப்படவில்லை. அதனால் நெற்செய்கையும் இல்லை என்கிறது நாடு. அங்கே மிதிவெடிகள் விளைந்திருக்கலாம்.

தென்னைச் செய்கை ஆரம்பிக்கலாம். ஆனால், அது வருவாய் தருவதற்கு ஏறக்குறைய ஏழு ஆண்டுகள் ஆகும். என்றாலும் அதைச் செய்யத்தானே வேண்டும் என்கின்றார் ஒரு கிராமவாசி.

பளைப் பிரதேசத்தின் கிழக்கில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் முன்னர் ஆனையிறவு உப்பளத்தில் வேலைசெய்தவர்கள். இப்போது உப்பளம் இல்லை. வேலைகளும் இல்லை.

இயக்கச்சி, பளை ஆகிய இடங்களில் படையினரின் உணவு விடுதிகள் தாராளமாக இருக்கின்றன. இயக்கச்சியில் மட்டும் ஏறக்குறைய பத்து விடுதிகள் இருக்கின்றன. பெரிய படைத்தளம் இருக்கிறது. ஆனையிறவுப் படைத்தளத்தை இயக்கச்சிக்கு மாற்றியிருக்கிறார்கள்.

பளைப் பிரதேசத்தில் மிகுதியாக இருக்கும் பிரதேசங்களில் மக்களின் மீள் குடியேற்றத் துக்கு முயற்சித்துக் கொண்டிருப்பதாக பிரதேச செயலர் முகுந்தன் சொல்கிறார். கிளாலிப் பகுதிக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரதேச செயலர் முகுந்தனும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாரும் மக்களை அழைத்துச் சென்றிருந்தனர். ஆனாலும் இன்னும் அங்கே மீள்குடியேற்றம் நடைபெறவில்லை. அதற்கு அந்தப் பகுதியில் இருக்கும் ஆயிரக்கணக்கான மிதிவெடிகள் அகற்றப்படவேண்டும் என்று அரச சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பளைப் பிரதேச வீடமைப்புத் திட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பது பளைப் பிரதேசம் என்றும் அவர் கூறுகிறார். கிளிநொச்சி மாவட்டத்தில் வீடமைப்பு வேலைகளைச் செய்து வரும் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சொல்லும் காரணம் வேடிக்கையானது. வவுனியாவில் இருந்து செயற்படுவதால், தமக்கு பளைக்கு வந்து போவதற்கான செலவீனம் வசதிகளும் குறைவாக இருப்பதாகவும் எனவே, தம்மால் இந்தப் பிரதேசத்தில் வீடமைப்புப் பணிகளைச் செய்ய முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும் இந்தப் பிரச்சினையை தான் உரிய தரப்பினரின் கவனத்துக்குத் தெரியப்படுத்தியிருப்பதாகவும் பிரதேச செயலர் தெரிவித்தார்.

இதேவேளை பளை மத்திய கல்லூரியின் நிலையைப் பற்றி அதைக் காண்பித்தவாறு சொல்கின்றார் அதிபர் க.குணபாலசிங்கம். “இந்தக் கல்லூரி பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்திலிருக்கும் 13 பாடசாலைகளில் இப்பொழுது 6 பாடசாலைகள் மட்டும் இயங்குகின்றன. இந்தப் பதின்மூன்று பாடசாலைகளுக்கும் இந்த மத்தியகல்லூரியே தாய்ப் பாடசாலை. ஆனால், இந்தத் தாய்ப்பாடசாலையோ முழுதாக அழிந்து விட்டது. அதிபர் இருப்பதற்கே கதிரை, மேசை எதுவும் கிடையாது. பாருங்கள் எங்களின் நிலைமையை’ என்று.

இரண்டு கீற்றுக் கொட்டகைகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. மழை பெய்தால் அதற்குள் இருக்க முடியாது என்கின்றனர் அங்கிருக்கும் ஆசிரியர்கள். மரங்களுக்குக் கீழேதான் பெருமளவு வகுப்புகள் நடக்கின்றன.

மறுபடியும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சனங்கள் மெல்ல மெல்ல தங்களுடைய வீடுகளைத் திருத்திக் கொண்டிருக்கிறார்கள். எந்தப் பரிமளிப்புமில்லாமல் இருக்கும் இந்தப் பிரதேசத்தின் சிறிய மணல் ஒழுங்கைகளுக்குள்ளால், நடந்து செல்லும் சனங்கள் தங்களுக்கு மத்தியில் நீண்டு செல்லும் ஏ9 நெடுஞ்சாலையின் வழியே போய்வந்து கொண்டிருக்கும் வண்டி, வாகனங்களை வேடிக்கை பார்த்தவாறு செல்கிறார்கள்.

காடும் புதரும் மண்டியிருக்கும் இந்தப் பகுதியின் பல இடங்களிலும் மஞ்சள் நாடாக்களில் கண்ணிவெடி அபாயம் குறித்த அறிவிப்புகள் தாராளமாக இருக்கின்றன. வரலாற்றுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் ஒரு பூர்வீகப் பிரதேசம் இப்போது அகதிகளாலும் குடியேற முடியாதவர்களாலும் கண்ணிவெடிகளாலும் தவித்துக் கொண்டிருக்கிறது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.