தலிபான்கள் அட்டகாசத் தாக்குதல் பாகிஸ்தானில் எட்டு பேர் பலி

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வழியாக, ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா உட்பட மற்ற வெளிநாட்டு வீரர்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு சென்ற 50 வாகனங்கள் மீது தலிபான்கள் கண்மூடித்தனமாக சுட்டதில் எட்டு பேர் பலியாயினர்; ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானில், “நேட்டோ’ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு மற்றும் எரிபொருட்கள், பாகிஸ்தான் வழியாக கொண்டு செல்லப்படுகின்றன. நேற்று முன்தினம் இரவு, தலைநகர் இஸ்லாமாபாத் வழியாக 50 வாகனங்களில் தலிபான்கள் மீதான போர் நடத்தும் அமெரிக்கா மற்றும் வெளிநாட்டுப் படையினருக்கு தேவையான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.

தர்நோல் என்ற கிராமத்துக்கு அருகே டூவீலரில் ஆயுதங்களுடன் வந்த 10க்கும் அதிகமான தலிபான்கள், வெளிநாட்டினருக்கு பொருட்களை எடுத்துச் சென்ற வாகனங்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். இச்சம்பவத்தில் இந்த வாகனங்களின் டிரைவர்கள், கிளீனர்கள் உட்பட எட்டு பேர் பலியாயினர்; ஆறு பேர் படுகாயமடைந்தனர். பொருட்களை ஏற்றி வந்த வாகனங்களை தலிபான்கள் தீ வைத்து கொளுத்தினர்.

ஆப்கானிஸ்தானின் எல்லை அருகே உள்ள கைபர் பகுதியில் தான் தலிபான்களின் அட்டகாசம் அதிகமாக இருந்தது. தற்போது தலைநகரிலேயே இவர்கள் தாக்குதல் நடத்த துவங்கியுள்ளதால், இஸ்லாமாபாத்தின் பாதுகாப்பு நிலை கேள்விக் குறியாகி உள்ளது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.