நக்சலைட்களை ஒடுக்க அரசின் அனுமதிக்காக ராணுவம் காத்திருக்கிறது: ஏ.கே.அந்தோணி

நக்சலைட்களை எதிர்த்து போரிட ராணுவத்தை களத்தில் இறக்குவது பற்றி விவாதித்து விட்டோம். மத்திய அரசின் அனுமதிக்காக ராணுவமும், விமானப் படையும் காத்திருக்கிறது என்று ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி கூறினார்.


மேற்கு வங்காளம், சட்டீஸ்கர், ஜார்கண்ட், ஒரிசா போன்ற மாநிலங்களில் நக்சலைட்கள் வன்முறை அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் மேற்கு வங்கத்தில் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்த்ததில் 148 பேர் பலியான செய்தி கேட்டு நாடே அதிர்ச்சி அடைந்தது.

இதையடுத்து நக்சலைட்களை ஒடுக்க ராணுவத்தை களத்தில் இறக்குவது பற்றி பரிசீலிக்கப்பட்டது. இதன் சாதக, பாதகங்களை கணக்கிட்டு இருப்பதாக ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி ஏற்கவே கூறி உள்ளார்.

இந்நிலையில், லக்னோவில் உள்ள ராணுவ தளபதிகள் தலைமையகத்துக்கு நேற்று அந்தோணி சென்று பார்வையிட்டார். அங்கு ராணுவத்தினருக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்பை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தேச விரோத செயல்களில் ஈடுபடும் நக்சலைட்களுக்கு எதிராக ராணுவத்தை பயன்படுத்துவது பற்றி எனது அமைச்சகத்தில் விவாதித்து விட்டோம். மத்திய அரசு பிறப்பிக்கும் உத்தரவை செயல்படுத்த ராணுவமும் விமானப் படையும் காத்திருக்கிறது. இது மிக முக்கியமான விவகாரம். இதில் மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்.

நமது ராணுவம் ஒழுக்கத்துக்கு பெயர் போனது. எந்தக் காலத்திலும் இதை விட்டுக் கொடுக்க மாட்டோம். லெப்டினென்ட் ஜெனரல் நந்தா மீதான பாலியல் புகார் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடந்து வருகிறது. விசாரணை அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஏ.கே. அந்தோணி கூறினார்.

பேட்டியின் போது ராணுவ தலைமை தளபதி வி.கே. சிங் மற்றும் உயரதிகாரிகள் உடன் இருந்தனர்.

Source & Thanks : .newindianews

Leave a Reply

Your email address will not be published.