வங்கதேசத்தில் பயங்கரம்: அடுக்குமாடிகட்டிடங்களில் பயங்கர தீ-108 பேர் பலி; திருமண விழாவில் பங்கேற்றவர்கள் கருகினார்கள்

வங்கதேச தலைநகர் டாக்காவில் நசீர்பஜார் பகுதியில் நேற்றிரவு ஒரு திருமண விழா நடந்தது. 3 மாடி கட்டிடத்தின் மொட்டை மாடியில் பந்தல் அமைத்து திருமண விழா நடந்து கொண்டிருந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அந்த திருமண விருந்து விழாவில் பங்கேற்றிருந்தனர்.

கட்டிடத்தின் தரைத்தளம் பகுதியில் திருமண விருந்துக்கான உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டது. அப்போது அந்த கட்டித்தின் மிக அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.

அதில் இருந்து தீப்பொறிகள் சிதறி நாலாபுறமும் விழுந்தன. திருமண விருந்துக்காக தயாராகி வந்த சமையல் அறை பகுதியிலும் தீப்பொறி விழுந்தது. இதனால் தீ பிடித்தது.

கண் இமைக்கும் நேரத்தில் தீ பரவியது. கீழ் தளத்தில் ஒரு பேக்கரி, ஒரு ஆயில் சேமிப்பு கடை இருந்தது. அந்த கடைகளுக்கும் தீ பரவியதால் ஒட்டு மொத்த கட்டிடத்திலும் தீ சூழ்ந்து கொண்டது.

ரசாயன, பிளாஸ்டிக் பொருட்கள் வெடித்து சிதறின. படிக்கட்டுக்கள் வழியாக அடுத்தடுத்த மாடிக்கும் தீ பரவியது. இதற்கிடையே தீ பிடித்த கட்டிடத்தின் கீழ்த்தள கடைகள் மற்றும் வீடுகளில் இருந்த சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின. இதனால் சில நிமிடங்களிலேயே தீ கட்டுப்படுத்த முடியாதபடி எரிந்தது.

திருமண விழாவுக்காக வந்திருந்த நூற்றுக்கணக்கானவர்கள் 3-வது மாடி மேல் தளத்தில் சிக்கிக்கொண்டனர். மாடிப்படிகளில் தீ பிடித்திருந்ததால் அவர்களால் எங்கும் தப்பி ஓட இயலவில்லை. காப்பாற்றுங்கள் என்று அவர்கள் கூக்குரலிட்டு கதறினார்கள்.

தீ விபத்து தகவல் அறிந்ததும், டாக்கா நகரின் பல்வேறு இடங்களில் இருந்து தீயணைப்புப்படை வீரர்கள் பழைய டாக்காவில் உள்ள நஜீர்பஜார்பகுதிக்கு விரைந்தனர். தீ பிடித்த கட்டிடம் மிக, மிக குறுகலான சந்துக்குள் இருந்ததால், தீயணைப்புவண்டிகள் உள்ளே செல்ல முடிய வில்லை. இதனால் தீயில் சிக்கிக் கொண்டவர்களை மீட்க, தீயணைப்புப்படையினர் மிகவும் கடுமையாக போராடினார்கள்.

இதற்கிடையே 3 மாடி கட்டிடத்தில் பிடித்த தீ அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது. 7 வீடுகள் முழுமையாக தீ பிடித்து எரிந்தது. தீயணைப்பு படை வீரர்கள் குறுகலான சந்துக்களுக்குள் புகுந்து சிலரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது.

தீ பிடித்த கட்டிடங்கள் அனைத்தும் மிக, மிக பழமையான கட்டிடங்களாகும். மின் வயர் இணைப்புகள் அனைத்தும் 50 ஆண்டுகளுக்கு முந்தையதாகும். எனவே தீ மிக வேகமாக அடுத்தடுத்த கட்டிடங்களுக்குள் பரவி விட்டது.

இந்த கோர தீ விபத்தில் 108 பேர் பலியாகி விட்டனர். அவர்களில் பெரும் பாலானவர்கள் திருமண விழாவுக்கு வந்தவர்கள். பலியானவர்களில் 40 சதவீதம் பேரின் உடல் கரிக்கட்டையாக கருகி விட்டது.

தீ புகையில் சிக்கி ஏராளமானவர்கள் மயங்கி கிடந்தனர். தீ பிடித்ததில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்கள். அவர்கள் அனைவரும் டாக்கா நகர மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

திருமண விழாவுக்காக தன்னை அலங்கரித்துக் கொள்ள, மணப்பெண் அருகில் உள்ள ஒரு பியூட்டி பார்லருக்கு சென்றிருந்தார். இதனால் அவரும், அவரது தோழிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

இரவு நேரம் என்பதால் தீயை அணைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. சுமார்
3 1/2 மணி நேரத்துக்குப்பிறகே தீ முழுமையாக அணைக் கப்பட்டது. அதன் பிறகு மீட்புப் பணி தொடங்கியது.

3 மாடி கட்டிடத்தின் உள்ளே எல்லா அறைகளிலும் உடல்கள் கிடந்தன. இந்த கோர சம்பவம் வங்கதேச மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

Source & Thanks : .maalaimalar

Leave a Reply

Your email address will not be published.