1 ரூபாய் செலவு…கிடைத்ததோ ரூ.2,000 கோடி முதலீடு

சனந்த் (குஜராத்): ஒரே ஒரு ரூபாய்தான் செலவு செய்தேன்… குஜராத் மாநிலத்துக்கு ரூ. 2,000 கோடி முதலீட்டிலான நானோ கார் ஆலை வந்துள்ளது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

குஜராத் மாநிலம் சனந்த் நகரில் டாடா நிறுவனத்தின் நானோ கார் தயாரிப்புத் தொழிற்சாலை பணிகள் பூர்த்தியடைந்து முதலாவது கார் உற்பத்தியாகி, புதன்கிழமை வெளிவந்தது.

இதற்கான விழாவில் நிறுவனத் தலைவர் ரத்தன் டாடா, முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் மோடி மேலும் கூறியது:

மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் டாடாவின் நானோ கார் ஆலை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

அங்கிருந்து வேறு மாநிலம் செல்ல அந்நிறுவனம் முடிவு செய்தது. அப்போது நிறுவனத் தலைவருக்கு ஒரு ரூபாய் செலவில் செல்போன் மூலம் எஸ்எம்எஸ் ஒன்றை அனுப்பினேன். ‘குஜராத் உங்களை வரவேற்கிறது’ என்பதுதான் அது. இதன் மூலம் மாநிலத்துக்கு ரூ. 2,000 கோடி முதலீட்டிலான ஆலை வந்துள்ளது” என்றார்.

நிறுவனத் தலைவர் ரத்தன் டாடா கூறுகையில், “ரூ. 1 லட்சம் விலையில் கார் தயாரித்து அளிக்க வேண்டும் என்பது எனது நீண்ட கால கனவாகும்.
இதற்காக கம்யூனிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த மேற்கு வங்கத்தில் ஆலையைத் தொடங்க முடிவு செய்து 75 சதவீத பணிகள் பூர்த்தியடைந்தன. ஆனால் ஆலைக்கு தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அளித்துவந்த எதிர்ப்பு சமாளிக்க முடியாத அளவுக்குப் போனது.

இதனால் ஆலையை வேறு மாநிலத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது குஜராத் முதல்வரிடம் இருந்து வந்த அழைப்பு, இங்கு ஆலை அமைப்பதென தீர்மானிக்க உதவியது. நாங்கள் குஜராத் மாநிலத்தவர்கள். சொந்த மாநிலத்தை விட்டு வேறு மாநிலத்துக்கு சென்றது கசப்பான அனுபவத்தைத் தந்தது. தற்போது மீண்டும் சொந்த மாநிலத்துக்கு திரும்பிவிட்டோம்” என்றார்.

ரூ. 2,000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட இந்த ஆலை ஆண்டுக்கு 2.5 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. வரும் ஆண்டுகளில் உற்பத்தித் திறனை 5 லட்சம் வரை அதிகரிக்க முடியும்.

Source  &  Thanks :  thatstamil

Leave a Reply

Your email address will not be published.